அர்ஜுனன்/காதலன் வரவு

மரக்கிளையில் சாய்ந்து அவள் கண்களை மூடி நின்றாள்.
பொருள் ஈட்ட சென்ற தலைவனைப் பிரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அவன் வராத ஏக்கம் அவளது நெஞ்சில் கனலாய் பூத்தது.
அப்போது அவள் கூந்தலில் ஒரு பச்சைநிற வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது.
அது தலைவன் வருகையை அறிவிப்பதாகவே அவள் நினைத்தாள்.
வண்ணத்துப் பூச்சி வருகிறது என்றால், மழைக்காலம் வரப் போகிறது என்றுதானே பொருள்?
‘மழைக் காலத்தில் திரும்பி விடுவேன்’ என்று சொல்லித்தானே சென்றார்?
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் மெதுவாக அசைந்த ஒவ்வொரு நொடியும், “நான் வருகிறேன், நான் வருகிறேன்” என்ற தலைவன் சொல்வதுபோல் இருந்தது.
அவள் விரல்களால் அதைத் தொட்டாள். அது அஞ்சவில்லை. ‘அழுத்தம் இல்லாதவரை எப்போதும் சுகமே’ என்று அது உணர்த்துவதாக தோன்றியது.
தன் மன அழுத்தத்தை உதறி எழுந்தாள்.
அவளது மூச்சுக்காற்றில் வெப்பம் குறைந்தமையால், உலர்ந்திருந்த கிளைகளில் மீண்டும் இலை துளிர்க்கத் துவங்கியது.

நாபா.மீரா/சித்திரம் பேசுதே – விருட்சம் நாளிதழ்

One Comment on “அர்ஜுனன்/காதலன் வரவு”

Comments are closed.