தமிழில் : க. மோகனரங்கன்

பார்ப்பவர்,
உற்று நோக்குபவர்,
மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,
விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,
அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,
குறிப்பெடுப்பவர்,
சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்
பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,
முதல் முறை படிப்பவர் அல்லது மீண்டும் படிப்பவர்,
மேலோட்டமாகப் புரட்டிப்பார்ப்பவர், வேகமாக வாசிப்பவர்,
ஆங்கில இலக்கிய மாணவர், பயணத்திற்குத் தயாரான பெண், சோகமான பையன்,
கண்ணுக்குத் தெரியாத துணை, திருடன், அறிமுகமில்லாதவர், முற்றிலும் அந்நியர் –
நீங்கள் ஒரு குழந்தை வண்டியுடனோ அல்லது கழுத்துக் கயிற்றால் கட்டப்பட்ட நாயுடனோ
நிழல் தரும் மரங்களின் கீழ்
கடந்து செல்கிறீர்களா என்று பார்க்க ஜன்னலை நோக்கி ஓடும் நபர்,
அது நான்தான்.
உங்களுடைய தெரியாத எண்ணை நினைவு படுத்திக்கொண்டு தொலைபேசியை எடுக்கிறேன்,
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்
ஒரு ரயில் நிலையத்தின் இருக்கையில் தனியாகவா அல்லது
புத்தகம் நழுவித் தரையில் விழ
உறங்கிவிட்டீர்களா,
என்று யோசித்தவாறே
உலக வரைபடத்தின் பக்கத்தில்
நான் நிற்கிறேன்.
