சுந்தரபாண்டியன்/ஹவுஸ் ஓய்ப்பும் ஆபீஸ் ஓய்ப்பும்

ஹெட்மாஸ்டர் அழைத்தபோது ரகுவால் போகாமல் இருக்க முடியவில்லை. போய்தான் ஆக வேண்டும். அவனுக்கு அவர் என் கூப்பிடுகிறார் என்று முழுவதுமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாகப் புரிந்தது, வீட்டில் ஸ்கூலுக்குப் புறப்பட்டபோதே புகைந்தது:
“சாயங்காலம் எத்தனை மணிக்கு வருலிங்கா?”
“எதுக்கு?”
“இல்ல… இன்றைக்கு கோவிலுக்குப் போசுணும் எனக்கு பெர்த்டே” என்றாள் லட்சுமி.
“சரி பாக்கிறேன்.”
” என்ன பாக்கிறேன்…வேற எங்காவது போகணுமா?”
” புக் ஷாப்புக்கு போசுலாம்னு.”
“சந்திரா சொன்னாளா?”
“நீ என்ன சொல்றே”
“எனக்குச் தெரியாதா நீங்க அடிக்கிற சொட்டம் போனவாரம் ரெண்டு பேரும் தாஜ்ல போய் சாப்பிட்டிருக்கீங்சு”
கூட மோகனும் வந்தான். அவனுக்கு புரமோஷன் அதுக்காக பார்டி கொடுத்தான்.
“அதுக்கு முந்துன வாரம் அவள கார்ல எத்திக்கிட்டு ஜெய நகர் போனீங்களா?”
“ஆமா கொலிக்குக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு ஆஸ்பத்திரியில இருந்தான். பார்க்கப் புறப்பட்டேன், சந்திரா, கூட வரட்டுமான்னு கேட்டா, மறுத்தா டீசன்டா இருக்குமா? கூட்டிட்டுப்போனேன். இதுல என்ன தப்பு?”
“தப்பு சரிங்கறது இல்ல. , பிரச்சனை. அவா அவ புருஷன் கூட போக மாட்டாளா? புருஷன் இருக்கத்தானே செய்றான்.”
“இருக்காரு. சடன்னா கிளம்புனோம். ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னா என்ன செய்ய முடியும்?”
“எனக்கு எல்லாம் தெரியும். என்ன ஏமாத்த முடியாது. நான் வேணும்னா உங்கள மாதிரி படிக்காதவளா இருக்கலாம். அதுக்காக எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினைக்க வேண்டாம். பனைமரத்துக்கடியில் நின்னு பால் குடிச்சாலும் கள்ளாத்தான் தோணும்.”
“பால் குடிக்க எதுக்கு பனைமரத்தடிக்குப் போகணும்? வீடு இல்லையா? வாசல் இல்லையா? இல்ல பாலும் இல்லையா? உங்க கதையே வேற.”
“என்ன கத?”
“பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடித்தால் யாருக்கும் தெரியாது என்று நினைக்குமாம். இப்ப உங்க கதையும் அந்தக் கததான்.”
“நான் பூனையும் இல்ல. பாலும் குடிக்கல. நீ தப்பா நினைக்கிற. கூட வேலை பார்க்குறவங்களோட பேசுவோம், சிரிப்போம், அங்கிட்டு இங்கிட்டு போவோம் வருவோம். இத தப்பா நினைக்கலாமா?”
“சரி, நான் அப்படி செஞ்சா…”
“எப்படி?”
“நம்ம பண்ணை வீட்டில் வேலை பார்க்குறவங்களோட பேசினா, சிரிச்சா…”
“உனக்கு அவ்வளவு கொழுப்பாடி, தேவடியா… கொளுத்திப் புடுவேன், கொளுத்தி!”
அவன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். வழக்கமாக கேட்டைத் திறந்து விடுவாள். அன்றைக்கு அவள் ஷோபாவில் போய் தலை கவிழ்ந்து கொண்டாள். அவனே கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். பிறகு காரை விட்டு இறங்கி கதவை மூடினான். நல்ல வசதியான குடும்பம்; வாத்தியார் வேலை சும்மா ‘டைம் பாஸிங்’.
அவனது மனசாட்சி கொஞ்சம் குத்தியது. தான் செய்வது தப்புதானோ? தன்னை போலவே தன் மனைவி சுற்றினால் தன்னால் அனுமதிக்க முடியுமா? தான் சுற்றுவது மட்டுமா?
அவள் ஒரு நாள் வராவிட்டால் மனசு என்ன பாடுபடுகிறது. அவள் அருகில் இருந்தாலேயே ஒரு இதம், அவள் பேசினால் ஒரு சுகம், அவள் சிரித்தால் ஒரு ஆனந்தம். ஏன் இப்படி? அவள் தோழி மட்டும்தானா?
அன்று சந்திரா ரொம்ப டல்லாகத்தான் வந்தாள். முகம் என்னவோ வீங்கியது போல் தோன்றியது. ராத்திரி முழுவதும் அழுதிருக்க வேண்டும். அவள் புருஷன் அவளை அடித்திருக்கலாம். அல்லது அழ வைப்பது போல கடுமையாகப் பேசி இருக்கலாம்.
“என்ன விஷயம்?”
“வழக்கம்போல்தான். வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது.”
“நீதானே அந்த முருங்க மரம்.”
அந்த சோகத்திலும் அவள் வாய்விட்டு சிரித்தாள். அந்த வல்கரான ஜோக் கூட அவளுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
“சே… நீங்க ரொம்ப மோசம்.”
“பாவம் வேதாளம். வேற எங்கத்தான் ஏறும்?”
அவள் முகம் சிவந்தது. பதில் ஒன்றும் பேசவில்லை. சட்டென்று முகம் இறுகியது.
“அவர் என்னவெல்லாம் பேசுகிறார்?”
“என்ன சொன்னார்?”
“நாள் ஒரு நாள் உங்களோடு எங்காவது ஓடிப் போய் விடுவேனாம்.”
“அப்புறம்…”
“கதையா சொல்றேன்… அப்பும் இப்புறம்னு…” கோபித்துக் கொண்டாள்.
“எங்க வீட்டிலும் இதே பிரச்னைதான். உன்னோடு பேசக் கூடாதாம்… பேசாம டைவர்ஸ் பண்ணி விடலாமா என்று பார்க்கிறேன்.”
“ஆர் யூ சீரியஸ்?”
ரகுவால் பதில் சொல்ல முடியவில்லை.
ரகுவின் மனைவி வீட்டில் வாஷிங் மிஷினை ஸ்டார்ட் பண்ணி விட்டாள். தண்ணீர் நிரப்பினாள். துணிகளைத் திணித்துக் கொண்டிருக்கும்போது துழாவினாள். அவனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளே இரண்டு சினிமா டிக்கெட்டுகள் இருந்தன. அது மூன்று நாளைக்கு முன்னால் ‘கேலக்ஸி’யில் வாங்கியது. நூன் ஷோவுக்குரியது. அன்று புதன் கிழமை. வீட்டுக்கும் லேட்டாக வந்தார். கேட்டபோது மீட்டிங் என்றார். அவளது சந்தேகம் புகைய ஆரம்பித்தது.
அவள் உடனே ஸ்கூலில் உள்ள ரகுவிடம் போனில் பேசினாள். அவன் இல்லை. சந்திராவைக் கூப்பிடச் சொன்னாள். அவளும் இல்லை. அவள் சந்தேகம் வலுத்தது. உடனே ஆட்டோ பிடித்து ஸ்கூலிற்கு வந்தாள். அப்போது மணி மூன்றரை. ஸ்கூலில் உள்ளவர்கள் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அமைதியாக இருந்தது.
அவள் நேராக ஹெட்மாஸ்டர் அறைக்குப் போனாள். கேபின் கண்ணாடி தடுப்பு வெளியே உள்ளவர்களுக்கு அவள் கோபம் கோபமாகப் பேசுவது போல் தெரிந்தது. ஆனால் பேசுவது புரியவில்லை.
அப்போது காரிலிருந்து ரகுவும் சந்திராவும் இறங்கி பீடாவை சுவைத்த வண்ணம் உள்ளே நுழைந்தனர். கேபினுக்குள் மனைவியைப் பார்த்ததும் ரகுவின் இதயம் ஒரு விநாடி நின்று பிறகு ஓட ஆரம்பித்தது. சந்திராவிற்கு முகத்தில் கருமை படர, பீடாவை விழுங்கவோ துப்பவோ முடியாமல் தவித்தாள்.
ஸ்கூல் ஊழியர்கள் மூன்று பேரையும் மாறி மாறி பார்த்தார்கள். புயலா, பூகம்பமா, ஊழியா, உத்பவமா என்ன ஆகும் என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
ஹெட்மாஸ்டர் அவர்களைக் கேபினுக்குள் கூப்பிட்டார். ஏ.சி. இருந்தாலும் கூட அவனுக்கு வேர்த்தது. அவளுக்கு நிர்வாணமாக நடப்பது போல் தோன்றியது.
அவர்களை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தார்கள். நடுவில் ரகுவும், இரண்டு பக்கத்தில் இரு பெண்களும் இருப்பதைப் பார்த்து ஊழியர்களுக்கு பாமா ருக்மணியோடு கிருஷ்ணனைப் பார்ப்பது போல் இருந்தது. அவர்களைப் பற்றி இவர்கள் பேசாத நேரமில்லை.
“ரகு குடுத்து வைத்தவன். ஒண்ணுக்கு ரெண்டு”. “ஒண்ணு ஹவுஸ் ஒய்ப். இன்னொன்று ஆபீஸ் ஒய்ப்’.
“மச்சம் இருக்கணும்”.
இவன்தான் ஆம்பள. எப்படியும் இருப்பான். இவளுக்கென்ன வந்தது? உடல் கொளுப்பு. ஒரு புருசன் காணாதா?”
“அவனுக்கென்ன குறை?”
“அவனே குறைதானப்பா!”
“என்ன சொல்லுற?”
“இவா பி.ஏ. படிச்சிட்டு பி.எட்… எழுதியவா. ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம். வாட்ட சாட்டமான உடம்பு. அவனோ எஸ்.எஸ்.எல்.சி. பெயில். கிராமத்துக்காரன். வேலை என்று எதுவும் இல்லை. இருந்தாலும் அவன் பார்க்காத வேலையே இல்லையாம்’.
“அவன் தானப்பா ஹஸ்பண்ட்”.
“அவன் ஹஸ்பண்ட் இல்லப்பா, ஹவுஸ்பெண்ட். ஹவுஸ்ல பெண்டு எடுத்துடுறா”.
“தன் பொண்டாட்டிய இந்த மாதிரி அலைய உட்டுட்டு ஒரு ஆம்பள உலகத்தில் இருப்பானா?”
“ஒருவேளை மாமாவோ மாப்பிள்ளையோ”.
“நமக்கெதுக்குப்பா இந்தப் பிரச்சனை. அவங்க பிரண்ட்ஸாகூட இருக்கலாம். இல்லியா?”
“ஆம்பிளையும் பொம்பளையும் பிரண்ட்ஸா?”
“ஏன் இருக்கக் கூடாது. ஆம்பளை ஆம்பளை கூடவும், பொம்பளை பொம்பளை கூடவும்தான் பிரண்ட்ஷிப்பா இருக்கணுமா?”
