சு. சமுத்திரம் /தாழம்பூ

அத்தியாயம் 1

தோளுக்கு மேலே பின்புறமாய் வளைந்திருந்த ஒரு கையில் தொங்கிக்கொண்டிருந்த கோணிப் பை, அவளது முதுகுக்கு உறைபோல ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஆடியத. கண்ணாடி மாதிரியான கோணி, அடியில் கனத்துக்கிடந்தது. மறு கையோ மூன்றடி நீளமும், முருங்கக்காய் பருமானமும் கொண்ட ஒரு இரும்புக் கம்பியை, அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் சர்தார்ஜி காப்புகள் மாதிரியான ‘கங்கண’ வளையல்கள். சட்டை என்று தள்ளவோ, ஜாக்கெட் என்று கொள்ளவோ முடியாத மேல் பாக உடுப்பு, முட்டிக் கைகள் வரை, முட்டி, இடுப்பு வரைக்கும் நீண்டு, இடையை பெல்ட்போல் சுற்றிக்கொண்டிருந்தது. அழுக்கே ஒரு நிறமாகக் கொண்டது போன்ற களிமண் நிற ஆடை. இடுப்புக்குக் கீழே இருந்து குதிகால்வரை வியாபித்த சிமெண்ட் நிறப் பாவாடை… அதில் இடையிடையே சதுரஞ் சதுரமான சின்னச்சின்ன கண்ணாடிகள். வாழைக் குலையிலிருந்து மேல்போக்காய் விடுபட்ட வாழை இலை போன்று மார்பில் பட்டும் படாமலும் இருந்த தாவணி. காதுகளில் கம்மல்களும், அந்தக் கம்மல்களில் தொங்கிய வளையங்களுமாய்…

சரோசா, அந்தப் பங்களாவில் ‘படிதாண்டிய’ பெண் போல் நாணிக்கோணி நின்ற தென்னை மரத்தில், கைக்கு எட்டாத. உயரத்தில் ஒரு தேங்காய் குலை மீது கண் வைத்து எம்பி எம்பிக் குதித்தாள். அவள் கைபட்டு, கைபட்டு, அது மேலே போனதே தவிர அந்தக் கைக்குள் அடங்கவில்லை. ஏதோ, தப்பு செய்துவிட்டது போல தலையில் அடித்துவிட்டு, பிறகு கையில் இருந்த இரும்புக் கம்பியை ஓங்கி, ஒரு ‘குலையில்’ ஒரு போடு போட்டாள். ஐந்து தேங்காய்கள் அந்த வீட்டுக்கு உள்ளேயும், ஆறு வெளியேயும் விழுந்தன. ஆறு தோங்காயையும் பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, போகப் போனவளுக்கு, ‘அம்மாம் பெரிசு’ தேங்காய்களை வீட்டுக்குரியவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போக மனமில்லை. கீழே குனிந்து, இரும்பு கேட்டின் ஓட்டைகள் வழியாக உள்ளே பார்த்தாள். வெளியே நடக்கும் எதையும் பார்க்கப் போவதில்லை என்பதுபோல, அந்த வீட்டுக்குள்ளேயே இருந்த சோபா செட்டு ஆசாமிகள் வாயும், வயிறுமாய், டி.வியும், கண்ணுமாய், சாய்ந்து கிடந்தார்கள்.

சரோசா, ஆமை நகர்வதுபோல, கேட்டை நகர்த்தி, உள்ளே போனபோது, தாழ்வாரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த, சடைநாய், பலமாய் குரைத்தது. சமையல் அறைக்குள் தட்டுமுட்டு சாமான்களோடு, தடுமாறிக் கொண்டிருந்த மாமி, அது ‘டி.வி. நாய்’ என்று அனுமானித்து, எட்டிப் பார்க்கவில்லை. அந்தச் சமயம் பார்த்து மிக்ஸியை தட்டிவிட, அது போட்ட கூச்சலில், நாய் சத்தம் உள்ளே இருந்தவர்கள் காதில் உரசவில்லை. இதற்குள், சரோசா ஆறு தேங்காய்களோடு மேலும் ஐந்து தேங்காய்களையும் பையினுள் போட்டுக் கொண்டு, கைக்கு எட்டிய ஒரு கொய்யாப் பழத்தைப் பறித்து அணில் மாதிரி கொரித்துக் கொண்டு வெளியேறப் போனாள். அந்தச் சடை நாய் எம்பி எம்பிக் குலைத்தது. உடனே, இவள் உள்ளே கிடந்த தேங்காயை எடுத்து அதன் மேல் எறியப் போவதுபோல் பாவலா செய்தாள். அது நிசமாகவே ஒரு ‘சடைதான்’; உடனே பம்மிக் கொண்டு, வாலாட்டியது.

சரோசா, அந்த இரண்டாவது குறுக்குத் தெருவில் தெற்காக நடந்து, கிழக்காகத் திரும்பி நின்றாள். ஒரு குண்டுகுழி காலிமனை, தாலி மாதிரியான வேலிச் சுவரோடு வெறிச்சோடிக் கிடந்தது. அந்தப் பக்கமாகப் போனாள். வேலிச் சுவரைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தாள். இரண்டாவது குறுக்குத் தெருவில், ஆள் அரவம் தெரியவில்லை. பகல் ஒரு மணி என்பதால், அதையே நள்ளிரவாக அனுமானித்து, பங்களாக்காரிகள் தூங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள்.

காலிமனைச் சுவரில் வேல் வடிவத்திலும் சுண்ணாம்பு டப்பா வடிவத்திலும் குத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சிதறல்களை கையை வைத்து ஆட்டி ஆட்டி எடுத்துப் போட்டாள். பிறகு, இரும்புக் கம்பியால் கண்ணாடிச் சிதறல்களை குத்திக் குத்தி சிதறடித்தாள். கோணிப் பை சுவரில் தாவி லாவகமாக நின்றாள். அவளைப் போலவே நின்ற ஒரு பூனை, அவள் வாயில் தொங்கிய கோணிப்பையை மிகப் பெரிய கோரப்பல்லாக அனுமானித்து, அவள் தன்னைத்தான் பிடித்துத் தின்ன நிற்கிறாள் என்று பயந்து கீழே குதிக்க, அந்தப் பூனை தன்னைப் பிடிக்கத்தான் தாவுகிறது என்று ஒரு மைனா குருவி ஆகாயத்தில் பறக்க, சரோசா எதிர் வீட்டுப் பங்களாவை பார்த்துவிட்டு ‘அடடே மயிலு’ என்று வாய்விட்டுப் பேசினாள். பிறகு, தப்புக்குத் தண்டனை கொடுப்பது போல தலையில் லேசாய் அடித்துக் கொண்டு தன்பாட்டுக்குப் பேசினாள்:

“அட கண்றாவியே.. பங்களாம்மா வீட்டு பச்சைப் புடவையை ஏதோவொரு ‘குடச’ வேலைக்காரி தோய்ச்சு, மாடிச் சுவர்ல போட்டிருக்காள். அது இன்னாடான்னா, தென்ன ஓல இடுக்கு வழியாய் பார்த்தால், மயிலு மாதிரி கீது. வாழ்வும் இது மாதிரி தானோ? அடடே! நான் கூட சினிமாவுக்கு வசனம் எழுதலாம்போல – சீ.. அந்தப் பொழப்பு சொதப்புற பொழப்பு… எவனாவது காலுல, கையில விழுந்தா, நடிக்கறதப்பத்தி யோசிக்கலாம். இன்னும் ரஜினிகாந்த் மாதிரி பொம்மனாட்டிங்க யாரும் வரலியே..”

சரோசா, அந்தச் சுவருக்கு அடுத்தபக்கம், வாளி மாதிரி இருந்த வட்டச்சுவரில் அதன் குறுக்காய் நின்ற இரும்புப் பிடியை பிடித்ததபடியே ஒரு காலை நீட்டிப் போட்டாள். அப்போது கால் தடுமாறி, அவள் அந்தக் கிணற்றுக்குள்ளேயே விழுந்திருப்பாள். நல்ல வேளை, அடுத்த காலையும், அங்கே போட்டு, கைப்பிடியை நழுவ விடாமல் ‘சைடில்’ குதித்தாள். ஏதோ ஒரு சினிமா ஸ்டண்ட் நடிகையை மனதில் நினைத்தபடி கைகால்களை உதறி விட்டுக்கொண்டாள். எதிரே, ஒரு பங்களா, கேட்க ஆளில்லாமல் கிடந்தது போல் இருந்தது. அந்த வீட்டுக்கார ஆசாமி குடும்பத்தோடு நேற்று ‘தொம்மாந்தூண்டு காரில்’ (மாருதி) பெட்டி படுக்கையோடு போனது போல் இருந்தது.

ஆப்பிரிக்க மக்களின் தலைமுடிபோல், தரையோடு சுருண்டு கிடந்த புற்கள் கால் உரச, தங்கரளிச் செடிகள் தோளுரச, கருவேல மரங்கள் தலையுரச, எருக்கம்பூக்கள் இடையுரச, அவள் அந்தப் பகுதி வழியாக நடந்து, மூன்றாவது குறுக்குத் தெருவில், நின்று நிதானித்த பிறகு, அந்தப் பங்களாவை நோக்கிப் போனாள்.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏப்பம் விடப்பட்டு, இப்போது வாங்கியவருக்கு குழி வெட்டக்கூடப் போதாத அளவுக்குக் கிடந்த ஒரு காலி மனை வழியாக இரும்பு வேலி போட்ட அந்தப் பங்களாவை நெருங்கினாள். நான்கைந்து சிமெண்ட் தூண்களுக்கு இடையே, வலைபோல் சன்னஞ் சன்னமாய் பின்னப்பட்ட இரும்புக் கம்பிகளை, கொய்யாக்காயை கடித்துக் கொண்டே பசியோடு பார்த்தாள். தரையில் பலமாகக் கால் ஊன்றி, இரண்டு கைகளால், அந்த இரும்பு வலைக் கம்பிகளை இழுத்தாள். ஏற்கனவே மக்கிப் போயிருந்த இரும்புக் கம்பிகள், தொடப் பொறுக்காதவைபோல் சரிந்தன. கோணல்மாணலாய், வட்ட வட்டமான அந்தக் கம்பி வலைகளை புடவையை மடிப்பது போல் மடித்து, வளைத்து, கோணிப் பையின் வயிற்றுக்குள் போட்டாள். மூன்றடி நீளமுள்ள சிமெண்ட் தூண்களில் பின்னிக் கிடந்த இரும்புக் கம்பிகள் மட்டும் அவள் இழுத்த இழுப்பிற்கு மசியவில்லை. அவள் உள்ளங்கையில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். அவளுக்கும் அதைப் பார்த்து ரத்தக் கோபம் வந்தது. இரும்புத் தடியை எடுத்து, சிமெண்ட் சுவர்களை தட்டித்தட்டி, மட்டந்தட்டி, அவற்றில் சுருண்டு கிடந்த கம்பிகளை குறுக்காகவும், நெடுக்காகவும் மடித்து ‘காவலிலிருந்து’ விடுவித்து கோணிப் பைக்குள் சிறைப் படுத்தினாள். பின்பக்கமுள்ள கதவைப் பெயர்க்கலாமா என்றும் யோசித்தபடி, தலையை தோளோடு சேர்த்து முன்னும் பின்னுமாக ஆட்டினாள். ஏதோ ஒரு சினிமாக்காரி, ஒரு படத்தில் இப்படி ஆட்டியதாக அவளுக்கு ஒரு ஞாபகம். பிறகு, ‘சீ… பாவம்’ என்று தனக்குள்ளேயே பேசியபடி, அந்த இடத்தைவிட்டு நிதானமாக வெளியேறப் போனபோது –

“ஏய்… நில்லுடி…”

சரோசா, கோணிப் பையை முதுகில் சாத்தியபடியே குரல் வந்த எதிர்த் திசையை நோக்கி ஏடாகூடமாய் பார்த்தாள். அங்கே குரல் கொடுத்துக்கொண்டிருந்தவளை விட, அந்த வீட்டின் முனையில் சவருக்கு மேலே உயர்ந்த பப்பாளிப் பழங்களே, அவள் கவனத்தைத் கவர்ந்தன.

“ஏய்… தடிமாடு… கோணிக்குள்ளே என்னடி வைச்சிருக்க? இங்க வாடி..!”

சரோசா, எதிர்த்திசையை எதிரித் திசையாகப் பார்த்தாள். பங்களா மாதிரி பெயர்ப் பலகையோ, நாயோ இல்லாமல், கிராமத்து வீடு மாதிரி ‘பேஜாரான’ சோடனைகளோடு, எருமை மாடு படுத்துக் கிடப்பது போல் இருந்த அந்த வீட்டை உற்றுப் பார்த்தாள். அதிலிருந்து வெளிப்பட்டவளின் தோற்றத்தைப் பார்த்து, சரோசா பதறவில்லை- யானாலும், பயந்து விட்டாள். வழக்கமான பங்களாக்காரிகள் மாதிரி இது தளதள கொழுகொழுக்காரி இல்லை. இறுகிப்போன உடம்பு. இளையராசா மெட்டு மாதிரி அடித் தொண்டைக் குரலு. ‘படா காலு, படாகையி ஒரு நாட்டுப்புறம், இந்த வீட்டுப் புறத்துக்கு வந்திருக்கு…

சரோசா, தனது அனுபவங்களை ஒட்டுமொத்தமாக உள்ளத்திற்குள் கொண்டு வந்தாள். முதலில், திருடிய இடத்தைவிட்டு எகிறணும். அப்பால அக்கம்பக்கத்து ‘கஸ்மாலங்க’ கூடும் முன்னால, கைகால விரிச்சுப்போட்டு ஓடாதது மாதிரியும், நடக்காதது மாதிரியும் போகணும். அதே சமயம், அந்த ‘கெய்விக்கு’ பயப்படாதது மாதிரியும் ‘தில்லா’ப் பார்க்கணும். ஆனாலும், அதுக்கு மரியாதி கொடுக்கிறது மாதிரி தலைய ஓரங்கட்டி லேசாச் சிரிச்சு நழுவணும்.

சரோசா, பழைய அனுபவங்களை செயல்படுத்தும் வகையில், அவளை ‘தில்லாய்’ பார்த்து, சும்மாங்காட்டியும் சிரித்து, நடந்த போது, எதிர்வீட்டு அம்மா, அவளுக்குப் புதிய அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறவள் போல்‘சாலையில்’ வந்து நின்றவளை இரண்டு கையையும் குறுக்காய் நீட்டி வழிமறித்து, வாயைப் பேசவிட்டாள்.

“ஏண்டி திருட்டு முண்ட! இந்த உடம்பை வைச்சுக்கிட்டு, இப்படி ஏண்டி பொழப்பு நடத்தறே? ஏண்டி ஆள் இல்லாத வீட்டுக்குள்ள போய் அடாவடியா இரும்புக் கம்பிய பிடுங்கற? இன்னும் என்னல்லாம் திருடினியோ? கோணிப் பைய திறந்து காட்டுடி. ஒன்ன மாதிரி திருடிங்கள், நடுரோட்டுல நிக்க வைச்சுச் சுடணும்.”

எதிர்வீட்டம்மா, பேச்சோடு நிற்கவில்லை. ஐம்பது வயதிலும் அந்த இருபது வயதுக்காரியை வீழ்த்த முடியும் என்ற உறுதியோடு, சரோசாவின் கோணிப்பையை பறிப்பதற்காக கையை நீட்டினாள். உடனே சரோசா கோணி மூட்டையை உடம்புக்கு முன்னாலும் பின்னாலும், தலைக்கு மேலும் கீழும் அங்குமிங்குமாய் ஆட்ட, எதிர்வீட்டம்மா, அது சுற்றிய சுற்றுக்கு ஏற்ப, கைகளை ஆகாயத்தில் துழாவ… அந்தக் கிழமும், இந்த இளமும் குச்சுப்புடி டான்ஸ் ஆடுவது போல் இருந்தது. அக்கம்பக்கத்து பங்களா ஜன்னல்களில் முகம் பதித்து நின்ற கண்கள், வாய்களையும் அகலமாக்கின. ஆனால், கண்கள்தான் தெரிந்தனவே தவிர, கால்கள் தெரியவில்லை. அவை எதிர்வீட்டு அம்மாவுக்கு ஆதரவாக வெளியே வரவும் இல்லை.

பங்களா பொம்மனாட்டிங்களோட பயந்த கண்களைப் பார்த்த சரோசாவுக்கு, லேசாய் தைரியம் வந்தது. ‘கெய்விக்கு’ நெத்தியடி கொடுத்தாத்தான், குயிக்கா போகலாம். ‘இல்லாங்காட்டி’ வம்புதான். சரோசா அவளை அடிக்கப் போவது போல், கையை ஓங்கியபடியே, கத்தினாள்:

“ஏய்… கெய்வி, நெஞ்சுல கீற மஞ்சாஞ் சோறு பிஞ்சிடும் பிஞ்சு. நானு இரும்புக் கம்பிய பொறுக்கறத பாத்தியாமே?”

“அடிப்பாவி! இரும்புக் கம்பிகள, சிமெண்ட் தூண்களை உடச்சி, கோணி மூட்டைக்குள்ள போட்டத நானே பார்த்தேன்! சீ … ஒனக்கு எதுக்குடி சேல? ஒனக்கு எதுக்குடி ஜாக்கெட்டு?”

“நீ இந்த வயசுல பிரா போடும் போது, நானு சின்னப் பொண்ணு சிங்காரிக்கப்படாதா? நல்ல நினைப்புமே உனக்கு. நானு பாவம் நாலு வீட்ல பேப்பர்ங்க பொறுக்கி கோணிக்குள்ள பூட்டு போய்க்கினே கீறேன். நீ இன்னடான்னா என்னப்போய் திருடின்னு சொல்ற?”

“அப்படின்னா, கோணிய திறந்து காட்டேண்டி…”

“ஏய்… கெய்வி, மரியாதியா அந்தாண்ட போ. இல்லாட்டி நடக்கறது வேற. அந்த வீட்டு, ‘பிச்சாத்து’, இரும்புக் கம்பிய பிச்சா என்னமே? வழி விடுறியா… இல்ல ஒத தின்னுறியா?”

எதிர்வீட்டம்மாவுக்கு, இன்னும் கிராமத்து மண் வாசனை போகவில்லைதான். ஆனாலும், அவளால் அடாவடியாய் பேசத்தான் முடிந்ததே தவிர, அடிதடியில் இறங்க மனமில்லை. அதோடு, இவள் அசல் ரவுடி மாதிரி தெரியுது. ஆளுதவி கிடைக்குமா என்று அந்தம்மா, அக்கம்பக்கம் பார்த்தாள். அத்தனை ஜன்னல்களும், ‘பட்டுபட்டு’ என்று மூடின. “அடிப்பாவிகளா” என்று அனைத்து வீடுகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கத்தினாள். பிறகு வீட்டுக்குள், தனது அருந்தவப் புதல்வி மல்லிகா இருப்பது நினைவுக்கு வந்தது. சரோசாவை கோணிப் பையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கத்தினாள். ‘திருடி… திருடி… ஓடியாங்க… ஓடியாங்க..!

ஆனாலும், சில வீடுகளில் வாசல்கள் திறக்கப்பட்டு சில பெண்கள் அவற்றை அடைத்து நின்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். ஆனால் வீதிக்கு வரவில்லை. காரணம், அவர்கள் வீடுகள் அசல் காம்பவுண்ட் சுவர்களால் அரண் கொண்டவை. இரும்புக் கம்பிகள் இல்லாத சுவர்க்காரிகள். அவர்கள் வந்த விதமும், பக்கத்து வீட்டுக் காரிகளை கையாட்டிக் கூப்பிட்ட தோரணையும் ஒரு சண்டை சினிமாவைப் பார்க்கப் போகிற ரசனையோடு நிற்பது போல் தோன்றியது. அந்த அம்மாவைப் பார்க்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை, அவளே வெற்றிபெற வேண்டுமென்று நினைப்பது போலவும் இருந்தது. எல்லோரையும் அடக்கி வைப்பது போல் அந்தத் தெருவே குலுங்கும்படி குரலெழுப்பும் அந்த அம்மாவுக்கு எதிர்க்குரல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வது போல் நின்றார்கள். சிலர் தொலைநோக்காய் பிரச்சினையை அணுகி வருத்தப்பட்டாலும், பலர் இந்த மாதிரியான சண்டைக்காக தத்தம் வீடுகளிலும் சில சில்லரைத் திருட்டுகள் நடந்தால்கூட பரவாயில்லை என்பது போல் பார்த்தார்கள்.

“ஏய் மல்லி! போலீசுக்கு போன் பண்ணிட்டு இங்க வாடி. முவள விடப்படாது. முதல்ல போன் போடு.”

போலீஸ் என்றதும், சரோசாவுக்கு லேசாய் பயம் பிடித்தது. ‘ஏரியா போலீஸ்’ என்றால் பயமில்லை. ஒருவேளை அவசர போலீசுன்னா, ஆபத்தாச்சே.

