“பாலும், தெளிதேனும்,
பாகும், பருப்பும்- இவை
நாலும் கலந்து உனக்கு
நான் தருவேன்-
கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத்
தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ்
மூன்றும் தா!”

என்ற ஒளவையாரின் பாடல்தான், கடவுளுக்கும் கவிஞருக்கும் இடையில்
ஏற்பட்ட மிகப்பழைய வர்த்தக ஒப்பந்த ஆவணமாக இருக்கவேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்: ஒளவையார் நான்கு பொருட்களைப்
பிள்ளையாருக்குக் கொடுப்பார். பதிலுக்கு, மூன்றே மூன்று பொருட்களை
அவர் ஒளவையாருக்குக் கொடுத்தால் போதும்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஜூம் நிகழ்வு ஒன்றில்
அறிஞர் அ.கி.வரதராசன் அவர்கள் பேசும்போது, இந்த ஒப்பந்தத்தின்படி
ஒளவையார் தரவேண்டியது நான்கு அல்ல, ஐந்து பொருட்கள் என்றார்!
வக்கீல்கள்தாம் ஒப்பந்தத்தைத் திரித்து வாதாடுவார்கள் என்றால், தமிழ்
அறிஞர்களுமா அத்தொழிலில் இறங்கவேண்டும் என்று திகைத்தேன். அந்த
ஐந்தாவது பொருள் என்னவாக இருக்கும் என்று வியப்புடன் பார்த்தேன்.
அ.கி.வ. அவர்களின் வாதம் இப்படி இருந்தது: “இவை நாலும் கலந்து உனக்கு
நான் தருவேன்” என்கிறாரே ஒளவையார், அந்த ‘நான்’ தான் அந்த ஐந்தாவது பொருள்”
என்றார் அவர்.அதாவது, தன்னுள்ளிருக்கும் ஆணவம் அல்லது தன்முனைப்பைப்
பிள்ளையாருக்குச் சமர்ப்பணம் செய்வதாகப் பொருள்.
தமிழறிஞர்கள் இம்மாதிரிச் சொந்தச் சரக்கை அவ்வப்போது
அவிழ்த்துவிடுவது வாடிக்கைதான் என்பதை நாம் அறிவோம். சில கம்ப
ராமாயணப் பாடல்களைத் தட்டிப் பார்த்து, ‘இது கம்பன் எழுதியது’, ‘இது
அவன் எழுதியதில்லை’ என்று முன்பொருகாலம் ஓர் தென்மாவட்ட அறிஞர்
கம்பீரமாக அறிவித்துக்கொண்டிருந்ததையும், அவர் வீட்டில் சூடான,
சுவையான தோசை சாப்பிட்டதற்குப் பிரதிபலனாக பிரபலமான வார இதழ்
ஒன்று அவருக்குப் பின்னணி இசைத்துக்கொண்டிருந்ததையும், யார்
மறந்திருக்க முடியும்?
ஆனால் அ.கி.வ. அவர்களின் வாதத்தை நான் ஏற்க முடியாமல் இருப்பதற்கு
அறம் சார்ந்த காரணம் ஒன்று உண்டு.
ஒளவையாரே, சாமான்ய விலையுள்ள பால், தேன், பாகு, பருப்பு ஆகிய
நான்கு பொருட்களைக் கொடுத்துப் பிள்ளையாரை ஏமாற்றிவிட்டு
அவரிடமிருந்து விலைமதிக்கவொண்ணாத முத்தமிழைப்
பெற்றுக்கொண்டுவிடுகிறார். அது போதாதென்று எதற்கும் பொறாத
ஒளவையாரின் ‘நானை’ ஐந்தாவதாக அவருக்குக் கொடுத்து மேலும் அவரை
ஏமாற்றவேண்டுமாம்! எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்!
பாவம், பிள்ளையார்! தம்பியிடம் மாம்பழத்தை இழந்த ஏமாற்றத்திலிருந்தே
இன்னும் மீளவில்லை, தமிழ் அறிஞர்களிடமும் இப்படி ஏமாறத்தான்வேண்டுமா?
