
13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் தங்கேஸ்
வாசித்த 3 கவிதைகள்
கவிதை 1
சொற்கள் உயிர்க்கும் போது
வனாந்தரத்தில் அலைந்த
ஒரு வார்த்தையைப் பிடித்து வந்து
கவிதைக்குள் ஏற்றி வைத்தேன்
கண் முன்னால் ஒரு காடு
முளைத்து விட்டது.
சிறகடிக்கும் சொற்களை என்னால்
கட்டுப்படுத்த முடியவில்லை
பச்சைக் கடலில் நீந்தும் விலங்குகள்
எப்போதும் நாம் வேண்டும்போது
நம் கண் முன்னால் தோன்றுவதில்லை
அவைகளின் தரிசனத்திற்கெல்லாம்
ஒரு கொடுப்பினை வேண்டும் தானே !
ஒழுங்கு என்பது கானகத்தின் அசைவுகளில்
உயிர்கள் படிக்கும் பாடம்
இதை கைகளில் வாங்கும் போது
அது ஒரு கருங்குயிலாக மாறி கூவலாம்
பச்சைக்கிளியாக தாவலாம்
அல்லது பசி தாளாமல்
ஒரு கொடிய மிருகமாகவும் மாறி இருக்கலாம்
தாங்க முடியாத பச்சையத்தின்
நெடியில் பித்தேறி
நீயே அந்த வனாந்தரத்தில்
தொலைந்து போய்
உன்னை நீயே
தேடிக் கொண்டும் இருக்க கூடும் .
கவிதை 2
தீர்மானிப்பது
இந்தக் கைபேசியை பிடித்திருக்கும்போது
ஜிஎஸ்டியைப் போல் எகிறி
கொண்டிருக்கிறது என் பதற்றம்
இன்னும் என்னை நீ அழைத்த பாடில்லை
தொடுதிரையை தொடுவதற்கும் முன்பே
விரல்களை நிறுத்தி விடுகிறது இந்த அற்பமனது
இந்த நாட்டில் எல்லாமே
அரசியலாகப் போய்விட்டன.
ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்
மலிவாக அரசியல் செய்வதை தவிர்த்து
இப்போது ஆளுநர்களும்
அரசியல் செய்ய
ஆரம்பித்து விட்டார்கள்
இதில் நம் காதல் மட்டும்
அரசியல் செய்யாமல் போய்விடுமா என்ன ?
செம்புலப் பெயல் நீர் போல் இருந்த நீ
அற்றைத் திங்களாக ஆகிவிட்டாய்
அன்புடை நெஞ்சம் கலந்திருந்த நானும்
யாராகியரோ ஆகிவிட்டேன்
தொலைக்காட்சியில்
சேனல்களை மாற்றுவது போல்
நம் காதலின் அலைவரிசைகளையும்
மாற்றிக் கொண்டிருக்கிறான்
யாரோ ஒருவன்
எப்படி காதலிக்க வேண்டும் என்று
நாம் கேட்காத போதும்
காதலை சமைப்பது
எப்படி என்ற ஆலோசனைகளை
வாரி வாரி
வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இந்த தேசத்தில்
நம் ரசனைகளை
நாமே தீர்மானிக்க முடிவதில்லை
நம் நேசத்தை நாமே
உறுதிப்படுத்த முடிவதில்லை
நம் கடவுளர்களைக் கூட
நாமே வணங்க முடிவதில்லை
இந்நிலையில் நம் காதலை மட்டும்
நாமே தீர்மானிக்க முடியுமென்று
அசட்டுத்தனமாக
நீ நம்பலாமா சொல் ?
கவிதை 3
.
புலம் பெயர்தல்
புலம் பெயர்ந்து போகிறது
பறவையாக இந்த மனது
வானம் என்பதும்
நீரற்ற கடல் தான் என்பதை
கண்டுகொண்ட நொடியில்
வாழ்க்கையைத் திரவமாக்கி
கரைத்து விடத்தோன்றுகிறது
அற்றைத் திங்கள்
சிறகு விரித்தாடியதும்
அலகோடு அலகு புதைத்து
ஆனந்தக் கூத்தாடியதும்
ஞாபகத்தில் இருக்கும்
ஒரு கனவேயன்றி
வேறொன்றில்லை
கடவுளே உயிர்ப்ப என்பது என்ன?
வாழ்க்கை என்ற கற்பாறையின் மீது
மோதி மோதி
துயரத்தில் தன்னை கரைத்துக் கொண்டு
நேசிக்கும் இதயங்களுக்கு
தன்னை விண்டு விண்டு தரும்
ஒரு கொடை என்பது தானோ !
