ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள்

  1. பதுமைகள்

என்னை நான்
அப்படி நினைத்துக் கொண்டேன்
என் இரு கண்களும் கூட
என்னை ஏமாற்றிவிட்டன
ஏதோவொரு விதத்தில்
துயரம் என்னை வந்தடைந்தது
இப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்
கழிந்தது
பிறகு ஒரு மழைநாளில்
சிலுசிலுத்த கிளைகளினூடே
ஒரு காகம் சென்று மறைந்தது
மழையை பிரதியெடுத்த
காகத்தின் பாதங்கள்
பழுப்பேறி இருந்தன
இதுவரை நான் பார்த்த
காகத்தின் பிம்பங்களோடு
அதனை ஒப்பிட்டுப் பார்த்தேன்
அப்போது என்னுள்
படர்ந்த சிறுதுளி
கடலை ஒத்திருந்தது.

  1. ஆதியில் இருந்தது

அந்த ஒலி
என்னை ஏதோ செய்தது
முன்பு ஒருமுறை அந்த ஒலியை
நான் கேட்டிருக்கிறேன்
அது எப்போது என
ஆராய்ந்து பார்க்க முயற்சிக்கிறது
என் மனம்
ஆதியில் அது மட்டுமே இருந்தது
அதை நீங்களும் கேட்டிருக்கலாம்
பிறகு என்னைப் போல்
தவறவிட்டிருக்கலாம்
ஒரு மின்னல் வெட்டி
மறைவது போலத்தான்
ஒரு ஊடுகதிர்
என்னுள் பாய்ந்து
பரத்தில் கலக்கின்றது
பிறகு நான் எப்போதும்
தேவைப்பட மாட்டேன்
ஒரு சிறு விதையில்
பிரம்மத்தின் ஆதிஅந்தம்
மறைந்திருப்பதைப் போல…

  1. எல்லோருக்குமாக

எனது கண்ணீர்
இந்த தேவாலயத்தை நிரப்பட்டும்
உனது முதுகில்
சிலுவையின் தடம்
தோள்களில் கசையடி காயங்கள்
என்றாலும் ஆவிக்குரியது
என்றும் ஆவிக்குரியதுதான்
உனது இரத்தத்தால்
புனிதமடைந்தது மண்
உனது கேள்விகளுக்கு
பதில்களைத் தேடிக் கொண்டிருப்பவன்
பாக்கியவான்
மண்ணோடு சம்பந்தப்பட்ட
உடல் மறைந்துவிடும்
பரிசுத்த ஆவியோடு
சம்பந்தப்பட்ட ஆன்மாவோ
ஜீவித்திருக்கும்
எதனோடும் சம்பந்தப்படாது
விலகியிருப்பதும்
ஒருவகையில் மரணம்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன