
‘இன்னிக்காச்சும் வாங்கித்தாங்கம்மா. காதர் பாய் கடையிலே நான் பாத்தது இன்னும் அது இருக்கும்மா.”
“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளைக்குக் கடையில வர்ற வியாபாரத்தைப் பார்த்துட்டு
சாயங்காலமா போலாம்.”
“சரி” என்று அரைமனதோடு தலையாட்டுகிறான் கணபதி, வரும் அழுகையை அடக்கி, பையன் பார்க்காமல் கண்ணைத் துடைத்துக்கொள்கிறாள் காவேரி.
அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வாங்கித்தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டுக் காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனை வளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை, கட்டடத் தொழிலாளியெனப் பல அவதாரங்கள் எடுத்ததில் அவள் புரிந்துகொண்டது எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தான்.
இறுதியாக அவள் செய்த துணிவான முடிவுதான் இந்தச் சொந்தப் பலகாரக்கடை. ராமனாதபுரம் அருகில் தேசிய நெடுஞ்சாலையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு சின்னக்
கிராமத்தின் நுழைவாயிலில் அரசின் புறம்போக்கு இடத்திலிருக்கும்
சிறு குடிசைதான் அவளுடைய வீடு கடை எல்லாம். திண்ணையிலிருக்கும் அடுப்பும் சமையல் சாமான்களும் அங்கு
மாட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணன் படமும்தான் அவளுடைய சொத்து.
அருகில் எழுந்துகொண்டிருக்கும் பெரிய பிராஜக்டின் பணியாளர்கள்தான் அவளுடைய கஸ்டமர்கள். பேர்தான் .
பலகாரக்கடையே தவிர அதிகம் விற்பது டீ, காபிதான்.
காலை நேரத்தில் வேலைக்குப் போகும்முன் வரும் சில தொழிலாளர்களுக்காக இட்லி, வார இறுதிச் சம்பள நாளின்போது
தவறாமல் வீட்டுக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக பஜ்ஜி, வடை, போண்டா போடுவது என்றளவில்தான் வியாபாரம்
காலை 10 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் கணபதி ஒரு ஃப்ளாஸ்க்கில் டீ
அடுக்காகச் சொருகிய அட்டை தம்பளர் சகிதம் தொழிலாளர்களிடம் ஒரு ரவுண்ட் போய் கப் 3 ரூபாய் என்று டீ கொடுத்து காசை வாங்கி வருவான்.
யாருக்கும் கடன் கிடையாது. கடையில் சிகரெட் விற்பனை செய்வதில்லை. உட்கார்ந்து பேச வசதி கிடையாது. என்ற காவேரியின் கட்டுப்பாடுகளினால் கஸ்டமர்கள் குறைவுதான்
என்றாவது கம்பெனி அல்லது பிராஜக்ட் அதிகாரிகள் மீட்டிங் என்றால் கூடுதலாக 25 கப் விற்பனையாகும்.
காவேரியின் கடையில் வாங்கிய டீயை “உங்களுக்காகவே ராமனாதபுரத்திலிருந்து கொண்டு வந்தது” என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்டிராக்டர் பாராட்டுகளை வாங்கிக் கொள்வது காவேரிக்குத் தெரியாது.
அன்று நாள் தொடங்கியதிலிருந்தே பரபரப்பாகயிருந்தது. அந்தப் பகுதியில் காவேரி அதுவரை பார்க்காத மனிதர்கள் பலர் வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கடையில் டீ சாப்பிட்டார்கள். கடையின் முன்னால் மெல்ல கூட்டம் சேர்ந்தது. யாரின் வரவுக்கோ காத்திருந்தார்கள். காவேரி தெரிந்தவர்களுடன்கூட அதிகம் பேசமாட்டார். அதனால் புதியவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்கவில்லை.
சற்று நேரத்தில் சர்… என்று ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கிய ஒரு கரை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர். “தலைவர் கூட்டு ரோட்டுக்கு வந்துகிட்டிருக்கார். எல்லோரும் அங்கே வாங்க, மினிஸ்டர் வர பாதையை மாத்திட்டாங்களாம். அதனால் நாம் அந்த ரோட்டுக்குதான் போகணும். சீக்கிரம் வாங்க” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனார்.
மிக வேகமாக ஓடி வந்த கணபதி, “அம்மா சீக்கிரம். இன்னும் இரண்டு பிளாஸ்க்கு டீ போடும்மா. மெயின் ரோட்டில் ஒரே கூட்டம். கட்டடத்துக்குக் கொண்டு போன டீயை எல்லாம் அவங்க 5 நிமிஷத்தில் வாங்கிட்டாங்க. கப் 5 ரூபான்னு கொடுத்தேன்” என்று தான் சம்பாதித்த 100 ரூபாயை காவேரியிடம் கொடுத்தான்.
அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த டீயை ஃப்ளாஸ்க்கில் ஊற்றிக்கொண்டே “எதுனாச்சும் அரசியல் கூட்டமாடா?” என்றார்.
“என்ன கட்சின்னு தெரியலம்மா. எல்லாரும் கறுப்புக் கொடி வைச்சிருக்காங்க. ஆளுங்க வந்திட்டே இருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே, பரபரப்புடன் ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டான் கணபதி.
காசைப் பத்திரமாக வைச்சுக்கோ” என்று சொல்லுவதை காதில் வாங்க கணபதி அங்கு இல்லை. இந்த ஃப்ளாஸ்க் முழுவதையும் விற்று காலிசெய்யும் ஆர்வம் அவனை ஓடச்செய்திருந்தது.
தமிழகத்தை வஞ்சிக்காதே!. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்து!” என்ற
முழக்கங்கள் தலைவரின் காரைப் பார்த்ததும் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கத் துவங்கியது. தலைவரின் கார் அருகில்
வந்ததும் அவர் பெயரைச் சொல்லி வாழ்க கோஷங்கள் எழுந்தன.
காரின்முன் சீட்டிலிருந்து நிதானமாக இறங்கிய தலைவர் கூட்டத்தைப் பார்த்துக் கைகூப்பி
வணக்கம் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார். நமது கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்ட
அறிவிப்பினால் மத்திய அமைச்சர் கிராமத்துக்கு வரும் பாதையை மாற்றிவிட்ட தகவல் நமக்குக் கிடைத்திருக்கிறது.
அதனால்தான் இடத்தை மாற்றி இங்கு போராட்டம் செய்ய வந்திருக்கிறோம். அமைச்சர் கார் வரும்போது கறுப்புக்கொடியை அசைத்து கோஷமிட வேண்டும். நம் நோக்கம் அவர் காரை மறிப்பதில்லை. நமது கண்டனத்தை அவருக்குப் புரியவைக்க அவர் வருமிடத்தில் நின்று கறுப்புக் கொடி காட்டுகிறோம். அதனால் கார் வரும்போது எவரும் குறுக்கே பாயக்கூடாது. எந்த அசம்பாவிதமும் கூடாது. உங்கள் அருகிலிருப்பவர்களைக் கவனித்துக்கொண்டிருங்கள். மாற்றுக் கட்சிக்காரர்கள் ஊடுருவி எதாவது அராஜகம் செய்து பழியை நம்மீது போடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்… பேச்சை முடிப்பதற்குள், “மாவட்ட எஸ்.பி பேசுகிறார் சார்” என யாரோ ஒருவர் போனைக் கொடுக்க, தலைவர் போனில் பேசியபடியே காருக்குத் திரும்பினார்.
வெயிலைப் போலவே கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த வேன்களும் மோட்டர்
சைக்கிள்களும் அந்தச் சாலையின் இருபக்க வெளிகளில் நிறைந்திருந்தன.
“அம்மா இந்த பிளாஸ்க்கும் காலி. சீக்கிரம் இன்னொண்ணு ரொப்பு. கூட்டம் அள்ளுது. கப் ஆறு ரூபாய்னு வித்திட்டேன்” என்று கையில் நிறைந்த நோட்டுக்களை அம்மாவிடம்
கொடுத்தான் கணபதி.
“இந்த பிளாஸ்க்குக்கு மட்டும்தான் பாலிருக்குடா. அதோடு போதும்” என்ற காவேரியின் மனதுக்குள் மகனின் சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்தாலும், பின் ஏன் இந்தப் பையனுக்குப் படிப்பு ஏறவில்லை? என்ற வருத்தமும் எழுந்தது.
“டீ இல்லனா தின்றதுக்கு ஏதாவது பண்ணு. அதையும் வித்துடலாம்” கணபதியின் கண்ணில் செருப்பின் விலைச்சீட்டு மின்னி மறைந்தது.
கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எப்படி எங்கிருந்து இத்தனைபேர் இந்தக் கிராமத்துக்கு வந்தார்கள்? உள்ளூர்க்காரர்களும் ஆச்சர்யத்தோடு அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.
