
“ராம், உங்க முடிவில் மாற்றம் இல்லையே?”
” இல்லை பிரியா, எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் மாறப் போறது இல்லை.”
” பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை ராம்.அது ஏன் புரியமாட்டிங்குது?”
” பேசினதையே பேச வேண்டாம் பிரியா. நடக்கப் போவதைப் பார்ப்போம்.”
” அப்போ நாளைக்கு வக்கீலை போய் பார்த்துடுவோம்.”
” சரி.”
” குழந்தைகள் கிட்ட இப்போவே சொல்லிடலாமா?”
” சொல்லிதான் ஆகணும். அவங்களும் மனதளவில் தயார் ஆகணுமே.”
” நான் எங்க அக்கா மாமா கிட்ட பேசும்போது நீங்களும் கூட இருங்க. “
” உங்க மாமா என்ன மாமா? என் அண்ணன்தானே அவன்? அண்ணி கூட ஒழுங்கா வாழத் தெரியலை.”
” உங்க அண்ணி என் அக்காதானே, அவ மட்டும் என்ன? பிள்ளைகளுக்காக கூட பார்க்காம ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க. பொதுவா விவாகரத்து போது குழந்தைகளின் கஸ்டடி கேட்டு பிரச்சினை பண்ணுவாங்க.”
” இவங்க ரெண்டு பேரும்தான் அவங்க தனி வாழ்க்கைதான் அவங்களுக்கு முக்கியம், நீ.எடுத்துக்கோ, எனக்கு வேணாம்றாங்களே.”
” உலகத்திலேயே இப்படி பார்த்து இருக்க முடியாது. அதனால நம்ம முடிவைச் செயல்படுத்திடுவோம்.”
” ரெண்டு குழந்தைகளையும் நாம சட்டப்படி தத்து எடுத்துப்போம். இனிமேல் அவங்க ரெண்டு பேரும் தான் நம்ம குழந்தைகள்.”
” ரொம்ப தேங்க்ஸ் ராம். என் விருப்பத்தை புரிஞ்சுட்டு நீங்களும் மனப்பூர்வமா ஒத்துக்கிட்டதால்தான் இது நடக்கப் போகுது.”
” என் பொண்டாட்டியோட தங்கமான மனசில் கொஞ்சமாவது எனக்கு இருக்காதா? காஃபியை குடி. ஆறிப் போகுது பாரு.”
காபி ஷாப்பின் மந்த ஒளியையும் மீறி அங்கே ஒளி பரவியது.

மிகவும் அருமையான கருத்து உள்ள கதை.