மயிலை சீனி. வேங்கடசாமி/கிறித்துவமும் தமிழும்



(கிறிஸ்தவரால் தமிழ்மொழிக்கு உண்டான
நன்மைகளைக் கூறும் நூல்)

  1. ஐரோப்பியர் வருகை

கிறித்துவராகிய ஐரோப்பியரின் தொடர்பினால் தமிழ் மொழிக்கு உண்டான வளர்ச்சியை ஆராய்வதே இந்நூலின் நோக்கம். அதனை ஆராயப் புகுவதற்கு முன் ஐரோப்பியரின் தொடர்பு எப்படி ஏற்பட்டதென்பதைத் தெரிவிப்பது முறையாகும். ஆகையால், ஐரோப்பியர் நமது தேசத்திற்கு வந்த வரலாற்றைச் சுருக்கமாக எழுதுவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல்நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் [உரோமர், கிரேக்கர்] என்னும் ஐரோப்பியக் குலத்தார் சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்டகசாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்துவைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார் [காவிரிப்பூம்பட்டினம்] முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22-இல், மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ்சீசர் [Augustus Caesar] என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ரேபொ [Strabo] என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ் வணிகத் தொடர்பு கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் [Hippalus] என்பவர், இந்து மாகடலில் வீசுகிற வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றைக் கண்டுபிடித்தார். இப் பருவக்காற்று வீசுகிற காலங்களிற் பிரயாணம் செய்வதால், மாலுமிகள் விரைவாகக் கப்பல்களைச் செலுத்திக் குறிப்பிட்ட இடங்களுக்கு ஏறக்குறையக் குறிப்பிட்ட காலத்திற் செல்லக் கூடியதாயிருந்தது. ஆகவே, யவன வணிகர்கள் அதிகமாகத் தமிழ்நாட்டிற்கு வரத் தலைப்பட்டார்கள். இவ் வணிகப் பெருக்கத்தினால் நமது தேசத்தாருக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது. “இந்தியா தேசம் ஏராளமான செல்வத்தை யவன தேசத்திலிருந்து ஆண்டுதோறும் கவர்ந்து கொள்கிறது.” என்று பிளினிஎன்னும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

இந்தத் தமிழர் – யவனர் வணிகத் தொடர்பைப்பற்றிப் புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களிலும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இந்தத் தொடர்பு வாணிகத் தோடுமட்டும் நின்றிருந்ததே தவிர சமயம், கலை, மொழி முதலியவைகளிற் சிறிதும் இடம்பெறவில்லை. யவனர் நம்முடன் நேர்முகமாகக் கொண்டிருந்த இந்த வணிகத்தொடர்பு கி.பி. 7-ஆம் நூற்றாண்டுவரையில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டில், அரபி தேசத்து முகமதியர்கள் எகிப்து, பாரசீகம் முதலிய நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு, யவனர் நமது தேசத்துடன் வைத்திருந்த நேர்முகமான வணிகத்தொடர்பு தடைப்பட்டு விட்டது. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முகமதியர் கடல்வழியையும் தரைவழியையும் கைப்பற்றி ஆதிக்கம் பெற்றதோடு, இந்திய வாணிகத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியப் பொருள்களை வாங்கிக் கொண்டுபோய் ஐரோப்பிய தேசங்களில் விற்பனை செய்வதாற் பெரும்பொருள் ஊதியங் கிடைப்பதைக் கண்டு, முகமதியர் ஐரோப்பியரை இந்தியாவுடன் நேர்முகமாக வாணிகம் செய்ய வொட்டாதபடி தடுத்துவிட்டார்கள். இவ்விதமாகப் பண்டைக்காலத்தில் ஐரோப்பியர் நமது தேசத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு அற்றுப் போயிற்று. முகம்மதியர் மலையாளக் கரையிற் பண்டகசாலைகளை அமைத்து, மிளகு முதலிய பொருள்களைச் சொற்ப விலைக்கு ஏராளமாய் வாங்கிச் சேமித்துவைத்து, அவற்றைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் வழியாகச் செங்கடலிற் சென்று, அங்கிருந்து தரை வழியாக சூயஸ், கெய்ரோ, அலக்ஸாந்திரியா முதலான நகரங்களின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டுபோய், ஒன்றுக்குப் பன்மடங்கு அதிகமாக விலைவைத்துச் சரக்குகளை விற்று, பெரும்பொருள் திரட்டினார்கள். வணிகத்தொழில் செய்யும் குலத்தார் எப்பொழுதும் செல்வந்தரா யிருப்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதன்படி, வியாபாரத் தொழிலில் ஈடுபட்ட முகம்மதியர் மேன்மேலும் செல்வம் பெற்றுச் சிறப்படைந்து விளங்கினார்கள். ஐரோப்பியர் இப்போது கைத்தொழில், நாகரிகம் முதலியவற்றில் சிறப்படைந்திருப்பது போல அக்காலத்திற் சிறப்புப் பெறாமல் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள். ஆகையால், ஆடை, முதலிய பல பொருள்கள் இந்தியா முதலிய கீழைத் தேசங்களிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுவந்தன. இதனால் இந்த வாணிகத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த முகம்மதியர் பெருஞ் செல்வம் சம்பாதித்ததில் வியப்பொன்றுமில்லை. இவ்வாறு சில நூற்றாண்டுகள் கழிந்தன.

இந்தியச் சரக்குகளை ஐரோப்பிய நாடுகளிற் கொண்டு போய் விற்பதனால் முகம்மதியர் செல்வம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வதைக் கண்ட ஐரோப்பிய தேசத்தார், தாங்களும் நேர்முகமாக இந்தியாவுடன் வாணிகஞ் செய்து பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆவல் கொண்டார்கள். ஆனால், இந்தியாவுக்குச் செல்லும்வழி முகம்மதியர் ஆதிக்கத்திலிருந்தபடியாலும், வேறு குலத்தார் இவ்வணிகத்தைக் கைக்கொள்ளாதபடி அவர்கள் (முகம்மதியர்) வெகு கருத்தாகக் காவல் செய்திருந்தபடியாலும், ஐரோப்பியரின் எண்ணம் கைகூடவில்லை. அக்காலத்தில் பூகோள நூல் தெரியாத படியால் வேறு வழியாக இந்தியாவுக்குச் செல்லும் வழியையும் ஐரோப்பியர் அறிந்திருக்க வில்லை. இந்தியா ஐரோப்பாவுக்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கின்ற தென்பதுமட்டும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அங்குச் செல்வதற்கு வேறு வழி தெரியாமல் திகைத்தனர். அக்காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் இந்தியாவைப்பற்றிப் பல கதைகள் வழங்கிவந்தன. இந்தியா தேசம் பூலோக சுவர்க்கம் என்றும், பணம் காய்க்கும் மரங்கள் அங்கே ஏராளமாக வளர்கின்றன என்றும், தேன் ஆறும், பால் ஆறும் கரை புரண்டோடுகின்றன என்றும் பலவிதமான செய்திகள் உலவிவந்தன. இவ்விதச் செய்திகளைக் கேட்டபோது ஐரோப்பியருக்கு நாவில் நீர் சுரந்தது. தேனாறும் பாலாறும் கரை புரண்டோடும் அந்தப் பூலோக சுவர்க்கத்தை, பணம் காய்க்கும் மரங்கள் வளருகிற வியப்பான இந்தியா தேசத்தைக் காணவேண்டும் என்றும், அத்தேசத்துடன் நேர்முகமாக வணிகத் தொடர்பு பெற்றுப் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றும் ஐரோப்பியர் ஆவலோடு விரும்பினார்கள். அக்காலத்தில் ஐரோப்பா முழுதும் இந்தியாவின் பேச்சாகவே இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எப்படிப் போவது? இந்தியாவுக்குச் செல்லும் வழியை முகம்மதியர் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, வேறு குலத்தார் அவ்வழியாகச் செல்லாதபடி, கண்ணை இமை காப்பதுபோல் காத்து வருகையில், ஐரோப்பியர் இந்து தேசம் செல்ல நினைத்தது, முடவன் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் இருந்தது.