உள்ளே, ஒரு மாத நாவலை மெய்மறந்து படித்து, ஒரு கற்பனைக் காதலனுடனோ, அல்லது நிசக் காதலனை நினைத்துக் கொண்டோ, ரசித்துக் கிடந்த மல்லிகா, வெளிவந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே அவசர அவசரமாய் ஓடி, டெலிபோன் பக்கம் போனது தெரிந்தது. உடனே, அவள் அம்மாவும் திமிறிக்கொண்டிருந்த சரோசாவை வலுக் கட்டாயமாக, மூச்சுமுட்ட இழுத்துக் கொண்டிருந்தாள்.

சரோசா, வழிமறித்தவளை மல்லாக்கத் தள்ளப்போனாள். பிறகு அது கொலைக் கேசாகிவிடும் என்று அந்த நேரத்திலும் நினைத்து, அவள் ஒரு கையை பிடித்துத் திருகி, ஒரு ஓரமாகத் தள்ளி, அவள் இரண்டு கால்களையும் தனது கால்களால் தட்டிவிட்டு, கீழே ஆரஅமரக் கிடத்திவிட்டு, நடந்தாள்.

ஒரு கையை கீழே ஊன்றியபடி விழுந்த அந்தம்மா, அந்தக் கை ஒடிந்துவிட்டதா, அல்லது பிசகிவிட்டதா என்று தெரியாமல் அந்தக் கையையே பார்த்தபடி “அய்யோ, அம்மா, அய்யோ… அம்மா…” என்று அரற்றினாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. மல்லிகா அங்கே அலறியடித்து வந்து அம்மாவைத்தான் பிடித்தாளே தவிர, “அவளை பிடிடி, பிடிடி” என்று அந்த வேதனையிலும் ஒரு சாதனையை நடத்தச் சொன்ன தாய்காரியின் ஆணையை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. பாதி, பயம்; மீதி, அசல் சோம்பம்.

சரோசா, கை நழுவி விழுந்த கோணி மூட்டையை மீண்டும் தூக்கிக்கொண்டு எகிறிக் குதித்த சுவர் பக்கமாய் ஓடியபோது, அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், அம்மா கீழே கிடப்பதைப் பார்த்து வாகனத்தை ஆப் செய்யாமலேயே, நிறுத்தி வைத்துவிட்டு “என்னம்மா, என்னம்மா” என்று கேட்டுக்கொண்டே, அம்மாவை தூக்கப் போனான். அவளோ, மகன் கிடைத்த மகிழ்ச்சியில் வலியை கரைத்துக்கொண்டு ஆணையிட்டாள் :

“அதோ ஓடுறா பாரு… அவள் திருடி… கேடி… என்ன அடிச்சுப் போட்டுட்டு ஓடுறா. அவனைப் போய் பிடிச்சுட்டு வாடா. பிடிச்ச கையோட இங்க இழுத்துட்டு வாடா.”

சரோசாவை, தன் முன்னால் இழுத்துக்கொண்டு வரப்படும் வரை எழுந்திருக்கப் போவதில்லை என்பது போல், அம்மாக்காரி அப்படியே கிடந்தாள். மல்லி, அந்தச் சமயத்திலும், மாத நாவலின் ஒரு உச்சகட்டப் பகுதியை படித்துக் கொண்டு நின்றாள். ஆனால் தாய்சொல் தட்டாத தனயனான இளங்கோ ஓடினான். அவள் ஓடிய பக்கமாக அவளைவிட வேகமாக ஓடினான். இதற்குள், சரோசா அந்தக் கிணற்றுச் சுவரில் ஏறி, வேலிச்சுவரில் தாவி, வெற்றிக்களிப்போடு நின்றபடி அவனைப் பார்த்தாள். அவன் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அட்டகாசமாகச் சொன்னாள் :

“அடச்சீ… போடா… எச்சிக்கலை.”

சரோசா, அந்த சுவரிலிருந்து அடுத்த பக்கம் குதித்தாள். ஏற்கனவே அம்மா அடிபட்டதால் ஏற்பட்ட ஆத்திரம், இப்போது சரோசா கொடுத்தபட்டப் பெயரால் ஆவேசமாகி, இளங்கோவும், அடுத்த மூன்றாவது நிமிடம் அதே சுவரில் ஏறி அவளை மாதிரியே அடுத்த பக்கம் குதித்தான்.

(to be continued)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன