கௌரிசங்கர்/மேற்பார்வை

காலையில் எட்டு மணிக்கே கணேசன் வீட்டிற்கு வந்து விட்டான். மாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்று சொன்னான். வேலை அவ்வளவு கடினம் இல்லை. சுலபம் தான். மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். வேலை முடிந்தவுடன் சம்பளம் தந்து விடுவார்கள் என்றும் சொன்னான். ஏழு மணி நேர வேலை, அதுவும் மேற்பார்வை வேலை – இதற்கு மணிக்கு ரூபாய் நூறு என்று எழுநூறு ரூபாய் தருவதாகச்சொன்னான். அவன் சொன்ன ஒரே கண்டிஷன், மேக்கப் இல்லாமல் வரவேண்டும் என்றும், சாதாரண நூலை புடவை தான் கட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. மேற்பார்வை வேலை என்றால், கொஞ்சம் மிடுக்காக இருந்தால் தான் சரிப்படும் என்று எனக்கு தோன்றியது. இதற்கு முன்பு நூறு நாள் திட்டத்தில் வெறும் நூறு ரூபாய்க்கு நான் வேலை பார்க்கும்போது என்னுடைய மேற்பார்வையாளர் மினுக்கிக்கொண்டு தான் வருவார்.
கணேசனை நம்பி நான் வந்தேன். என்னை போன்று கிட்டத்தட்ட 500 பெண்கள் வந்தனர். வந்தவர்களை பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு வந்து வேலை செய்யும் இடத்தில இறக்கினர். பேருந்தில் செல்லும்போது சுட சுட காபி மற்றும் மிக்ஸர் தந்தனர். மெதுவாக என்பக்கத்தில் இருந்தவளை கேட்டேன். அவளும் மேற்பார்வை வேலைக்கு தான் வந்து கொண்டு இருப்பதாகச்சொன்னாள்.
அனைவரும் நாற்காலியில் அமர்ந்து இருந்தோம். ஒன்பது மணியில் இருந்து இரண்டு மணி வரை வேலை பற்றி சொல்லவேயில்லை. இரண்டு மணிக்கு சுமார் நாற்பது கார்கள் வந்தன. டர் புர் என்று சவுண்ட் கொடுத்துக்கொண்டு வந்த கார்களில் இருந்து மட மடவென்று நூறு நபர்கள் இறங்கினர். ஆளுக்கொன்று பேசினார்கள். அரை மணி நேரத்தில் மீண்டும் டர் புர் என்று அனைவரும் கார்களில் புறப்பட்டு சென்று விட்டனர்.
மணி மூன்று. வீட்டிற்கு செல்லவேண்டும். 200 ரூபாய் போக மீதி 500 ரூபாய் கணேசன் தந்து விட்டான்.
பிறகென்ன ? போகவேண்டியது தானே ?
சுட சுட பிரியாணி வந்து கொண்டு இருப்பதாக சொன்னார்கள்.
தேர்தல் வந்தாலே நம்மளை கையில் கண்டு பிடிக்க முடியாதுங்கோ.