கஞ்சி ஊத்திக் கவனிச்சுக்கிறவ


நாகேந்திர பாரதி

‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘.

மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த சந்திரனையும் முரளியையும் அந்த பாட்டி பார்த்த பார்வையில் நன்றி நிரம்பி வழிந்தது. ‘ஒரு மணி நேரம் இந்த பஸ்ல எப்படி நின்னுகிட்டே ஊர் போக போறோம்’ என்று கவலையோடு இருந்த அந்தப் பாட்டிக்கு வயது எழுபத்தைந்து இருக்கும்.

வரிவரியாய் ஆகிப் போன முகச்சதைகளும் தொங்கிப் போன கைச் சதைகளும் பஸ்ஸின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடின. ஒரு நாலு முழச் சேலையை மொத்தமாகச் சுற்றிக்கொண்டு இருந்த அந்தப் பாட்டியின் தோளில் வந்து தொங்கிய முந்தானைச் சேலையும் சேர்ந்து ஆடியது.

நடுவில் ஒரு ஸ்டாப்பில் டீ சாப்பிட நிறுத்தினார் டிரைவர். குதித்து இறங்கினர் முரளியும் சந்திரனும். ‘முறுக்கு கடலை’ என்று சிறுவர்-சிறுமியர் பஸ்ஸுக்குள் பாட்டுப்பாடி விற்றனர். முரளியும் சந்திரனும் வடை காபியை முடித்து விட்டு பஸ்ஸில் ஏறும்போது பாட்டி பக்கத்தில் ஒரு வாலிபப் பெண் அமர்ந்திருந்தாள்.

பாட்டியோடு ஒட்டி விடாமல் கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்திருந்த பாங்கில் ஒரு அருவருப்பு தெரிந்தது. ‘வேறு இடம் காலி இல்லை, வேறு வழி இல்லை’ என்ற விரக்தி அவள் முகத்தில்.

சந்திரனுக்கு அதைப் பார்க்க எரிச்சலாக வந்தது. ‘அந்த பொண்ணோட சொந்த பாட்டியா இருந்தா இப்படி இருப்பாளா’ என்று நினைத்துக் கொண்டவன் முரளியிடம் சொல்லி ஜாடையாக காண்பித்தான்.

முரளி அந்த பொண்ணுக்கு ஆதரவாகப் பேசினான்.’பின்ன என்னடா, அந்தப் பெண் எவ்வளவு நாகரிகமாக இருக்கா, அவ அழகு என்ன, அந்த கிழவிக்குப் பக்கத்துல உட்கார்ந்து சங்கடப்படறதிலே, அதுல என்ன தப்பு’.’ உன்கிட்டே சொன்னதே என் தப்பு .அந்தப் பாட்டிக்கு உட்கார இடம் கொடுக்கவே கஷ்டப்பட்டவன் நீ ‘ என்று பேச்சை முடித்துக் கொண்டான் சந்திரன்.

அவ்வப்போது அவர்கள் பக்கம் பார்த்து அந்தப் பாட்டி மேல் அவனால் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை. அடுத்த ஸ்டாப்பில் இறங்கினாள் அந்தப் பெண். ‘பாத்துப் போ மேகலை’ என்ற பாட்டிக்குப் பதில் சொல்லாமல் இறங்கிப் போனாள் அவள் .

‘ உனக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா பாட்டி’ என்ற சந்திரனுக்கு, ‘என் மகள் வயித்து பேத்திதான் . பக்கத்துலதான் இருக்குது அவ ஊரு. கொஞ்ச வருஷமா போக்கு வரத்து நின்னு போச்சு. என்னோட 4 சென்ட் நிலத்தை மகனுக்கு கொடுத்துட்டேன்னு கோபம் மகளுக்கும் பேத்திக்கும் . என்ன செய்யறது கஞ்சி ஊத்தி கவனிச்சுக்கிறது மருமக தானே’ .பாட்டியின் பதிலில் தெரிந்த உறவுகளின் அர்த்தத்தில் சந்திரனும் முரளியும் திகைத்துப் போனார்கள்.

4 Comments on “கஞ்சி ஊத்திக் கவனிச்சுக்கிறவ”

  1. மகளுக்கு சொத்தில் பங்கு உண்டு. தராவிட்டாலும் பாசம் விடாத பெண்களும் உண்டு. 4 சென்ட் பிடுங்கிக் கொண்டு வெளியேற்றும் மகன்களும் உண்டு.

    உறவுகள் கொச்சையாகப் போய்க் கொண்டிருக்கும் காலம். பணம் தான் கடவுள்

Comments are closed.