முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கனவு கண்டேன் தோழி

இப்போதெல்லாம் அடிக்கடி இந்தக் கனவு வருகிறது அரவிந்த்திற்கு.என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை.
மரத்திற்கருகில் ஒரு புறம் விலங்கு மற்றொரு புறம் பறவை, மரத்தின் கிளையில் ஒரு அழகிய பெண்முகம்!
முப்பது வயதை நெருங்கும் கல்யாணமாகாத, அப்பாவை இழந்த அவனுக்கு அம்மாதான் எல்லாம்.
அந்தக் கிராமத்திற்குப் பணிஇட மாறுதல் அடைந்து வந்த அவனுக்கு, அம்மாவைத் தனது குவாட்டர்ஸில் தனியாக விட்டு விட்டு வேலைக்குச் செல்வது பயமாக இருந்தது.அடிக்கடி வேலை நேரங்களில், அலைபேசியில் அழைத்து விசாரிப்பான்.
அம்மா ஜானகி அன்று ஃபோனில் அழைத்தும், அவன் மேலதிகாரியோடு முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் அவன் போனை எடுக்கவேயில்லை. அதன் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த வேலைகள்.
எல்லாவற்றையும் முடித்து அலைபேசியைப் பார்த்தால் பதினைந்து மிஸ்ஸூட் கால்ஸ் அம்மாவிடமிருந்து.
திருப்பி இவன் அழைத்தால் அம்மா எடுக்கவில்லை. பதறிப் போய்த் திரும்பித் திரும்பி இவன் போனில் அழைக்க, முதலில் எடுக்கப் படாமல்,சற்று நேரம் கழித்து அம்மா ஃபோனிலிருந்து, அழைப்பு வர எடுத்தால் மறுமுனையில் குயில் கூவியது.
ஒரு இனிய பெண் குரல் , அவன் அம்மா ரோட்டில் கடைக்குச் சென்றபோது மயங்கிக் கிடந்ததாகவும், தான் அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சென்று காண்பித்துச் சிகிச்சை செய்ததாகவும் , தற்போது அம்மா நலமாக உள்ளதாகவும், சாதாரண மயக்கம் தான், பயப்பட எதுவுமில்லை என்று டாக்டர் கூறியதையும் தெரிவித்தது.
ஆஸ்பத்திரியின் பெயரை அறிந்த அவன், உடனே விரைய, அம்மா படுக்கையில் படுத்திருக்க, அருகில் அமர்ந்திருந்த அந்த அழகுப் பெண் , இவனைக் கண்டதும் முகம் சிவந்ததன் காரணம் புரியவில்லை.
சமையலில், அவசரத் தேவை எதற்காகவோ கடைக்குச் சென்ற அம்மா, காலையில் சாப்பிடாததால் மயங்கியிருக்கிறாள்.காப்பாற்றிய அவளுக்குக் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்தான்.
அவள் விடைபெற்றதும், மனித நேயம் மிக்க அவள்தான் தனக்கு மருமகள் என்றும், தான் அவள் பெற்றோருடன் , அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்,பேசி முடித்தாகி விட்டதென்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை அவளை முறையாகப் பெண் கேட்கச் செல்லலாம் என்றும் கூறிய அம்மா, அந்தப் பெண் ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி என்றும் தெரிவித்தாள்.
அரவிந்த்திற்கு, தனக்கு அடிக்கடி வரும் கனவின் காரணம் இப்போது புரிந்தது.

One Comment on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கனவு கண்டேன் தோழி”

  1. சிந்திக்க வைக்கும் சிறுகதை. கடைசி வாக்கியத்தை எடுத்து விட்டால், படிப்பவர்கள் சிந்தித்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

Comments are closed.