விருட்சம் நினைவுகள் 7/அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜூலை  மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன்.  இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன.  இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.  

இதில் எழுதிய பலர் காணாமல் போய்விட்டார்கள்.  ஞானக்கூத்தன் முதல் இதழிலிருந்து கவிதை எழுதியவர்.  என்னிடம் ஒரு முறை அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  'உங்கள் கையில் தங்கக் காப்பு போடவேண்டும்,' என்று. 

1988ஆம் ஆண்டு இருந்ததுபோல் இன்றைய நிலை இல்லை.  இன்று ஒரு சிறுபத்திரிகை தேவையில்லை.  ஏன் எந்தப் பத்திரிகையும் தேவை இல்லை.  எழுதுபவர்கள் எல்லோரும் நேரிடையாக தன் எழுத்தை முகநூலில் பதிவு செய்கிறார்கள்.  தோன்றும்போதெல்லாம் முகநூலில் கவிதைகள் எழுதுகிறார்கள்.   அவர்கள் எழுதுவதுதான் கவிதை.  யாரும் அது குறித்து விமர்சனம் செய்ய முடியாது.  முன்பு அப்படி இல்லை.  வரும் கவிதைகளைப் படித்து அவை பிரசுரம் செய்யத் தகுதியானதுதானா என்ற தேர்வு இருக்கும்.

புதிய நம்பிக்கை ஆசிரியர் பொன் விஜயன் அவர் பத்திரிகையில் விருட்சம் பற்றி எழுதியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 'கறாரான பத்திரிகை' என்று.  எனக்கு ஆச்சரியம்.  ஏன் அப்படி எழுதினார்?

பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.  ஆனால் அவருக்குத் தோன்றியது.  ஏன்?

பெரிய பத்திரிகைகளில் கவிதைகள் வராத தருணம் அது.  சிறுபத்திரிக்கைகளில்தான் வரும்.  அதனால் சிறுபத்திரிகைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது.  ஆனால் இப்போது இல்லை.  ஏன்?  அப்படிச் சொல்வது சரியா?  இந்தக் கருத்தை என்னால் நம்ப முடியவில்லை.  

என் மனதில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் பல காலமாய் குடிகொண்டிருந்தது.  இதற்கு சிறுபத்திரிக்கைகளை நடத்தும் நண்பர்கள்தான் காரணம்.  அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம்தான் காரணம்.

ழ பத்திரிகையை ஆத்மாநாமிற்குப் பிறகு தொடர முடியாமல்  நிறுத்தியே விட்டார் அதன் இணை ஆசிரியர்.  நினைத்தால் அவரால் தொடர்ந்து கொண்டு வர முடியும்.  ஏன் அவர் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கெல்லாம் காரணம் அறிய முடியவில்லை.  

நாங்கள் ஒரு கூட்டம் போட்டோம்.  நாங்கள் என்றால்?  கோபி கிருஷ்ணன், ரா ஸ்ரீனிவாஸன், கண்ணன் எம், இளம்பரிதி போன்ற நாங்கள். 

கூட்டம் நடந்த இடம் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில்.  பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பதுபற்றி பேசினோம்.  ஒரு பத்து பெயர்களைக் குறிப்பிட்டு அதை ஒரு டைரியில் எழுதினேன். 

அந்தப் பெயர்களில் ஒன்றுதான் விருட்சம்.  ஆரம்பத்தில் நான் ஆசிரியராகவும், கோபி கிருஷ்ணன் துணை ஆசிரியராகவும் இருப்பதற்கு ஒப்புக்கொண்டோம்.  பின் படைப்புகளை இந்த ஐவர் குழு தீர்மானிப்பதாகத் திட்டம் தீட்டினோம்.

இப்படித்தான் விருட்சம் ஆரம்பித்தது.  அதற்கென எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன்.  முதல் இதழ் 500 பிரதிகள் அச்சடித்தேன்.  பத்திரிகையை அனுப்புவதிலிருந்து எல்லாப் பிரச்சினைகளும் அதில் ஏற்பட்டது.

பல படைப்பாளிடமிருந்து படைப்புகள் கேட்டோம்.  படைப்புகளும் வந்தன.  ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு.  மேலும் படைப்புகள் எல்லாம் ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி தாக்கும் படைப்புகளாக இருந்தன.

படைப்பாளிகள் பலர் ஒருவரை ஒருவர் திட்டுவதற்குக் கவிதை மூலம் எழுதத் தொடங்கி விட்டார்கள்.  

கோபி கிருஷ்ணனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எழுதினார் :'நான் துணை ஆசிரியர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக.'  எனக்கோ திகைப்பு.  அடுத்த இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். 
                                                                                                                                  (இன்னும் வரும்)

3 Comments on “விருட்சம் நினைவுகள் 7/அழகியசிங்கர்”

  1. 1988 ஜூலையில் தொடங்கிய விருட்சத்தின் வரலாற்றை அருமையாக ஆரம்பித்து உள்ளீர்கள் . தொடர்ந்து படிக்க ஆர்வமாக உள்ளது .

    நான்கு வருடங்கள் ஜோத்புரில் இருந்து விட்டு மாறுதல் ஆகி சென்னை தலைமை அலுவலகம் 88 மே யில் வந்து சேர்ந்த ஞாபகமும் , இண்டிமேஜில் ( இந்தியன் வங்கி மாத இதழ் )எனது கவிதைகள் வெளி வந்து கொண்டு இருந்ததால் , எனது கவிதை ஆர்வத்தை உணர்ந்த ஆர்கேயின் அண்ணன் கேகே என்ற க்ரிஷ்ணமூர்த்தியுடன் வேறு ஒருவரும் உங்களுடன் சேர்ந்து வந்து விருட்சம் இதழ் ( முதல் இதழாகத் தான் இருக்கும் ) உங்கள் ஜோல்னாப் பையில் இருந்து எடுத்து கொடுத்த ஞாபகம் மங்கலாக நினைவில் வருகிறது .

    அது முதல் தொடர்ந்து விருட்சம் சந்தாதாரராக ஆகி பல ஆண்டுகள் தொடர்ந்து நடுவில் வேற்றூர் மாறுதல்களில் தடைபட்டு மறுபடி ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்து தொடர்வது மகிழ்வாக உள்ளது . பத்திரப்படுத்தி இருந்த பல பழைய விருட்சம் இதழ்கள் வாடகை வீடுகள் மாறிய போது விடுபட்டுப் போனது வேதனை .

    இப்போது அவையெல்லாம் மின்புத்தகங்களாக வருவது மகிழ்ச்சி . இலக்கிய உலகம் பெருமைப் படத்தக்க எத்தனையோ படைப்புகள் அந்த இதழ்களில் . வாழ்க . வளர்க . விருட்சத்தின் கதை விருட்சம் தினசரியில் வளரட்டும் . வாசிக்கிறோம் ,

  2. அருமை.விருட்சத்தின் விதையை நட்டதிலிருந்து தொடங்குகிறது.வரலாறு.

    திரைப்படத்தைவிட அதைஎடுக்கமுயற்சித்தபோராட்டம் விருப்பமுடன் கவனிக்கத்தக்கதாய் இருக்கும்.

    தொடரட்டும் வாழ்த்துகள்.

  3. வயதாக ஆக, ஞாபகங்கள் மறைந்து போகலாம். எனவே நினைவலைகளை இன்னும் வேகமாகப் பதிவு செய்யுங்கள். தமிழ்ப் பத்திரிகை வரலாற்றின் இன்றியமையாத பகுதியாக அப்பதிவு திகழும் என்பதில் ஐயமில்லை.

Comments are closed.