அழகிய சிங்கர்/பிரமிள் நினைவுப் பாதை

பிரமிள் நினைவுப் பாதை-எழுத்தாளர் அழகிய சிங்கர்-பாகம்-இரண்டு.-POET PRAMIL MEMORIES-WRITER AZHAGIYA SINGAR-PART-TWO

கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் அழகிய சிங்கர் விரிவாகப் பேசுகிறார்.

பிரமிள் (Pramil, ஏப்ரல் 20, 1939 – சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு
சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம்[1] இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997-இல் மறைந்தார்.

எழுத்துலகில்
தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.

புதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.

ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.

“கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.

தொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக்கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன.

ஓவியர்
புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971-இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.[2]

விருதுகள்
நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.

மறைவு
உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

அழகிய சிங்கர்/கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “அழகிய சிங்கர்/பிரமிள் நினைவுப் பாதை”

  1. 💐💐💐💐💐

    வித்தியாசமான படைப்பாளி பிரமிள் அவர்களுடன் கிடைத்த அனுபவங்களை நமது அழகியசிங்கர் இந்த ஒன்றரை மணி நேர உரையாடலில் ( இரண்டு பகுதிகள் ) தனக்கே உரித்தான வெளிப்படையான எளிமையான முறையில் சொல்லியிருப்பதைக் கேட்டது மிகவும் சுவையான அனுபவம்,

    தனது ஆரம்பகால சிற்றிதழ் அனுபவத்தில் ஆரம்பித்து பிரமிள் மறைவு வரை அழகியசிங்கர் அள்ளிக் கொடுத்திருக்கும் அனுபவங்களில் வருகின்ற இலக்கிய உலகின் , ஆன்மீக உலகின் பிரபலங்கள், சிற்றிதழ் கள் விபரங்கள், சுவையான நிகழ்வுகள் பலப் பல , அனைத்தையும் இங்கே எழுதினாலே அது இரண்டு பக்கங்கள் ஓடி விடும்.கேட்டு மகிழுங்கள்.

    ஒரு சிலர் பெயர் மட்டும். விசிறி சாமியார், ஜே கிருஷ்ணமூர்த்தி , ஞானக்கூத்தன், அசோகமித்திரன் , க நா சு , நகுலன் , ஜெயமோகன் இன்னும் பல இலக்கிய வாதிகள் . கேட்கக் கேட்க பிரமிப்பாக இருக்கிறது . பிரமிள் அவர்களுடன் இந்தியன் வங்கி கேன்டீன் , அயோத்தியாகுப்பம் வீடு, கரடிக்குடி வரை தொடரும் அழகியசிங்கரின் அனுபவங்களை அவர் விவரித்த விதம் , மகிழ்ச்சி ,சோகம் இரண்டும் கலந்த உணர்வுகளில் நம்மை ஆழ்த்தியது.

    அழகியசிங்கர் அவற்றை வெளிப்படுத்திய விதத்தில் அவரின் எளிமையும் , வெளிப்படைத் தன்மையும் விளங்கின. இந்த வெளிப்படைத் தன்மையால் அவரைப் பலவிதத்தில் புரிந்து கொண்டவர் பல பேர். ஆனால் இந்தியன் வங்கி நண்பர்கள் வேணுகோபால், கணேஷ் ராம் போன்ற ஒரு சில பேர் அவரைச் சரியாகப் புரிந்து கொண்டு கட்டுரைகள் எழுதியுள்ளனர் .

    நானும் இந்தியன் வங்கியில் அவரது முதல் நவீன விருட்சம் தொடங்கி படித்து, பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின் சொல் புதிது வாட்ஸாப்ப் குழுவில் ஆரம்பத்திலேயே இணைந்து கவிதை சம்பந்தப்பட்ட உணர்வுகளில் அவரோடு வேறுபட்டு மோதி , கிருபானந்தனின் முதல் கவிதையால்( தேடிப் பார்க்கணும் அந்தக் கவிதையை ) மறுபடி அந்த மோதல் சரியாகி இணைந்து தொடரும் அந்த நட்பின் பெருமையால், இந்த உரையாடலை அவரை ஓரளவு புரிந்த முறையில் மிகவும் ரசித்துக் கேட்க முடிந்தது .

    குவிகம் குழுவில் கேட்டுக் கொண்டபடி , அழகியசிங்கரைப் பற்றிய ஆவணப் படம் , அவரின் போக்குக்கு ஏற்றபடி தயாரிக்கப்பட்டு வெளிவரும் நாள் நவீன இலக்கிய ரசிகர்களுக்கு ஒரு பொன்னாளாய் அமையும் . அந்த நன்னாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    ———நாகேந்திர பாரதி
    🙏🙏🙏🙏🙏

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன