மீ. விசுவநாதன் 3 கவிதைகள்

இன்று அரங்கில் வாசித்த கவிதைகள்.

  1. “அன்பே வெல்லட்டும்”

உலகில் அமைதி பரவட்டும்
உணர்வில் மனிதம் பெருகட்டும்
அலறும் குரல்கள் இல்லாத
அகில மாக விளங்கட்டும்
புலரும் பொழுதே புவிநிமிர
பூபா ளமிசை ஒலிக்கட்டும்
அலையும் சக்தி ஆக்கமுற
அறிவை அன்பே வெல்லட்டும்.
(12.03.2026)

  1. அம்மாவின் புடவை”

பிறந்த மேனியாய்
இருந்த மேனியைத்
தாங்கிய தூளியே !

அம்மாவின் புடவை
அதுவே எனது
முதல் உடைமை

என்வாய் முதலில்
உமிழ்ந்த முதலே
“அம்மா” எனும்
தமிழ் அமுதே!

தவழும் போதும்
தடுமாறும் போதும்
தவம் நீ இருந்தாய்
தன்வயிறு மறந்தாய்
எனக்கான விருந்தாய்
என்வயிறு நிறைந்தாய்

உன்பயிறு என்னை
பொய்பூச்சி தின்னாமல்
புகழுச்சி தன்னை
எட்ட வைத்த அன்னை!
வெட்ட வெளிவானே
இட்ட முடன்வந்து
தொட்ட துளிதானே
பட்டு மனத்தாயே
நீ
விட்டுப் போன சேலை
தினம்
தொட்டுப் பார்க்கும் வேளை
பெத்த வயிற்றுப் பாசம்
பொங்கி
நித்தம் நின்று வீசும்

  1. “சிரிக்கும் குல இறையே”

பச்சை மலையழகே – செல்வப்
பக்க பலம்நீயே
உச்சம் உலகினிலே – என்றும்
உந்தன் உயிரன்பே

செக்கச் சிவந்தமுகம் – கொண்டு
சிரிக்கும் குலஇறையே
சொக்கத் தங்கமடி – நீயென்
சொர்க்க பூமியடி

ஆழி அலைநுரையை – கையில்
அள்ளி வருமழகே
நாழி கடந்தாலும் – வந்த
ஞானப் பெருவிருந்தே

சிட்டுக் குருவியென – நீயுன்
சின்ன வாய்திறப்பாய்
எட்டுத் திசையுயிர்கள் – காட்டி
இசையில் கரைத்திடுவாய்

பொம்மை விளையாட – என்னைப்
பொழுதும் அழைப்பாயே
இம்மை விளையாட்டில் – அந்த
இன்பம் வேறேது.

உன்னை நினைக்கையிலே – என்னுள்
ஊனம் இல்லையடி
என்னை உன்மடியே – என்றும்
ஈர்க்கும் தேசமடி

வளவ. துரையன் வாசித்த 4 கவிதைகள் – விருட்சம் நாளிதழ்

:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன