கோழிக்குஞ்சுகள்/நாகேந்திர பாரதி

உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
தவழ்ந்து வந்த நாட்கள்

இரவுக்குள்
உன் சிறகுக்குள்
நாங்கள் மூக்கை மட்டும் நீட்டி
முழித்து முழித்துத் தூங்குவதை
நீ தூங்காமல்
பார்த்து ரசிப்பாய்

நீ கெக்கெக்கே என்றால்
உணவுண்ண அழைப்பு
நீ ‘கேகேகே ‘ என்றால்
பகையென்ற எச்சரிக்கை

உன் கால்களின்
வேகக் கிண்டலில்
எங்கள் விருந்து
எழும்பி வரும்
நாங்கள் பிட்டம் ஆட்டி
ஓடி வருவதைப்
பெருமையுடன் பார்ப்பாய்

நாங்களும்
எங்கள் பிஞ்சுக் கால்களால்
‘விறுவிறு’ வென்றால்
விருந்து மறைந்து போகும்
நீ கொத்திக் கொடுப்பாய்
நாங்கள் கத்திச் சிரிப்போம்

அந்தக் கழுகின் நிழலுக்கோ
உன் இறக்கை விரியும்
கால்கள் எழும்பும்
கழுத்து உயரும்
உன் பார்வையின் கூர்மையில்
அந்தக் கழுகே பறந்தோடும்

இப்படி எங்களைப்
பொத்திப் பொத்தி வளர்த்தவளே
அது எப்படி
நாங்கள் வளர்ந்த பின்னே
எங்களைக் கொத்தி கொத்தி
விரட்டுகிறாய்

நாங்கள் தனியாக வாழ்ந்து பார்க்க
எங்களைத் தள்ளி வைக்கிறாயா
தாங்கவில்லை அம்மா
உன் இறகு மடிக்கு
இரவெல்லாம்
ஏங்குகிறோம்
————————————

2 Comments on “கோழிக்குஞ்சுகள்/நாகேந்திர பாரதி”

Comments are closed.