“ஓம் பொண்டாட்டி கூட யாராவது பழகுனா நீ உட்ருவியா?” இவை அவர்களால் பேசப்பட்டவை, பேசப்படுகிறவை; இனியும் பேசப்படுபவை. நரம்பில்லாத நாக்கு. நாலும் பேசும். மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் எதுக்கு?
உள்ளே ரகுவின் மனைவி லட்சுமி சினிமா டிக்கட்டை எடுத்து மேஜையின்மேல் வைத்து விட்டு “இது ஏது என்று கேளுங்கள்”
என்று கடைசியாகக் கேட்டாள்.
“ சார், நானும் தர்மலிங்கமும் அன்னைக்கு படத்துக்குப் போனோம், போனோம். உண்டா இல்லையா என்று கேளுங்கள்,” என்றார். தர்மலிங்கத்தை கூப்பிட்டார்கள். அவன் கணக்கு வாத்தியார். ஒத்துக் கொண்டான்.
லட்சுமிக்கு அவமானமாக இருந்தது. எங்கோ தப்பு செய்து விட்டோம் என்ற உணர்வு தோன்றியது. இவ்வளவு நேரமும் என்னவெல்லாம் பேசிவிட்டாள்.
“இவரெல்லாம் வாத்தியாராங்க. ஒரு பொண்டாட்டி குத்துக் கல்லுபோல இருக்கும் போது இவருக்கு எதுக்கு இன்னொரு வப்பாட்டி? எனக்கு எதுல குறை? கூடப் பொறப்பு போல நினைச்சு உங்களிடம் கேட்கிறேன், சொல்லுங்க. எங்க ஊர்ல பெரியவங்க சொல்வாங்க—கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணும்னு சொன்னது சரியாத்தான் இருக்குது. நீங்களே கேட்டுச் சொல்லுங்க.”
“என்னம்மா இப்படி சொல்றீங்க?” இங்க எல்லாரும் படிச்சவங்க. நீ நினைக்கிற மாதிரி ஒன்றுமில்லை. எல்லாரும் சோஷியலா பேசிக்கிடுவாங்க, பழகிக்கிடுவாங்க. மத்தபடி ஒண்ணும் இல்லீங்க. உங்களை தங்கச்சி மாதிரி நினைச்சு சொல்றேன்—வீட்டுக்கு போங்க,” என்று சமாதானப்படுத்தினார்.
நான்கு மணி பள்ளிக்கூடம் முடிந்தது. பலர் கூடினர். அவள் சமாதானம் ஆகவில்லை. ஆனால் தர்மலிங்கம் சொன்னதும் சமாதானம் ஆகிவிடலாம் போல் தோன்றியது.
“கார்ல கூட்டிட்டு அலையுறாங்களே! அது நியாயமா…?”
“அம்மா, கார்ல ஏற்றிட்டு போறதுல என்ன தப்பு? ஸ்கூட்டர் பைக்கின்னா ஓட்டிக்கிட்டு இருந்தாகணும், ஓட்டுறவனைப் பிடிச்சிக்கணும். இதுல அப்படியா? தூர தூரம்தான் இருக்கு. இதுக்குப் போயி கோபிச்சுக்கிட்டீங்கன்னா…”
அவள் மனசு டக்கென்று “சரிதானே” என்று நினைத்தது. இருந்தாலும் முழுவதும் சரியாகவில்லை.,..திடீரென்று “ எல்லாம் சரி ங்க இவர் இப்படி இவளுக்காகச் செலவழிச்சார்னா நானும் என் புள்ளைகளும் தெருவிலதான் நிப்போம். நீங்களே சொல்லுங்க.”
இதுவரை சும்மா இருந்த ரகு, “சார்… இன்னைக்கு இவங்க கல்யாண நாள். எனக்கு பார்ட்டி குடுத்தாங்க. இதுல என்ன தப்பு?
