எக்ஸ்டென்ஷன்/சாந்தமூர்த்தி

அந்த விபத்து நடப்பதற்கு முந்தைய இரவு.

“பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.

“எக்ஸ்டென்ஷன்னா என்னங்க?”

“ஒரு டீச்சர் ரிட்டயராயிட்டா அடுத்த டீச்சர் அங்க வர்ற வரைக்கும் பசங்க படிப்பு வீணாய்டக் கூடாதில்லையா,அதுக்கு அவரையே அரைச் சம்பளம் குடுத்து எக்ஸாம் வரைக்கும் அரசு வச்சுக்கும். அதான் எக்ஸ்டென்ஷன்கிறது. தமிழ்ல பணி நீட்டிப்புன்னு சொல்லுவாங்க. புரியுதா?”

“புரியுதுங்க.அரசு குடுக்கிற இவரோட எக்ஸ்டென்ஷன நீங்க ஏன் நிறுத்துறீங்க, அதுதான் எனக்குப் புரியல.அது பாவமில்லியா?”

“காரணமில்லாம அதை செய்வேனா? ரெண்டு நாளக்கி முன்னால அவரு ஸ்கூலுக்கு விசிட் போயிருந்தேன்.அவரு கிளாஸ் ஸ்டூடன்ஸ் படிப்புல ரொம்ப மோசமா இருந்தாங்க.இவரு அவங்களுக்கு சரியா பாடம் நடத்தல, பயிற்சி குடுக்கல.அந்த பசங்க பாவமில்லையா? உன்னோட பசங்க அப்புடி வீணாப் போணா நீ என்ன செய்வே?”

“எனக்குதான் அந்த கொடுப்புனை இல்லியே.அது போகட்டும்.பென்ஷன் வர்றதுனால பணப் பிரச்னை இல்ல.ஆனா வயசான காலத்ல அவரு மனசுக்கு கஷ்டம்.ரிட்டயராகிறப்ப எல்லாரும் அவரை இந்திரன் சந்திரன்னு பாராட்டுவாங்கன்னு கனவுல இருந்திருப்பார்.இப்ப கடைசி நேரத்துல இது தண்டனைதானே? ரிட்டயராகப் போற நேரத்துல நமக்கு ஏங்க கெட்ட பேரு? உங்க ரிடயர்மென்டுக்கும் 25 நாள்தானே இருக்கு?”

“இங்க பார்.கெட்ட பேரப் பத்தி எனக்குக் கவலையில்ல.நான் செஞ்சது நியாயமா,இல்லையா? அதான் எனக்கு முக்கியம்.நீ கும்புடுற கிருஷ்ணன் கீதையில சொன்னது தான்.’கடமையைச் செய்.பலன எதிர்பாராதே’ அததான் நான் செஞ்சேன்”

“ஒண்ணும் செய்ய முடியாதுங்களா?”

“மேலதிகாரி சொன்னால சமயத்துல நான் கேக்க மாட்டேன்.நீ சொல்லி நான் கேப்பேன்னு நெனைக்கிறியா?எக்ஸ்டென்ஷன்கிறது ஆசிரியர்களோட உரிமையில்ல. அது மாணவர்களுக்கு நன்மைங்கிறதுனால கிடைக்கிற ஒரு வாய்ப்பு.இது ஆசிரியரோட நன்மைக்காக இல்லை,மாணவர்களோட நன்மைக்காக.எதுவுமே மாணவர்களுக்கு பயனில்லைன்னா அது வேஸ்ட்.அத எல்லாருக்கும் புரிய வக்யனும்னு நான் நெனச்சேன்.அது நடந்துடுச்சு.அது போதும்.ஆஃபீஸ்லஅவரோட எக்ஸ்டென்ஷன ரத்து பண்ண வேணான்னு சொல்லிட்டுதான் கெளம்புனேன். அதுனால கவலைப்படுறதை நெறுத்திட்டு வேற வேல இருந்தாப் பாக்கலாம்.இப்ப நிம்மதியா?”

சங்கரி எதுவும் பேசவில்லை.

“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.நான் வீட்ல இல்லாதப்ப யாராவது என்னைப் பாக்க வந்தா ஆஃபீஸுக்கு அனுப்சுடு.எதுவும் பேச வேணாம்.ஐயோ பாவம்கிற பிஸ்னஸ் எல்லாம் வேணாம்.இன்னும் 25 நாள் தானேன்னு நெனைக்க வேணாம். நாளக்கி ஃப்ரீ சைக்கிள் குடுக்கிற விழாக்கள் இருக்கு.எட்டு மணிக்கு கிளம்பனும்”என்றவாறே சிதம்பரம் புத்தகத்தைத் திறந்தார்.இன்னும் 25 நாட்களுக்குப் பிறகு ரிட்டயரான பிறகு நிறைய படிக்கலாம் என்று நினைத்தவாறே.

மறுநாள் ஐந்து பள்ளிகளில் விழாக்கள்.அமைச்சரால் வர இயலவில்லை.சட்ட மன்ற உறுப்பினர் வந்தார்.அவர் விரைந்து முடித்து விட்டு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தார்.தன்னுடைய காரில் பறந்து கொண்டிருந்தார்.சிதம்பரம் தன்னுடைய ஜீப்பில் பின் தொடர்ந்தார்.

முதல் பள்ளியில் விழாவை முடித்து விட்டு அடுத்த பள்ளியை நோக்கி விரைந்து கொண்டிருந்த போது தான் அந்த விபத்து ஏற்பட்டது.

அந்த அத்துவான வெளியில் ஓரிடத்தில் சாலை சில அடிகள் கீழிறங்கி பின் சரேலென்று மேலெழுந்தது.எம்.எல்.ஏ. கார் அதை எளிதில் கடந்து விட்டது. ஆனால் ஜீப் தடுமாறியது.டிரைவர் பதற்றத்தில் பிரேக்கை அழுத்த ஜீப் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர வாய்க்கால் பள்ளத்தை நோக்கி விரைந்து, ஒரு குட்டிக் கரணம் போட்டு தலை கீழாய் நின்றது.எல்லாம் ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்து விட்டன.

மெல்ல ஜீப்பிலிருந்து தவழ்ந்து ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். ஜீப்புக்கு கடுமையான சேதம்.சிதம்பரம்,உதவியாளர்,டிரைவர் மூவரும் முதலில் அவர்களுக்கு சேதம் எப்படி என்று பார்த்துக் கொண்டார்கள்.மூன்று பேருக்குமே நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.யாருக்கும் பெரிய காயமில்லை.கண்ணுக்கு எட்டிய வரை முன்னால் போன காரைக் காணோம்.செல் இருந்த்து அதுவும் உயிருடன்.சிதம்பரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் சொன்னார்.

கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.அவரால் தெளிவாக சிந்திக்கவே முடியவேயில்லை.அந்த நிலையிலும் சிதம்பரம் புத்திசாலித் தனமாக ஒன்று செய்தார்.எப்படியும் சிறிது நேரத்தில் அவர் மனைவிக்கு செய்தி கிடைக்கத் தான் போகிறது.யாரோ தரப் போகும் அதிர்ச்சியை விட அவரே போன் செய்து விட்டால் அதிர்ச்சி குறையுமே! உடனே சங்கரிக்கு போன் செய்து தகவலையும்,தைரியத்தையும் கொடுத்தார்.இதற்குள் எம்.எல்.ஏ.வந்து விட்டார்.

ஜீப்பை அப்படியே விட்டு விட்டு எல்லோரும் அவருடைய காரிலேயே கிளம்பினார்கள்.வழியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து கொண்டனர்.முதன்மைக் கல்வி அலுவலர் சிதம்பரம் அதிர்ச்சியால் ஏற்பட்ட அரை மயக்க நிலையிலேயே இருந்தார்.விழாக்களை ரத்து செய்து விடலாமே என்று யாரோ யோசனை சொன்னார்கள்.”வேண்டாம்.விழாக்கள ரத்து செய்ய வேண்டாம்.ஆயிரக் கணக்கான மாணவர்கள் கூடியிருக்கிற விழாக்கள மறுபடியும் எடுத்து நடத்துறது வீண் சிரமம்”என்று சி.இ.ஓ சிதம்பரம் மறுத்து விட்டார்.”அப்ப நீங்க வீட்டுக்குப் போயி ஓய்வு எடுங்க சார்”என்றனர்.”பரவால்ல.அடுத்த ஸ்கூலுக்கு கெளம்பலாம்”என்று அவர் பிடிவாதமாக சொன்னதும் கிளம்பினார்கள்.

பிறகு நடந்ததை சிதம்பரத்தால் அறைகுறையாகவே நினைவு கூற முடிந்தது.அவர்கள் நான்கு பள்ளிகளிலும் விழாக்களில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.விழாக்களில் சிதம்பரமும் பேசினார்.நடந்த விபத்தைப் பற்றி யாருக்குமே தெரியாது.நான்காவது விழாவில் இருக்கும் போது தான் எப்படியோ தகவல் தெரிந்து முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து வந்தார்கள்.
சிதம்பரம் ஒரு நல்ல டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டார். அதிர்ச்சியும்,சில சிறிய காயங்களும்தான்.

இதற்கிடையே அடுத்த நாள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடை பெற்றது.எப்போதும் கூட்டம் தொடங்கும் போது கிட்டத்தட்ட எல்லோரும் வந்திருந்தார்கள்.ஏனென்றால் சிதம்பரம் எப்போதும் சரியாகப் பத்து மணிக்கு கூட்டத்தை தாமதமின்றி தொடங்கி விடுவார். சிதம்பரம் நேர விஷயத்தில் நெருப்பானவர். தாமதம் கூடாது என்பதற்கு அவர் சொல்லும் காரணம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.”கூட்டம் தொடங்க பத்து நிமிடம் தாமதமானால் வீணாவது வெறும் பத்து நிமிடமல்ல;400 பேரின் பத்து நிமிடம்.அதாவது 4000 நிமிடங்கள்”என்பார்.

மேலும் தொடக்கத்தில் அவர் சுவாரஸ்யமாக ஏதாவது சொல்வார்.எனவே யாரும் தாமதமாக வர விரும்புவதில்லை.இது அவர்களுக்குப் பழகி விட்டிருந்தது.ஒரு நாளிலேயே ஜீப் விபத்து பற்றி பலருக்குத் தெரிந்திருந்தது.

கூட்டம் வழக்கம் போல் சரியாகப் பத்து மணிக்குத் தொடங்கியது.சி.இ.ஓ. சிதம்பரம் உரையைத் தொடங்கினார்.”எனக்கு எக்ஸ்டென்ஷன் கிடைச்சிருக்கு…..” சிறு இடைவெளிக்குப் பின் “….. கடவுள் கொடுத்திருக்கார்….. எவ்வளவு காலத்துக்குன்னு தெரியலை….. “ சில விநாடிகள் மௌனத்துக்குப் பின் எழுந்த கை தட்டல் பல விநாடிகள் தொடர்ந்தது. @@@@@@@

5 Comments on “எக்ஸ்டென்ஷன்/சாந்தமூர்த்தி”

Comments are closed.