இவ்வாறிருந்து வருகையில், பூகோள நூலைப்பற்றி ஆராய்ந்து வந்த அறிவாளிகள் பூமி அப்பளம்போல் தட்டையாக இருக்க வில்லை என்றும், பந்துபோல் உருண்டை வடிவாக இருக்கிறது என்றும் அறிந்தார்கள். ஆனால், இப்பூகோளநூல் உண்மையை மக்கள் ஒப்புக்கொள்வதற்கு நெடுநாள் சென்றது. கடைசியாக, போர்ச்சுகல் தேசத்தவராகிய கொலம்பஸ் என்பவர், இப் பூகோள நூல் உண்மையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா தேசத்திற்குச் செல்ல வேறொரு வழியைக் கண்டுபிடிக்கத் துணிந்தார். எப்படி என்றால், பூமி உருண்டையாயிருப்பதால், ஒருவன் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மேற்கு முகமாகப் பிரயாணம் செய்துகொண்டே போனால், கடைசியில் அவன் கிழக்குப் பக்கமாகத் தான் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்வான் என்னும் பூகோள நூல் உண்மையை மனத்திற்கொண்டு, இந்தியா தேசம் ஐரோப்பாவுக்குக் கிழக்கில் இருக்கிறபடியால், ஐரோப்பா விலிருந்து மேற்குப் பக்கமாய்ப் பிரயாணம் செய்து கொண்டு போனால், இந்தியா போய்ச் சேரலாம் என்று கொலம்பஸ் என்பவர் நம்பினார். ஆனால், அவர் சொல்லிய கருத்தை ஒருவரும் ஆதரிக்கவில்லை. கடைசியாக, மிகுந்த சிபாரிசின் மேல், ஸ்பெய்ன் தேசத்து அரசன் கொலம்பஸுக்கு உதவி செய்ய இசைந்து, சில கப்பல்களையும், மாலுமிகளையும் பிரயாணத்துக்கு வேண்டிய சாமான்களையும் கொடுத்துதவினான். கொலம்பஸ் ஸ்பெய்ன் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மேற்குப் பக்கமாய்க் கடலிற் பிரயாணம் செய்து கொண்டு போனார். சில நாட்கள் பிரயாணம் செய்த பிறகு, கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளையும், புதிய உலகம் என்னும் அமெரிக்காக் கண்டத்தையும் கண்டுபிடித்தார்.

ஆனால், கொலம்பஸ் அத் தீவுகள் இந்தியா தேசத்தைச் சேர்ந்தவை என்றும், அக் கண்டம் இந்தியா தேசம் என்றும் தவறாக நினைத்தார். அவர் தாம் கண்டுபிடித்த பூபாகம் இந்தியா தேசம்தான் என்கிற நம்பிக்கையுடன் இறந்தார். ஆனால், உண்மையில் அது இந்தியா தேசம் அன்று. “ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்” என்றபடி, கொலம்பஸ் இந்தியா தேசத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு செல்ல, தற்செயலாகப் புதிய பூபாகங்களைக் காணப் பெற்றார். கொலம்பஸ் புதிய உலகத்தைக் கண்டு பிடித்த செய்தி ஐரோப்பியர்களுக்குப் புதிய உணர்ச்சியை அளித்தது. ஏனைய ஐரோப்பிய சாதியாரும் இந்தியா தேசத்துக்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க ஊக்கங்கொண்டு முயற்சி செய்தார்கள். இவ்வாறு ஊக்கங்கொண்டவர்களில் போர்ச்சுகல் தேசத்தரசனும் ஒருவன். எமானுயெசி [Emanuel] என்னும் பெயருள்ள அந்த அரசன் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக் கொண்டு கிழக்கு முகமாகப் பிரயாணம் செய்தால், இந்தியா தேசம் போய்ச் சேரலாம் என்று நம்பிக்கை கொண்டவன். ஆகையால், அவ்வழியாகச் சென்று இந்தியா தேசத்தைக் கண்டுபிடிக்கும்படி வாஸ்கோ-டா-காமா என்பவரை அனுப்பினான்.

