பாதையில்லாப் பயணம்

கால சுப்ரமணியம் 

ஞானக்கூத்தனின் காந்தி மஹான்

1947ல் ஏவிமெய்யப்பன் எடுத்த ‘நாம் இருவர்’ என்ற டி.ஆர். மகாலிங்கம் படத்தில் குமாரி கமலா சிறுமியாக பாடியாடும் கே.பி. காமாட்சிசுந்தரம் எழுதி, ஆர். சுதர்ஸனம் இசையமைத்த திரைப்படத்தில் பிள்ளைக்குரல் புகழ் எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய புகழ்பெற்ற பாடல் “மஹ்ஹான் காந்தீ மஹாஆன்“.காந்தியை வழிபாட்டுப்பிரதிமையாக வைத்து பாடப்பட்ட இதில் குழந்தைக்குரலில் சமஸ்கிருத உச்சரிப்புடன் மழலையாக பாடுவது இன்றைக்கும் ரசிக்கக்கூடியதாக இருந்தாலும் ஒருவகையில் புன்முறுவலை வரவழைக்கக் கூடியது.

அந்தப் பாடலின் முதல் அடியைத்தான் ஞானக்கூத்தன் தன் கவிதைக்குத் தலைப்பாக்கியிருக்கிறார். காந்தி என்ற மகத்தான ஆளுமை பற்றிய கவிதை அல்ல இது. ஆனால் காந்தியை வைத்துப் பிழைப்புவாதம் பண்ணும் மேடைப்பேச்சு அரசியல்வாதிகளை (எனவே திராவிடக் கட்சி அரசியல்வாதிகளை்) ஒரு கார்டூன் சொல் சித்திரமாக ஒரு அபத்தவியல்/அங்கத / அதிரடி / வசை / பகடி / விகட / கிண்டல் கவிதையில் காட்சிப்படுத்துகிறார். காந்தியை வைத்துக் கொண்டு செயல்படும் அரசியலை விமர்சனம் செய்யும் கவிதை இது. இதைப் பாராட்டுவதற்கும் பழிப்பதற்கும் என்னென்ன காரணங்கள் இக்கவிதையின் புதைநிலையில் உள்ளன?

முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்த ரங்கநாதன், திராவிடக் கட்சியின் (எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்) மேடைப்பேச்சு விகடத்தைத்தான் இக்கவிதையில் கொண்டு வருகிறார். இடதுசாரிகளும் தலித்தியர் சிலரும் பனியாவாக காந்தியை கீழிறக்கிப் பார்க்கும் பார்வைகளையும் புரட்சிகர அல்லது இந்துத்துவ பிராமண நோக்கையும் அநுசரிப்பதாக இது வாசகருக்கு தோன்றும். ஈ.வெ.ரா.வின் சி.என்.அண்ணாதுரையின் மு. கருணாநிதியின் சம்பத்தின் மேடைப்பேச்சை சிலாகிப்பவர்கள் பலருண்டு. அந்த பாணியை பிற்கால மேடைப் பேச்சாளர்கள் மலினப்படுத்தினார்கள். ஆனால் காங்கிரஸ் உட்பட்ட எல்லா அரசியல்வாதிகளும் காந்தியை இப்படித்தான் ஆட்சியிலும் பேச்சிலும் பயன்படுத்தினார்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற தொனி இந்தக் கவிதைக்கு வந்திருக்க வேண்டும். அப்பொழுது ‘அப்பழுக்கற்ற’ கவிதையாக, கவித்துவத்தின் சமநிலை ஆளுகை கொண்டதாக இது மாறியிருக்கும்.

காந்தீ மஹ்ஹான்
(கவிதை)

ஞானக்கூத்தன்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார் –
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்
வேட்டியை இறுக்கிக் கொண்டு
üவிடுதலை தவறி’ என்றார்
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டை தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள.
(கசடதபற-3வது இதழ், டிசம்பர் 1970)

பிராமணர் என்பதால் திராவிடரை அங்கதப்படுத்துகிறார் என்றும் வெறுமனே ’செய்யப்பட்ட’ ‘சமத்கார கவிதை’யாக (புலவர்களின் செய்யுள்களை வேறுநிலையில் அந்தப்படியே செய்வதாக) இது பார்க்கப்படுவதால் தான் வாதப்பிரதிவாதம் எழுகிறது. நல்லகவிதைதான் ஆனால் அரசியல் சரியற்ற கவிதை. எனவே சிறந்துயர்ந்த கவிதை அல்ல என்று விமர்சிக்கிறார்கள்.

Enter