ஞானக்கூத்தன்/நோயாளி

என்னிடம் சொன்னவர் உண்மையைச் சொன்னவர்,
யானை எளிதாய் வாசலில் நுழையலாம்.
அத்தனைப் பெரிய வாசல் வீடு.
உள்ளே நுழைந்தேன். பெரிய கூடம்.

அங்கே வருவார் என்னை அழைத்தவர்.
அவர் வரும் முன்பாகக் கூடத்தைப் பார்த்தேன்.
கூடத்துச் சுவரில் அவரே சுட்டுக்
கொண்டு வந்தமைத்த விலங்கின் உடல்கள்.

பயத்தைக் கொடுக்கும் கானகத்தெருமை,
இறந்தது தெரியாத அழகிய மான்கள்,
பலவகைப் பாம்புகள்; கீரிப்பிள்ளைகள்.
சிறுத்தையும் இருந்தது. கிளிகளும் இருந்தன.

அழுகவிடாமல் இவற்றைக் காக்கும்
ஒருவகை மருந்தின் வாடையும் இருந்தது.
நிழலைக்கண்டு திரும்பிய போது அவர்
நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார்.

கன்னத்தில் இறங்கிக் காதைத் தீண்டும்
கூரிய மீசையும், கடுக்கன் காதுகளும்…
மீசையில் நரைப்பு. கண்களில் வளையம்.
ஜீரணம் இல்லையாம். தூக்கம் இல்லையாம்.
முறித்தாற்போல உடம்பில் நோவாம்.
கேட்டுக் கொண்டு மருந்தைக் கொடுத்தேன்
வாங்கினார். எழுந்தார். போனார். இடுப்புக்குக்
கீழே வேட்டியில் கறையைச் செய்த
ரத்தத்தைப் பற்றி எதுவும் உணராமல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன