இன்னொரு புத்தன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )

களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..

சட்டென்று
முன்தோற்றினான்
ஒரு ஓட்டாண்டி
கையில் சங்குடன்

என்னைப்பார்த்து
கதையொன்றும்
கவிதையொன்றும் கொடு
என்று ஊதினான்

கையில் கிடைத்த
காகிதத்தில்
கதையொன்றும்
கவிதையொன்றும் கொடுத்தேன்

வாங்கிப்படித்துவிட்டு
உருயில்லை
உயிரில்லை
பிழையிருக்கு என்றான் …

பொங்கி வந்த சினத்தால்
பிடுங்கி எறிந்தேன்
அவன் சங்கை

உருண்டோடிய சங்கு
கல்தட்டி கவிழ்ந்து
விரிசல் விட்டுநின்றது …

அதை கையில் ஏந்தி வந்தவன்
இது என்ன?? என்று கேட்டான் ..

சங்கு என்றேன் ….
ஊது என்றான்
ஓசை வரவில்லை ….

உருதான் இருக்கிறேதே
ஓசை எங்கே?? … என்றான்

விரிசல் விட்ட
சங்குக்கு உயிர் போயிட்டு என்றேன்

உயிரில்லை என்றால்
ஓசை வராதா ?? என்றான்

எங்கோ பிழையிருக்கிறதே
என்றேன் …

விடை கிடைத்ததா உனக்கு ?? என்றான்
அந்த விவகார ஆண்டி …

“ஆமாம்” என்றுசொல்லும்முன்
ஆகாயத்தில் மறைந்து போனான்
அந்த பொல்லாத ஆண்டி ….

அந்த சங்கு மட்டும்
சாஸ்வதமாய் இன்றும் என் பூஜையறையில்
புத்தனுக்கு பக்கத்தில்
இன்னொருபுத்தனாய் …..எனக்கொரு போதிமரமாய் …