என
“உங்களுக்கு இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. கலைந்து போகச் சொல்லுங்கள்” என்ற அந்த போலீஸ் அதிகாரியிடம் “அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்ட பாதையை நீங்கள் மாற்றும்போது நாங்கள் மாற்றக்கூடாதா?” என்று உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் சத்தமாக வாதிட்டுக்கொண்டிருந்தபோது, மிக வேகமாக வந்த ஒரு லாரியிலிருந்து சாலைகளின் நடுவில் ரோடைப் பிரிக்க வைக்கும் இரும்புத் இரும்புத் தடுப்பு வேலிகள் சரசரவென்று இறங்கின. அதைச் சாலையின் இருபுறங்களிலும் பரபரவென்று நிறுத்தினார்கள் அந்த லாரியில் வந்த போலீசார். அந்த இரும்புத் தடுப்புக்களிலிருந்த விளம்பரங்கள் அது மாவட்டத் தலைநகரிலிருந்து வந்திருப்பதைச் சொல்லியது.
“இந்தத் தடுப்புக்குப் பின்னால் போங்க” என்று கத்தியபடி, அடுத்த லாரியிலிருந்து பெரிய கம்புகளுடனும் ஃபைபர் கிளாஸ் கேடயங்களுடனும் இறங்கினார்கள் நீல வண்ண
உடுப்பு அணிந்த போலீசார். வினாடிகளில் மாறிப்போனது அந்த இடம். மக்கள் அந்தத் தடுப்புக்குப்பின் போக மறுக்க போலீஸ் அவர்களை முழுவேகத்துடன் தள்ள சில நிமிடங்களில் அந்த இடம் உணர்ச்சிகளின் சங்கமமாகியிருந்தது. கறுப்புக் கொடிகளை ஏந்திய தொண்டர்களின் கோஷத்தில் இப்போது போலீஸ் அராஜகம் ஒழிகவும் சேர்ந்து கொண்டது.
“அமைச்சரின் கான்வாய் இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவிட்டது ரோஜர்” என்று அலறிக்கொண்டு வந்த ஸ்பீக்கர் வைத்த டிராஃபிக் கிளியரன்ஸ் ஜீப்பை பார்த்தவுடன் போலீஸாரின் வேகம் அதிகமானது. கம்பித் தடுப்புக்குப் பின்னால் போகாதவர்களைப் பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள். களேபரமாகியது. அடி தாளாமல் தொண்டர்கள் ஓட, சிலர் அந்தத் தடுப்பின் மேலே விழுந்து, அது சரிந்து மறுபக்கம் இருப்பவர்களை அது நசுக்கியதால் வேதனையால் அவர்கள் கத்த ஆரம்பித்தார்கள்.
அந்த ஓலங்கள் அமைச்சரின் குழு கார்களின் அணிவகுப்பின் பைலட் ஜீப்பின் சைரன் ஒலியில் அமுங்கிவிட்டது. என்ன நடக்கிறது? என்பது புரிவதற்குள் வினாடிகளில் அமைச்சரின்
கார் அந்தப் பகுதியைக் கடந்து பறந்தது. அப்போது எங்கோ தொலைவிலிருந்து எறியப்பட்ட ஒரு சிறிய கல் அமைச்சரின் அணிவகுப்பில் கடைசியாக வந்த காரின்மீது பட்டுத் தெறித்து சாலையில் விழுந்தது. தொடர்ந்து விழுந்தது ஒரு வார் அறுந்த பழைய செருப்பு.
அடிபட்டால் அடுத்த வினாடி திருப்பித் தாக்கும் விலங்குகளைப்போல போலீசார் நிற்பவர்கள் எல்லோரையும் தாக்க ஆரம்பித்தனர். தொண்டர்கள் அலறிக்கொண்டு சிதறி ஓடினர்.
“ஐயோ என் பிளாஸ்க் பிளாஸ்க் சார் பிளீஸ்” என்று கணபதி கத்தியதைக் கேட்க எவருக்கும் நேரமில்லை. தவறி விழுந்த அதை மிதித்து உடைத்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தது கூட்டம். சிக்கித் தடுக்கிக் பதறி
ஓடிக்கொண்டிருப்பவர்களிடையே கிழே விழுந்த கணபதியை மிதித்துக் கொண்டே பல கால்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த கஷ்டத்துடன் எழுந்த கணபதியின்மீது விழுந்த ஒரு போலீஸ்காரனின் அடியில் அவன் மயங்கித் தரையில் விழுந்தான்.
சிதறிக்கிடந்த கிழிந்த கறுப்புக் கொடிகள், சட்டைகள் கொடிக்கம்புகள் அறுந்த செருப்புகள் அடிபட்டு விழுந்திருக்கும் சில மனிதர்கள் என, ஒரு போர் நிகழ்ந்த இடம்போல் மாறியிருந்தது அந்த இடம்.
அரைமணிக்குப்பின் மயங்கிய நிலையிலிருந்து விழித்த கணபதிக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது. காலில் பலமாக விழுந்த அடி இப்போது விண்ணெண்று வலித்தது. அப்போது அருகில் கிடந்த ஒற்றைச் செருப்பு அவன் கவனத்தை ஈர்த்தது. புத்தம் புதிய செருப்பு அவன் பார்த்து வைத்திருந்த அதே மாடல் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்த அடுத்த நிமிடம் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிக்கொண்டே அவனைப் பளீரென்று அறைந்தார் ஒரு போலீஸ்காரர். “மவனே நீதான் செருப்பை வீசினயாடா?” எனச்சொல்லித் தரதரவென அவனை இழுத்துக்கொண்டே ஜீப்புக்குப் போனார். கணபதிக்கு ஒன்றுமே புரியவில்லை. “சார் சார்” என்று அவன் பேசு ஆரம்பிக்கு முன்னரே பளார் பளார் என்று அறை. அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கால் வலி வேறு அதிகமாகிக்
கொண்டேயிருந்தது. விஷயமறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் பதறி அடித்துக்கொண்டு வந்த காவேரி, கணபதியை ஜட்டியுடன் உட்கார வைத்திருப்பதைப் பார்த்து கூசித் துடித்துப்போனார்.
அந்த இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து “ஐயா அவனுக்கு ஒன்றும் தெரியாதய்யா விபரம் பத்தாத பையன். விட்டுடங்க அய்யா” என்று கண்ணீருடன் கெஞ்சினார்.
“சும்மா கத்தாதம்மா ஒம் மவன் மந்திரி கார்மேல் செருப்பு எறிஞ்சிருக்கான். இது எவ்வளவு பெரிய கேஸ் தெரியுமா? கேஸ் எழுதிட்டோம் நாளைக்கு ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வக்கீலோடு வந்து ஜாமீன் கேக்கச் சொல்லு. போ” என்று கத்திவிட்டு யாருடனோ போனில் பேச ஆரம்பித்துவிட்டார். காவேரியின் கதறலையும் அழுகையையும் பொருட்டாகவே மதிக்கவில்லை அந்தக் காக்கிச் சட்டையின் மரத்துப்போன நெஞ்சம்.
மதியம் கடந்துகொண்டிருந்தது. என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த காவேரி, ஸ்டேஷன் வாசலிலேயே உட்கார்ந்திருந்தாள்.
சட்டென்று வந்த அந்த காரை காவேரி முதலில் கவனிக்கவில்லை. காரிலிருந்து இறங்கியவர் “ஒம் மகனாம்மா? பேர் என்ன? என்ன வயசாகிறது?” என்று கேட்ட அந்தத் தொனியிலேயே இவர் நமக்கு உதவி செய்பவர் போலிருக்கிறது என்று நினனத்து அழுதபடி “பேர் கணபதி சார். இந்த ஆனிக்கு 14 வயசாகுதுங்க. நெடுநெடுன்னு வளர்ந்திருக்கே தவிர விபரம் பத்தாத புள்ளை. படிப்பு ஏறல்ல, பலகாரக்கடையிலிருக்கான். அவனைப் புடிச்சி…” என்று புலம்ப ஆரம்பித்தார். கறுப்புக் கோட்டுடன் கம்பீரமான நடையில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவரை இன்ஸ்பெக்டர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் உடல் மொழியில் தெரிந்தது.
“என்ன சண்முகம்? ராமநாதபுரத்தில் செய்ததை இங்கும் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா? ஏன்ய்யா சர்வீஸ் முழுவதும் இப்படி பொய்கேஸ் போட்டுக்கிட்டே இருப்பீங்களா? இதுவே பனிஷ்மென்ட் போஸ்டிங். இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா?” நாற்காலியில் உட்கார்ந்தார் என்று சொல்லியபடியே, கிருஷ்ணதேவர்,
சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, பெண் பாதுகாப்பு சமூக நீதி சிறுகுழந்தை நலம் போன்ற விஷயங்களுக்காக வழக்குப்போட்டுப் போராடும் வழக்கறிஞர். சமூக ஆர்வலர். இடதுசாரி சிந்தனையுள்ளவர். நடந்த போராட்டத்தில் இடதுசாரி அமைப்புகள் இல்லாததால் இவருடைய வருகை அந்த இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தது.
“இல்ல சார் இரண்டு சாட்சி ஸ்ட்ராங்கா இருக்கு. காலிலிருந்து கழட்டி எறிந்ததைப் பார்த்திருக்காங்க சார், அரசியல் போராட்டம், சென்ட்ரல் மினிஸ்டர்… அந்தக் கட்சி பிரஷர் அதனாலே” என்று
இழுத்தவர். எறிந்த செருப்பைக்கூட எடுத்துவைச்சிருக்கோம் சார்” என்று தன் மேஜையின் மீது ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த செருப்பை நோக்கிக் கையை காட்டினார்.
மொதல்ல அவன் டிரஸ்சைக் கொடுங்க. அரசியல் போராட்டக் கைதுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இந்த கிரிமினல் டீரிட்மென்ட்?”
மேஜைமீது இருந்த அந்த பிளாஸ்டிக் கவரையும், அதில் உள்ள செருப்பையும் அரை நிமிஷம் பார்த்த கிருஷ்ணதேவர், “அப்படியா! சரி புறப்படுங்க ராமநாதபுரம் மாஜிஸ்ட்ரேட்
வீட்டுக்கு” என்றார்.
சற்றே திகைப்புடன் “சார் வண்டி இல்ல சார். நாளைக்கு காலையிலே கூட்டிப்போய் ரிமாண்ட் பண்ணறோம். நீங்க வந்து ஜாமீனில் எடுத்துடுங்க.”
“மிஸ்டர் சண்முகம்! மாஜிஸ்ட்ரேட் கிட்ட போறது பையனுக்கு ஜாமீன் எடுக்கறதுக்கில்ல.
நீங்க பொய் கேஸ் போட்டிருக்கீங்கன்னு ஆதாரத்தோடு சொல்லி, உங்க மேலே கோர்ட்லேயே ஒரு புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யத்தான்.
ஒரு மைனர் பையனை இப்படி ஸ்டேஷனில் வச்சதுக்கு சட்டத்தில் இடமில்லை. எங்கேய்யா? உங்க சாட்சிகள். . அவங்களையும் வரச்சொல்லுங்க. பொய் சாட்சி கொடுத்ததற்காக அவங்க மேலேயும் மாஜிஸ்டிரேட்கிட்ட ஒரு புகார் கொடுக்கணும்:
“சார்…”
“பின்ன என்ன சண்முகம்… சட்டங்களைத்தான் மறந்துட்டிங்க, சொந்தமா சிந்திக்கிறதையே மறந்துட்டீங்களா?
இந்தப் புதுச் செருப்பில் சைஸ் 9 நம்பர் பளிச்சின்னு தெரியுது. இந்தச் சிறுபையனின் கால் சைஸ் உங்களுக்கு
பார்த்தவுடன் தெரியல்லையா? கழட்டி எறிஞ்சதைப் பார்த்த சாட்சி இருக்காங்களாம் என்ன கதையா இது?
வாங்க போலீஸ் வண்டியில்லாவிட்டால் பரவாயில்ல. என் காரில் போகலாம். கிளம்புங்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்.
“சார், சார் அவசரத்திலே கவனிக்கல்ல. சாரி சார். மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார். ப்ளீஸ்” காலையில் கருணையே இல்லாமல் பேசிய காக்கிச் சட்டை இப்போது கருணைக்காகக் கெஞ்சியது.
இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளைப் பார்த்து கண்ணைக் காட்டியதும், அவர் கணபதியின் டிரஸ்ஸைக் கொடுத்து “நீ போப்பா” என்றார்.
“அய்யா நீங்க மகராசனா இருக்கணும். நா கும்படற கிருஷ்ணன் சாமி நேரில்ல வந்ததுபோல வந்து இவனைக் காப்பாத்திட்டீங்க” என அழுதுகொண்டே அவரின் காலில் விழுந்து வணங்கினார் காவேரி.
வெளியே வந்த கிருஷ்ணதேவர் காத்திருந்த உள்ளூர் நண்பரிடம் “சரியான டையத்துக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்தீங்க. கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்தப் பையனை இவனுக வேறு ஏதாவது தொந்தரவு பண்ணாம பாத்துக்குங்க” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறிப் போனார்.
“நல்ல மனுஷன் மவராசன். நேரத்துக்கு வந்து காப்பாத்திட்டார்டா… நாளைக்குப் போய் உனக்குச் செருப்பு வாங்கலாம் கணபதி.”
“எனக்கு இனிமே செருப்பே வேண்டாம்மா. நாளைக்கு நமக்கு வேற பிளாஸ்க் வாங்கணும்”
அந்தப் பதிலைக் கேட்டு ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போய் கணபதியைக் கட்டி அணைத்துக் கொண்டார் காவேரி.
*
