
கவ்வையும் கடும்புனல் ஒலியும் காப்பவர்
செவ்வனூ றாயிரம் சிலைக்கும் பம்பையும்
எவ்வெலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு
பவ்வம்நின்று இயம்புவ தொத்த என்பவே
1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)
பழிச் சொல் என்றும் – கவ்வையற்ற நடைபயில(தாயுமானவர் சுவாமி பாடல் சிற்சுகோ.8)
துன்பம் – கவ்வை யொழிந் துயர்ந்தனன் (கம்பராமாயணம் திருவவ.66)
கவலை – கவ்வையாற் கலங்கு மனம் (திருக்காளத்தி புராணம் 18, 27)
காரியம் – இவணீசேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பராமாயணம்.திருவ்வ.63)
2) கார் – கருமை, கரியது, கார்ப்பருவம் – ஆவணி, புரட்டாசி மாதங்கள்
3) பவ்வம் – பருவ காலம் – நால்வகைப் பவ்வம்- எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக.508-வது பாடல்)
கடல் என்கிற பொருளில் 42-ம் பாடலில்.
இப்போது பாடலுக்கு வருவோம்.
மடையினின்று தப்பி, மீறி வழிந்து வருகின்ற நீரினைத் தடுத்து நிறுத்துகின்றனர் உழவர்கள். அப்படி வழிந்து பாயும் நீரின் ஒலி, இருபுறமான கரையை அரித்து விடாதிருக்கும் வெள்ளத்தைத் தடுத்துப் பிரிக்கும் உழவர் பெருமக்கள் எழுப்பும் கூச்சல், இவை போக பற்பல திசைகளிலிருந்தும் வரும் பறை முழக்கங்கள், பம்பையொலிகள் இவை எல்லாமும் ஒன்று கூடிச் சேர்ந்து ஒலிப்பதானது கடல் எழுப்பும் முழக்கத்தையும், காற்றின் பேரிரிச்சலையும் ஒத்திருந்தது என்பதே இப்பாடலில் நாம் காணும் விளக்கம்.
இயற்கை வர்ணனையின் மூலம் நாட்டின் வளத்தையும், செழிப்பையும், மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பான செயல்பாடுகளையும் நான்கு வரிப் பாடல்களில் அடுத்தடுத்து வியப்புக் கொள்ளும் வகையில் சொல்லிச் செல்கிறார் திருத்தக்கத்தேவர் என்னும் தவ முனிவர்.
