
க்ரைம் எழுத்தாளர் ரமேஷ்குமார், 1000வது நாவலை பாக்கெட் நாவலைப் பதிப்பிக்கும் அக்பருக்குக் கொடுக்க உள்ளார். இந்த நாவல் ஒரு பேய்க் கதை.
அவருக்கு இப்போது பேய்க் கதைகள்தான் எழுத வருகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தார் ஏன் இப்படிப் பொய்யா பேய்க் கதை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று.
‘ உங்கள் வாசகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறினான். பாக்கெட் நாவல் தயாரிப்பாளன் அக்பர். அவர் தயங்குவதைப் பார்த்து.
அன்று கதை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு போன் வந்தது. பொதுவாக அவர் எழுத ஆரம்பித்தால் ஒரே சிட்டிங்கில் நாவலை டைப் அடித்து விடுவார். அவ்வளவு வேகம். ஒரு கூட்டத்தில் அவர் பேச அழைத்தார்கள்.
‘ நான் ஆயிரமாவது நாவலை முடிக்கப் போகிறேன். ஆனால் எனக்கு எழுதுவது மட்டும்தான் தெரியும். எல்லாம் மறந்து விடும். இந்த நாவலை நீங்கள் எழுதினீர்களா என்று கேட்டால் மறந்து விடுவேன்’ என்றார்.
போனை எடுத்து காதில் பொருத்திக்கொண்டார். ‘ஹலோ’ என்றார் போன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது.
” யாரு?”
கொஞ்சம் கனைக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பிறகு மெதுவாப் பேசுகிற சப்தம் கேட்டது.
“நீங்க ஏன் பேய்க் கதைகளாக எழுதுகிறீர்.”
” எல்லோரும் விரும்பிப் படிக்கிறார்கள்.”

“நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா?”
இந்தக் கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
‘ இல்லை’ என்று முணுமுணுத்தபடியே கூறினார்.
” நீங்கள் எழுதுகிற பேய் அப்படித்தான் இருக்குமா?”
“தெரியாது.”
” அப்ப ஏன் பொய்யாய் எழுதுகிறீர்கள்?”
” நான் பேய்யைப் பார்க்க விரும்புகிறேன். எனக்குப் பேயைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.”
“நீங்கள் பேயைப் பார்க்கலாம். நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் போன் துண்டித்தது.”

இந்தக் கதையின் பிற்பகுதி எனக்குத் தெரியும்.
சொன்னபடியே எழுத்தாளர் வீட்டுக்குப் பேய் வந்தது. அப்போது எழுத்தாளர் வீட்டில் இல்லை. மனைவி குழந்தை மட்டும் இருந்தனர்.
குழந்தை விடாமல் அழுதுகொண்டே இருந்தது. “ஏண்டா இப்படி ப் பேய் மாதிரி கத்துகிறாய்?” என்று ஓங்கி ஓர் அறை கொடுத்தாள்.
அதைப் பார்த்த பேய் அஞ்சி நடுநடுங்கி காற்றோடு காற்றாக வெளியேறி விட்டது.
குழந்தையே அவளிடம் இவ்வளவு பாடும் போது அந்த எழுத்தாளர் என்ன பாடு படுகிறாரோ என்று பேய்க்கு அவர் மீது மிகுந்த அனுதாபம் எழுந்தது. அதன் விளைவாக எதிர்காலத்தில் அவர் பேய்க்கதை எழுத உட்கார்ந்தால் உடனே அவருடைய விரலில் அமர்ந்து கொண்டு தன் அனுபவத்தைக் கதையாக எழுதிவிடும்.
பதிப்பாளருக்கு அளவற்ற மகிழ்ச்சி. புத்தக விற்பனை பிய்த்துக் கொண்டு போயிற்று!
*பாடுபடும் போது