நான் ஒரு நாள்னா… இவங்க ஒரு நாள் இங்க எல்லாருமே இப்படித்தானுங்களே…” என்றான்.
“என்ன மன்னிச்சிருங்க. நான் தெரியாம பேசிட்டேன். எம்புருசன் தங்கமானவரு. நான்தான் முட்டாளு” என்று புலம்பினாள்.
“அம்மா சந்திரா. புண்ணியவதி… உன்ன வாய்க்கு வந்தபடி பேசிப்புட்டேன். மன்னிச்சுக்க… இது உன் கையில்ல. காலு…” என்று கரத்தைப் பிடித்தாள்.
அப்போது ஹீரோ ஹோண்டாவில் ஆறுமுகம் வந்து இறங்கினான். அவனுக்கு இங்கு உள்ள கசமுசா என்னவோ ஏதோ என்று இருந்தது. உடனே சந்திராவிடம் “என்ன சந்திரா. என்ன என்று விஷயம். இந்தா ஸ்வீட்டு எல்லாத்துக்கும் குடு நம்ம மேரேஜ் டே இல்லியா” என்று ‘கான்டி’ ஸ்வீட்ஸை ஒரு கிலோ இருக்கும் தன் மனைவியிடம் கொடுத்தான்.
அவள் அதை எல்லோருக்கும் கொடுத்தாள். ரகு ஒன்றை எடுத்து ஒரே வாயாகப் போட்டுக் கொண்டான். லட்சுமிக்கு இரண்டு கொடுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் கரித்தது.
“லட்சுமி. உனக்கு பெர்த்டே இல்லியா… எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்தா என்ன?”
ஓ குடுக்கலாமே…”
“தர்மலிங்கம். இந்தா போய் நீல்கிரீஸ்ல ஒரு கிலோ கேக்கும் சாக்லெட்டும் வாங்கிட்டு வா…” என்றான்.
அவனிடம் இரண்டு நூறு ரூபாய் நோட்டு எடுத்துக் கொடுத்தான். அதனை அவன் வாங்கிக் கொண்டு கள்ளச் சிரிப்பு சிரித்தவண்ணம் போனான்.
ஹெட்மாĪடர் சத்தமாக “கேண்டில்ஸ் வாங்கிட்டு வாங்க… இங்கேயே பெர்த்டே கொண்டாடலாம்” என்றார்.
லட்சுமி அரைமணி நேரத்துக்குப் பிறகு கேண்டில்ஸை ஊதி அணைத்துவிட்டு கேக்கே வெட்டினாள். அப்போது எல்லோரும் “ஹேப்பி பெர்த்டே டூ லட்சுமி” என்று பாடினார்கள். எல்லாரும் வாய்விட்டு மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். கேக்கை வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுத்தனர்.
உடனே சந்திரா தன் கையில் கையில் உள்ள மோதிரத்தைக் சழற்றி லட்சுமிக்குப் போட்டு “இது என்னுடைய பெர்த்டே பிரசண்டேஷன்” என்றாள்.
சட்டென்று லட்சுமியும் “தன் வளையலைக் கழற்றி சந்திராவுக்குப் போட்டு இது எனது கல்யாண நாள் பரிசு” என்றாள்.
ரகுவுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் சந்தோஷம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. நல்லவேளை தர்மலிங்கம் மறுக்காமல் ஒத்துக் கொண்டான். நாளைக்கு நூறு ரூபாய் குடுத்தால் ரம்மும் சிக்கன் பிரியாணியும் சாப்பிடுவான் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
ஆறுமுகமோ “வீட்டுக்கு வாடி கவனிச்சிக்கிடுறேன். ஆடுரியா… ஆடு ஆடு… நீ எனக்கு ஒரு சுஜுபி. உங்கத எனக்கு தெரியாதா. நான் ஊரையே வித்தவண்டி…என்ன விக்க பாக்குறியா. கழுத எனக்கு நீ வேண்டாம், உன் சம்பளம் போதும். அது மூலம் எனக்கு சீட்டாட்ட கிளப், ஜுபிலிபார், காபரே ஆடுற ஷிலா, கவலையே இல்லாத சாப்பாடு, துணிமணி எல்லாம் கெடைக்குது… இது போதும் எனக்கு நீ யாரு கூட போனா என்ன எவங்கூடப் படுத்தா என்ன…” என்று நினைத்துக் கொண்டான்.
