
‘மது-மாது -‘ என்று தலைப்பு தந்து மாது கொடுத்த அந்தப் படத்துக்கு பரிசு கொடுத்து “மனமொத்த தம்பதியர்” என்று வந்திருந்த சான்றிதழை மேஜை மேல் வைத்து, படத்தை நிமிர்த்தி வைத்திருந்தான் மாது என்கிற மாதவன்.
அதைப் பார்த்ததும் அடுத்தது காட்டும் பளிங்கு போல மனம் கடுத்ததைக் காட்டிய உதடும் கோணியது மது என்கிற மதுமிதாவுக்கு.
அவன் சொன்ன வசனங்களுக்கும், எழுதிய கவிதைக்கும், எடுத்த இந்தப் புகைப்படத்திற்கும் அதற்கு அவன் கொடுத்த விளக்கத்துக்கும் தான் இந்தப் பரிசு.
அதை இவளுக்கும் காட்டவே இப்படி மேஜைமேல் வைத்திருக்கிறான் மாது. மீசையை எடுத்து விட்டு, இருவர் முகத்தையும் படமெடுத்து போட்டோஷாப்பில் பாதிப் பாதியாய் சேர்த்து ‘மாதொருபாகன். மாதுவுக்கு வலப்பக்கம் இடம் கொடுத்த மது’ என்று எழுதியிருந்தான்.
என்ன ஒரு போலித்தனம் என்று மனதில் தோன்றியது மதுமிதாவுக்கு.
ஒரே வீட்டில் இருந்தாலும் ஆறு மாதங்களாக ஒட்டாமல் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள்.
ஏதோ ஒரு கொடும் சந்தர்ப்பத்தில், உறவு என்னும் கண்ணாடிப் பாத்திரம் விழுந்து உடைந்து மனதில் ஆறாத காயம் ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் ஆறும் சமயம் நெகிழும் கணங்களை இறுக்கமாக்குவது போல் அவ்வப்போது சில வார்த்தைக் கத்திகள் அதைக் கீறி பச்சை ரணமாகவே இவ்வளவு காலம் வைத்திருந்தன.
இந்தப் போட்டியில் பங்குபெற்ற போது அவளைத் தோளணைத்து போட்டியாளர்களிடம் அவன் பேசிய போது அந்தத் தோளணைப்பில் ஒரு புதிய நெருக்கத்தை உணர்ந்திருந்தாள் மது. அவளுக்கும் மனதுக்குள் ஒரு நெகிழ்வு ஏற்பட்டிருந்ததுதான். காதலித்த, மற்றும் மணமான நாட்களின் ஆரம்பகால நினைவுகள் அவளுக்குள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கின என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள்வில்லை.
திடீரென தன் தோளில் மாதவனின் கை படர்வதை கதகதப்பாய் உணர்ந்தாள். தோளணைத்த கைகள் முதுகை வளைத்து இடையை இறுக்கிப் பிடித்தன.
“போதும் மது… என்னாலும் என் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும்.. நம்பு.. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன்.. என்னால் உன்னை விட்டு இருக்க முடியாது மது… ஒரே வீட்டில் இருந்துகொண்டு தள்ளித்தள்ளி… ” உணர்ச்சியில் குரல் நெகிழ அவள் காதோரக் கூந்தலை மென்மையாக கைகளால் ஒதுக்கி நீவியபடி காதில் கிசுகிசுத்தான் மாது.
மனமும் உடலும் ஒருசேர நெகிழ, திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள் மது. “என்னாச்சு எனக்கு” என்று அவளுக்குள்ளேயே வியப்பான முறுவலுடன் கேள்வி வந்தது.
“என் மேலயும் தப்பு இருக்கு… நான் மாத்திக்கறேன்.. நீ மாறவேண்டாம்.. அப்படியே இரு.. அதெல்லாம் சேர்ந்துதான் நான் உன்னை லவ் பண்ணினேன்.. “
“வேண்டாம்.. நீயும் நீயாகவே இரு” மாதவன் குரலில் காதல் வழிந்தது.

நீ நீயாகவே இரு//
இப்புரிதல் வந்துவிட்டால் வாழ்க்கை இனிது. நல்லா எழுதிருக்கீங்க ஶ்ரீராம்
கீதா
நன்றி கீதா.