வாஸ்கோ-டா-காமா போர்ச்சுக்கல் தேசத்துத் துறைமுகப்பட்டினமாகிய லிஸ்பன் என்னும் பட்டினத்தை விட்டு 1497 ஆம் வருசம் சூலை மாதம் 9ஆம் நாள் புறப்பட்டுக் கடல் வழியாகச் சென்றபோது, எதிர்காற்றில் அகப்பட்டு அனேக இடர் இழிப்புகளுக் குட்பட்டார். ஆனாலும், மனந் தளராமல் மேன்மேலும் கப்பலை யோட்டிக் கொண்டு, ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கோடியாகிய நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கடந்து, அக் கண்டத்தின் கிழக்குக் கரையோரமாகப் பிரயாணம் செய்து, கடைசியில் மிலாண்டா [Milanda] என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்தார். அது அக் காலத்தில் பேர் பெற்ற துறைமுகப்பட்டினம். ஆகையால், இந்தியாவிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்திருந்தன. வாஸ்கோ-டா-காமா அங்கிருந்த ஒரு முகம்மதிய மாலுமியை இந்தியா தேசத்துக்கு வழி காட்டும்படி தம்முடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, அந்த முகம்மதிய மாலுமியின் உதவியால், கி.பி. 1498-ஆம் வருசம் மே மாதம் 22ஆம் நாள் மலையாளக்கரையில் உள்ள கள்ளிக் கோட்டை [Calicuti] என்னும் பட்டினத்தை அடைந்தார். யவனருக்குப் பிறகு வாணிபத்தின் பொருட்டு இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஐரோப்பியர் இவர் தாம். பிறகு, வாஸ்கோ-டா-காமா கள்ளிக்கோட்டையை அரசாண்டிருந்த சாமுத்திரி அரசனைக் [Zamorian] கண்டு பேசி, போர்ச்சுகல் தேசத்தார் கள்ளிக்கோட்டையில் வர்த்தகம் செய்ய அவ்வரசனிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, மீண்டும் தம் ஊருக்குச் சென்று, தாம் இந்தியாவைக் கண்டுபிடித்த மகிழ்வுச் செய்தியைத் தம்முடைய அரசனுக்குத் தெரிவித்தார்.

போர்ச்சுகல் தேசத்தரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இந்தியா தேசத்துடன் வர்த்தகம் செய்வதற்காகவும், கூடுமானால், அத் தேசத்தை தன் ஆட்சிக்குட்படுத்துவதற்காகவும் சில கப்பல்களை ஆயத்தம் செய்து, பீட்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் [Pedro Alvarez Cabral] என்பவர் தலைமையிற் பல போர்ச்சுகீசியரை அனுப்பினான். இந்தக் காப்ரால் என்னும் தலைவர் கப்பலைச் செலுத்திக்கொண்டு போகிறபோது. ஆப்பிரிக்காக் கண்டத்தின் கரையோரமாகச் சென்றால், எதிர்காற்றில் அகப்பட்டு வருந்தவேண்டியிருக்கும் என்று நினைத்து, அக்கண்டத் துக்கு மேற்கே அதிக தூரமாய்க் கடலிற் போய்க்கொண்டிருக்கையில், தென் அமெரிக்காவில் உள்ள, இப்போது பிரேசில் [Brazil] என்று வழங்கப்படுகிற செழிப்பான தேசத்தில் தற்செயலாகப் போய்ச் சேர்ந்தார். தாம் போகக் கருதி வந்த இந்தியா தேசம் செல்லாமல் தற்செயலாய் வேறு ஒரு புதிய தேசத்திற் சென்றதை அறிந்து வியப்புற்று, அவர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இந்தியா தேசம் வந்து சேர்ந்தார். பிரேசில் தேசத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும்போது அங்கிருந்து சில பழச் செடிகளைக் கொண்டு வந்து இந்தியாவிற் பரவச் செய்தார். அவர் கொண்டு வந்தவை மிளகாய், முந்திரிக்கொட்டை, கொய்யாப்பழம், அனாசிப் பழம், சீத்தாப்பழம், பப்பாளிப்பழம் முதலியவை. இப்பழச்செடிகள் இவர் கொண்டு வருவதற்கு முன்பு நமது நாட்டிற் கிடையா.