“இனிம கொஞ்சம் ஒளிவு மறைவா இருக்க வேண்டியதுதான். இவ்வளவு பப்ளிக்காக இருக்கக்கூடாது. லட்சுமி ஒரு அப்பாவி. அவள ரொம்பநாள் ஏமாத்த முடியாது. ஆறுமுகம் பேருக்குத்தான் புருஷன். ஏதாவது ஏறுக்கு மாறு நடந்தா கழட்டி உட்டுற வேண்டியதுதான்…” என்று சந்திராவின் மனஓட்டம் இருந்தது.
“மலைபோல வந்தது பனிபோல போயிடுச்சி நல்லவேளை… ஊரூல இருக்குற மாரியாத்தா காப்பாதுனா…ஒரு மனுஷி எத வேணும்னாலும் விட்டுக் குடுத்துருவா. புருஷன விட்டுக் குடுப்பாளா? இருந்தாலும் எனக்கு இவ்வளவு அவசரம் கூடாது…” என்று நினைத்தாள்.
“இப்பதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது ஸ்கூல் அல்ல. ஒரு குடும்பம் மாதிரி. இதுல சண்டை சச்சரவு வரும்தான். ஆனா பெரிசு படுத்தக்கூடாது…” என்று சொன்னார். அடுத்த ஆண்டு ரிட்டையர் ஆகப் போகும் ஹெட்மாஸ்டர் சுந்தரராஜன்.

“அப்ப வரட்டுமா?” ரகு கிளம்பினான். லட்சுமி அவன் பின்னால் பசு போல சென்றாள். ஆறுமுகம் அருகில் வந்தான். “வரட்டுமா?” என்று கேட்டான். அந்தக் கேள்விக்குள் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் மறைந்து கிடந்தன.
“வர்றேன்…ஹேப்பி மேரேஜ்டே” என்று கூறி சந்திராவுக்கு மட்டும் தெரியும்படி கண்ணைச் சிமிட்டினான்.
ஆறுமுகத்திற்குத் தெரியாதா. “மவனே… இன்னிக்கு தப்பிச்ச இரு… இரு உனக்கு வைக்கிறேன் ஆப்பு” என்று கறுவிக்
கொண்டான்.
இருந்தாலும் “எந்தக் கோயிலுக்கு போறீங்க. இன்னிக்கு ஒய்புக்கு பெர்த்டே ஆச்சுங்களே” என்று ஆறுமுகம் அமுத்தலாகக்
கேட்டான்.
“அல்சூர் முருகன் கோயிலுக்கு… வருசா வருசம் அங்கதான் போவோம்…” என்று வெள்ளையாக சொன்னாள் புன்னகையோடு. “நீங்க எந்தக் கோயிலுக்குப் போவீங்க… கல்யாண நாள்
ஆச்சே”.
‘அதுவா திரௌபதை யம்மன் கோவிலுக்கு” என்றான் ஆறுமுகம், சந்திராவை ஒரு சைசாக பார்த்துக் கொண்டு.
“வர்றேன் ப்ரதர்” என்று ரகு சொன்னபோது ‘ப்ரதர்’ என்ற போல் வார்த்தையை அளவுக்கு அளவுக்கு அதிகமாக அழுத்தியது சந்திராவுக்குத் தோன்றியது.
அவள் புருஷன் பின்னால் நடந்தபோது காலடியில் ‘கனல் துண்டுகள்’ குளிர்ந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன