பெஷாரா
க தைக்கும் கதை….
அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.
சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் தோன்றியது.
நிதானமாக எழுந்து ஸ்விட்ச் ஆன் செய்து விசிறி சுழல ஆரம்பித்து விட்டதை உறுதி செய்து கொண்டு மீண்டும் படுக்கையில் வந்து படுத்தான்.
தாகம் எடுப்பது போல் லேசாக தொண்டை வறண்டதும் எழுந்து அருகில் மேஜை மீதிருந்த சொம்பில் இருந்து இரண்டு முறை நீர் அருந்தினான்..
பார்வையை அறை முழுவதும் பதித்து எடுத்து மீண்டும் படுக்கையில் படுத்தான்.
உறக்கம் தெளிந்து கண்கள் அகல விரிந்தன. புரண்டு புரண்டு படுத்து பார்த்தான். ம்ஹும் தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து விளக்கை போட்டு கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்து வாசிக்க துவங்கினான்.
தலைப்பு , “உறங்கும் விழியும், விடியாத இரவும்.” என்றிருந்தது. வாசிக்க வாசிக்க உறக்கம் மெல்ல படுக்கையில் தள்ள புத்தகத்தை மூடிவைத்து விட்டு கண்களை மூடினான்.
திடீர் என மின்சாரம் நின்று போய் அடர்ந்த இருள் அறையெங்கும் சூழ்ந்தது. புழுக்கத்தில் உறங்க முடியாமல் எழுந்து அமர்ந்து டார்ச் விளக்கின் உதவியுடன் மின் விளக்கின் ஸ்விட்ச் அணைத்து விட்டு, ஜன்னல் அருகில் காற்று வாங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
வெளியில் நிலா வெளிச்சத்தில் மேகங்கள் மிதப்பதையும் தூரத்து கருநீல மலைகளின் முகட்டை தொட்டு விளையாடும் காற்று தன் தோட்டத்து மரங்கள் செடிகளின் மீது தவழ்ந்து தவழ்ந்து வந்து தன்னை உரசியபடி செல்லமாக தாலாட்டு இசைத்து இமை மூடி தூங்க செய்ததில் மெய் மறந்து முன்னால் இருந்த மேஜை மீது இரு கைகளையும் மடித்து வைத்து தலை சாய்த்து நிம்மதியாக உறங்கலானான்.
படுக்கையின் மீது அரைகுறையாக வாசிக்கப் பட்ட புத்தகம் மூடிய நிலையில் இருந்தது.
தொலை தூரத்து ஆந்தை யின் அலறல் இரவு முடியவில்லை என இயற்கைக்கு அறிவித்து சென்றது…..
Beshara…..
