- பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚
அண்ணல் தேசபிதாவே
அகிம்சை சத்தியம்
புன்னகையுடன் கடைபிடித்து
உடல் வருத்தி கண்ணீர் விட்டு
வாங்கித் தந்த சுதந்திரம்
விழலுக்கு இறைத்த நீராயின !
அப்பாவி மக்களின்
அன்றாட வாழ்க்கையே
வன்முறை வெறியாட்டத்தில்
குண்டு முழக்கத்தின் நடுவே
குருதியில் மிதக்கிறது !
துப்பாக்கிக் குண்டில்
நீ மட்டும் மடியவில்லை
அகிம்சை சத்தியம்
மனிதநேயம் எல்லாம்
மடிந்து கொண்டு வருகிறது!
சுதந்திர இந்தியாவில்
பட்டாம்பூச்சிகள் போல்
மக்கள் சுதந்திரமாக
பறக்கலாம் நீ நினைத்தாய்!
வெளிச்சம் என்று நினைத்து
தீயில் விழுந்து நாங்கள்
வெந்து கொண்டு இருக்கிறோம் !
சுதந்திர ஆன்மீக வெளிச்சம்
எங்களுக்கு கிடைப்பதற்கு
எப்போது இங்கு வருவாய்?
மீண்டும் நீ வந்தால்
மனிதநேயம் உலகில்
மீண்டும் துளிர் விடும்
மகாத்மாவே மீண்டும் வா!
