
அதென்னவோ KK க்கு எப்போதும் அடுத்த பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகிப் போனதை நினைத்து மருகினாள் ரியா.
ஒவ்வொரு முறையும் அவன் சொல்லும் முகங்களை தன் முகத்தோடு ஒட்ட வைக்க முயல்வாள்.
அதற்குள் அவன் அடுத்த முகத்தைக் கொண்டு வந்து விடுவான்.
எப்போதும் கழுத்தில் ஒரு புதிய முகத்தை கழுத்தில் பொருத்திக் கொள்ள கையில் அதற்கான ஒப்பனைப் பூச்சுடன் தயாராகவே இருப்பாள் ரியா.
முகங்கள் குணத்தால் அமைகின்றன.
எப்படி அவனை திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் அன்றாடம் சோதனை.
எவ்வளவு மாற முடியும்? நான் நானா, வேறு யாராவதா? எனக்கென்று ஒரு முகம் இருக்கிறதா? வேறு யார் யார் முகங்களோதான் என் முகமாக இருக்கிறதா?
நாளும் ஒரு பெயரைச் சொல்லி அவள் போல் வருமா, அவள் குணம் உனக்குத் தெரியுமா என்று கேட்கும் போதெல்லாம் இந்த உணர்வு அவளுக்குள் இருக்கும்.
அவனுடைய முதல் மனைவி கூட அதனால்தான் அவனை விட்டுப் பிரிந்தாளோ என்னவோ…
அப்படியான கற்பனையுடன் ஒரு நாள் அவள் இருந்த போது கையில் வந்து அமர்ந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி.
‘குறுகிய வாழ்க்கை வாழ்ந்தாலும் வண்ணமயமாக, சுதந்திரமாக பறந்து திரிந்து வாழ்கிறேன் பார்’ என்று சொல்வது போல இருந்தது.
நிம்மதியற்ற தன் நீண்ட நாள் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தாள்.
கூட்டுப்புழு கூட வண்ணமய வாழ்க்கைக்கு மாறுகிறது.. நான் மட்டும் ஏன்…?
மாற்றிக் கொண்ட பல முகங்களில் தன் சுயத்தைத் தேடத் தொடங்கினாள் ரியா.

நல்ல உணர்வுபூர்வமான மனம் சம்பந்தப்பட்ட சுவத்தை.இழந்த பெரும்பான்மை பெண்களின் உணர்வை ரியாவின் மூலம் சொல்லும் அழகான கதை , ஶ்ரீராம்
கீதா