பதினைந்தாம் நூற்றாண்டின் கடைசியில் நமது நாட்டிற்கு வந்த பரங்கியர் (போர்ச்சுகீசியருக்குப் “பறங்கியர்” என்று பெயர்) கொச்சி, கள்ளிக்கோட்டை, கோவா முதலிய கடற்கரைப் பட்டினங்களில் அமர்ந்து வாணிகம் செய்யத் தொடங்கினார்கள். இவர்களுக்கு முன் தனி உரிமையாய் வாணிகம் செய்திருந்த முகம்மதியருக்குப் பறங்கியர் வந்து வாணிகம் செய்வது பிடிக்க வில்லை. இதனால் பறங்கியருக்கும் முகம்மதியருக்கும் சில சண்டைகள் நடந்தன. அச்சண்டைகளிற் பறங்கியர் வெற்றி பெற்று, முகம்மதியரை அடக்கி, அரபிக்கடலைத் தங்கள் ஆட்சியிற் கொண்டுவந்தார்கள். அதுமுதல் சுமார் ஒரு நூற்றாண்டு வரையில் பறங்கியர்கள் இந்தியா, இலங்கை முதலிய கீழைத் தேசங்களில் வாணிகம் செய்துவந்தார்கள். இவர்கள் வாணிகம் செய்வதோடு மட்டும் நில்லாமல், கிறித்துவ மதத்தைப் பரவச் செய்யவும் பாடுபட்டார்கள். ஏசுவின் சபைப் பாதிரிமார்களைக் கொண்டு வந்து, பெருந்தொகையான இந்துக்களைக் கிறித்தவராக்கினார்கள். சவேரியார், தத்துவபோதக சுவாமி, ஜான்-டி-பிரிட் டோ, வீரமா முனிவர் முதலிய பாதிரிமார் இவர்கள் அழைத்துவந்த ஏசுவின் சபையைச் சேர்ந்த துறவிகளாவர். இதுவுமன்றி, பறங்கியர் தங்கள் வாணிபப் பட்டினங்களைக் காவல்புரியும் பொருட்டு, பறங்கிப் போர் வீரர்களையும் கொண்டுவந்திருந்தார்கள். இப்போர்வீரர்கள் இந்தியப் பெண்களை மணஞ்செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்விதக் கலப்புமணத்தினாற் பிறந்த பிள்ளைகள் “துப்பாசி” என்னும் பெயருடைய புதிய குலத்தாரானார்கள். இந்தத் துப்பாசிகள் பறங்கிமொழியைப் பேசிவந்தனர்.

இவ்விதமாகப் பறங்கியர் இந்தியாவுக்குப் புது வழி கண்டு பிடித்து, இந்திய தேசத்துடன் வாணிபம் செய்து பொருள் திரட்டிச் செல்வந்தராவதைக் கண்டு ஏனைய ஐரோப்பிய இனத்தாரும் இந்தியா தேசத்துடன் வாணிபம் செய்ய ஆவல் கொண்டனர். அவர்களுள் ஹாலண்டு[Holland] என்னும் நாட்டிலுள்ள டச்சுக்காரரும் இம் முயற்சியில் முனைந்து நின்றார்கள். இந்த டச்சுக்காரருக்கு “ஒல்லாந்தர்” என்பதும் பெயர். இந்த ஒல்லாந்தர் இந்தியாவுக்கு வடகிழக்கு வழியொன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். கொலம்பஸ் ஐரோப்பாவுக்கு மேற்கு முகமாய் இந்தியாவுக்குப் போக ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றாரல்லவா? பறங்கியர் ஐரோப்பாவுக்குத் தெற்கு முகமாய் ஆப்பிரிக்காவைச் சுற்றி கிழக்கு முகமாகச் சென்று, இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்களே. அதைப்போலவே தாங்களும் ஐரோப்பாவுக்கு வடகிழக்குப் பக்கமாய்ச் சென்று இந்தியாவுக்குப் புதுவழி ஒன்றைக் கண்டுபிடிக்கலாமே என்று ஒல்லாந்தர் நினைத்தார்கள். அப்படி நினைத்தது அக்காலத்தில் பூகோள சாத்திரத்தை அவர்கள் சரிவர அறியவில்லை என்பதைத் தெரிவிக்கிறது. இந்த எண்ணத்தோடு அவர்கள் நான்கு கப்பல்களை இந்தியாவுக்கு வடகிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க அனுப்பி னார்கள். இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். ஆனால், முன்பு அறிந்திராத சில தீவுகளையும், கடல்களையும் கண்டுபிடித்தார்கள். ஒல்லாந்தர் வடகிழக்குப் பக்கமாய்ப் புதுவழி கண்டுபிடிக்க முயற்சி செய்த அதேகாலத்தில், வேறு நான்கு கப்பல்களைப் பறங்கியர் கண்டுபிடித்த வழியைப் பார்த்துவரும்படி அனுப்பினார்கள். இக்கப்பல்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகிய சாவா (சாவகம்) தீவுவரையிற்சென்று திரும்பி வந்தன. அதுமுதல் ஒல்லாந்தர் இந்தியா தேசத்துடனும் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் வாணிபம் செய்யத் தொடங்கினார்கள் இந்திய வியாபாரத்தை முதலில் தனிப்பட்ட முறையில் நடத்தி வந்தனர். பின்னர் 1602 ஆம் வருசம் மார்ச்சு மாதம் ‘2’ ஆம் நாள் “கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” என்னும் பேரால் ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த ஒல்லாந்தர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பறங்கியரை இந்தியா, இலங்கை முதலிய இடங் களிலிருந்து துரத்திவிட்டு, அவர்களிருந்த இடங்களைத் தாங்கள் கைப்பற்றிக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். இவர்களும் மதவெறிகொண்டு, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இந்துக் கோயில்களை இடித்தும், இந்துக்களைக் கட்டாயப்படுத்திக் கிறித்தவர்களாக்கியும், கிறித்தவர்களுக்கு மட்டும் அரசியல் அலுவல்களைக் கொடுத்தும் கொடுமை செய்தனர். முதலில் வாணிகர்களாக வந்த இவர்கள் பிறகு நாடுகளைப் பிடித்து அரசாள முற்பட்டார்கள். ஆனால், ஆங்கிலேயர் இவர்களை இந்தியாவிலும் இலங்கையிலுமிருந்து துரத்தி விட்டார்கள்.

இந்தியாவுடன் வாணிகம் செய்து செல்வந் திரட்ட விரும்பிய மற்றொரு தேசத்தார் ஆங்கிலேயராவர். இவர்களும் ஒல்லாந்தரைப் போலவே இந்தியாவுக்கு வடகிழக்குப் பாதையொன்றைக் கண்டு பிடிக்க முதலில் முயன்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக வடகிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் பயனடைய வில்லை. பிறகு 1578-ஆம் ஆண்டில், சர் பிரான்சிஸ் டிரேக் [Sir Francis Drake] என்னும் ஆங்கிலேயர், இந்தியாவிலிருந்து போர்ச்சுகல் தேசத்திற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு பறங்கிக் கப்பலைப் பிடித்துக் கொள்ளை யடித்தார். கொள்ளையிடுகையில், ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு இந்தியாவுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிடுகிற படம் ஒன்றைக் கண்டெடுத்தார். அதன்பிறகு 1594- ல் சர் ஜான் லங்காஸ்ட் [Sir John Lancaster] என்னும் ஆங்கிலேயர் நன்னம்பிக்கைமுனை வழியாக சாவா வரையில் யாத்திரை செய்து திரும்பிவந்தார். பின்னர் கி.பி.1600-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி” என்னும் வர்த்தக சங்கம் நிறுவப்பட்டது. அதுமுதல் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்.

நமது தேசத்தில் வாணிகம் செய்ய வந்த இன்னொரு ஐரோப்பிய இனத்தார் டேன்ஸ் [Danes] என்னும் டேனிஷ்காரர். இவர்கள் டென்மார்க்கு தேசத்தைச் சேர்ந்தவர் 1620-ல் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, நமது தேசத்தில் உள்ள தரங்கம்பாடி, பழவேற்காடு, சிராம்பூர் முதலிய இடங்களில் வாணிகம் செய்துவந்தனர். ஆனால், இவர்களின் வாணிகம் பலப்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தரங்கம்பாடி முதலிய இடங்களை இவர்கள் ஆங்கிலே யருக்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். இவர்களும் கிறித்தவ மதத்தைப் பரவச்செய்ய முயன்று வந்தனர்.

இந்தியாவுடன் வாணிகம் செய்யக் கடைசியாக முயற்சி செய்தவர்கள் பிரெஞ்சுக்காரர். “பிரெஞ்சுக் கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” 1664-ல் ஏற்படுத்தப்பட்டது. பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி முதலிய இடங்களில் வாணிகம் செய்துவந்தனர். டியுப்ளே என்பவர் புதுச்சேரிக்கு அலுவலாளராய் வந்தபோது இந்தியாவில் பிரெஞ்சு அரசாட்சியை நிலைநாட்ட முயற்சிசெய்தார். அவருடைய முயற்சி வெற்றியாகவே இருந்தது. ஆனால், பிரெஞ்சுக்காரரின் வெற்றியையும் செல்வாக்கையும் தடைப்படுத்தி, அவர்களை இந்தியாவிலிருந்து துரத்திவிட்டு, ஆங்கில அரசாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் முயற்சி செய்தார்கள். பிறகு இரு திறத்தாருக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. கடைசியாக, ஆங்கிலேயர் வெற்றி பெற்று ஆங்கில அரசாட்சியை நிலை நிறுவினர். இதற்கு அக்காலத்தில் இந்தியாவின் நிலைமை இடங் கொடுத்தது. பிறகு, இலங்கை முதலிய தேசங்களையும் பிடித்து அரசாளத் தொடங்கினார்கள். இவற்றை யெல்லாம் விரிவாக எழுதுவது யாம் சொல்லப் புகுந்த கருத்துக்குப் புறம்பானதாகு மாதலால், மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டது.

வாணிகத்துக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்தியரைக் கிறித்தவ மதத்திற் சேர்க்கவும் முயற்சி செய்து வந்தார்கள். இந்துக் களைக் கிறித்தவராக்கும் பொருட்டு அனேக பாதிரிமார்களை ஐரோப்பிய தேசங்களிலிருந்து அழைத்து வந்தார்கள். நமது தேசத்துக்கு வந்த பாதிரிமார்கள் கிறித்தவ மதத்தைப் போதிக்க முற்பட்டபோது, அவர்களுக்கு இந்நாட்டுமொழிகள் தடையாக நின்றன. ஆகவே, அவர்கள் முதலில் இந்திய மொழிகளைக் கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாங்கள் எந்த நாட்டாருக்கு மதபோதனை செய்யக் கருதினார்களோ அந்த நாட்டு மொழியைக் கற்றுத் தேர்ந்து, அதிற் பேசவும் சொற்பொழிவு செய்யவும் முயன்றார்கள். அந்த முறையில் தமிழ்நாட்டிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழிற் பேசவும், சொற்பொழிவு நிகழ்த்தவும், நூல் இயற்றவும் தொடங்கினார்கள். இவ்வாறு தமிழ்மொழிக்கும் ஐரோப்பியப் பாதிரி மாருக்கும் ஏற்பட்ட தொடர்பினால், தமிழிற் சில மாறுதல்கள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை ஆராய்வது தான் இப்புத்தகத்தின் நோக்கமாகும்.

தமிழ்மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி அனைத்தும் பாதிரிமார்களால் உண்டானவையே. இல்லறத்தாராகிய ஐரோப்பிய உத்தியோகத்தர்களால் தமிழுக்கு யாதொன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நமது நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கிலேய அலுவலாளர் தங்கள் அலுவல் முறைக்கு உதவியாக இருப்பதற்காகவும், நமது நாட்டுக் கலையின் போக்கை அறிவதற்காகவும், “சென்னைக் கல்விச் சங்கம்” [The Madras College] என்னும் ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாகத் தமிழைக் கற்று வந்தார்கள். இச் சங்கத்தினால் தமிழ்மொழிக்குச் சிறப்பாக யாதொரு வளர்ச்சியும் உண்டானதாகச் சொல்லமுடியாது. கிறித்தவர்களால் தமிழுக்கு ஏற்பட்ட அபிவிருத்தி எல்லாம் பாதிரிமாரைச் சேர்ந்ததே. பாதிரிமாரும் தமிழுக்காகச் செய்யவேண்டும் என்னும் கருத்துடன் செய்யவில்லை. தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்த முயற்சியின் பயனே தமிழிற்குச் சில நன்மைகளை அளித்தது. எவ்வாறாயினும், அந்த நன்மைகள் ஐரோப்பியப் பாதிரிமார்களால் உண்டானவையே. அவற்றை இனி ஆராய்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன