
1980ல் சாது அப்பாத்துரையின் ‘வாய்மொழிகள்’ என்ற சிறு பகுதியினை ‘படிமம்’ என்ற இலக்கியத் தொகுப்பில் வெளியிட்டார் திரு. பிரமிள். அதற்குக் கடும் எதிர்ப்பு. “இந்த சாது அப்பாத்துரை உண்மையில் இல்லாத ஒருவர். பிரமிள்தான் இந்தப் பெயரில் எழுதி இருக்கிறார்” என்ற பிரச்சாரம் செய்யப்பட்ட காலமது.
இதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இருந்த காலகட்டத்தில் வெளிச்சம் நோக்கி நடந்தவர்களும் சிலர். அவர்களின் தேடலுக்கு விடையாகக் கிடைத்தவரே சாது அப்பாத்துரை.
திருவண்ணாமலையில் வாழும் சித்தபுருஷரான யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தூண்டுதலின் பேரில், 1989ல் சாது அப்பாத்துரையின் வரலாற்றையும் வாய்மொழியையும்
நூலாக்கி இருக்கிறார் பிரமிள்.
நன்றியறிதல்களுக்கு அப்பாற்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். எனினும் தமிழுலகம் அவருக்கு ‘தியானதாரா’ என்ற நூல் கிடைத்தமைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக இந்த நூல் வெளிவருவதில் தாமதம் ஆனபோதும், பிரமிளின் தயக்கத்தைக் களைந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார் யோகி என்கிறார் பிரமிளின் நண்பர்.
1963-64ல் சாது அப்பாத்துரையின் வாய்மொழிகளைச் செவிமடுத்து, அவற்றைத் தொகுத்து பிரமிள் வைத்திருப்பினும், அவரது மறைவுக்குப் பின்னரே வெளியிடப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோகி. 1989ல் இந்த ‘தியானதாரா’ என்ற நூல் வெளியாகக் காரணமாகவும் இருந்தார்.
‘தியானதாரா’வில் இருக்கும் பல வாய்மொழிகள், அய்யன் பாலகுமாரனின் பல நாவல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தருமு சிவராம் என்கிற பிரமிள் 20.04.1939ல் பிறந்து 06.01.1997ல் மறைந்தவர். இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். பிரமிள் பற்றிய பல தகவல்களை நாம் அறியக் காரணமானவர் திரு. கால. சுப்பிரமணியம் ஆவார்.
“பிரமிளின் கோட்பாடுகள் மிகச் சாதாரணமானவர்களுக்குக் கடினமானவை. இவர் புத்தரைவிட முக்கியமானவர்” என்பார் திரு. ஜே.கிருஷ்ணமூர்த்தி. “எவரிடமும் தலைவணங்காத இயல்பு கொண்ட பிரமிள் தலைவணங்கியது யோகி ராம்சுரத்குமாரிடம் மட்டும்தான்” என்கிறார் ‘நவீன விருட்சம்’ இதழின் ஆசிரியர் திரு. அழகியசிங்கர்.
எண் கணிதம் மீது அபார நம்பிக்கை கொண்டவர் பிரமிள். ஒருமுறை அவர் நண்பர் அழகியசிங்கருடன் திருவண்ணாமலைக்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எண்கணிதம் பற்றிய விவாதம் இருவருக்கும் இடையே அரங்கேறியது.
சன்னதித் தெருவை அடைந்தபோது யோகி, “இந்தப் பிச்சைக்காரனைத்தேடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்மணி வந்தார். அவருக்கும் அவர் கணவருக்கும் ஏதோ பிரச்சனை. அழுதபடியே பிரச்சினையைச் சரிசெய்யவேண்டும் என்று என்னிடத்தில் கேட்டார். நான் அவள் பெயரை மாற்றி அனுப்பினேன். இறுதியில் ஒரு வருடம் கழித்து அவர் திரும்பவும் வந்தார். அவர்க்கும் அவள் கணவருக்கும் இடையில் சுமூகமான உறவு இருப்பதாகக் கூறினார்” என்று யோகி ராம்சுரத்குமார் கூறியிருக்கிறார்.
பிரமிளிடம் யோகி ராம்சுரத்குமார் தனக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே ஆன உறவைப் பகிர்ந்திருக்கிறார்.
வறுமையின் உச்சத்தில் பிரமிள் இருந்த காலங்களில் அழகியசிங்கர்தான் உணவு, பேருந்துச் செலவு என சகலமும் செய்து திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் அழகிய சிங்கருக்குள் கர்வம் கொப்பளித்ததை உணர்ந்த யோகி, தனக்கு சிகரெட் வாங்க அழகியசிங்கர் பணம் தந்தபோதும், அதை அவரிடம் பெறாமல் பிரமிளின் கைகளிலிருந்து அதனைப்பெற்று அழகியசிங்கரை கர்வபங்கம் செய்திருக்கிறார்.
“என்னிடம் அதிகமாகப் பணம் தங்கக்கூடாது நான் எப்போதும் பிச்சை எடுப்பவனாகத்தான் இருக்கமுடியும்” என்பாராம் பிரமிள்.
பிரமிள் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தபோது, தனது மின்சார பில்லை ஒரு பெண்மணியிடம் கொடுத்து, அதைச் செலுத்திவிடும்படி சொல்லியிருக்கிறார். பணம் கட்டிவிட்டு மீண்டும் அந்த கார்டை பிரமிளிடம் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். கார்டை வாங்கி பிரமிள் பார்த்தபோது ஏதோ தவறு இருப்பதாகப் புரிந்துகொண்டு, அந்தப்பெண்ணைக் கடுமையாகக் கடிந்துகொண்டார் பிரமிள். பின்னர், தன் தவறை உணர்ந்து, அப்பெண்மணியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியிருக்கிறார்.
பித்தர், பாலர், பேயர் எனப் பல நிலைகளில் மாறி மாறியிருப்பது யோகி மட்டுமல்ல, அவரோடு உடனிருந்தோரும் என்பதற்கு பிரமிளின் இந்த நிகழ்வே சாட்சி.
1957 ல் நண்பர்களுடன் கடலில் நீச்சலுக்குப் போன பிரமிளின் கைக்கடிகாரம் கடற்கரையில் திருடுபோனது. அதை பிரமிளின் நண்பர்கள்தான் எடுத்திருக்கவேண்டும் என்பது பிரமிளின் தாயார் எண்ணம். எனவே, பிரமிளை அழைத்துக்கொண்டு சாது அப்பாத்துரையிடம் வந்த அவர்கள், ” ஒரு கெடுதி கேட்க வந்திருக்கிறோம்” என்றனர்.
“ஒரு பொருள் திருடப்பட்டிருக்கிறது. ஆனால், திரும்பப் பெறக்கூடிய சூழ்நிலையில் திருட்டு நடக்கவில்லை” என்று பதிலளித்திருக்கிறார் சாது அப்பாத்துரை.
முப்பது வருடங்கள் கழித்து யோகி ராம்சுரத்குமாரை பிரமிள் சந்திக்கும்போது, அவரின் கைக்கடிகாரத்தைத் திருடியது அவருடைய நண்பர்களில் ஒருவர்தான் என்பதை யோகி ராம்சுரத்குமார் வேறுவிதமாக உணர்த்தியிருக்கிறார்.
அது…
“எனது கைக்கடிகாரத்தைத் திருடியது யார்?”
“உங்கள் நண்பர் யாரும் திருடவில்லையா?”
“அவர்கள் ஏன் திருடுகிறார்கள்?”
“அவர்கள் திருடவில்லை. ஏனென்றால், அவர்கள் உங்களது நண்பர்கள்!” என்று கூறிச் சிரித்தாராம் யோகி.
பொன். வாசுதேவனில் துவங்கி பிரமிள், பவா செல்லத்துரை, பாலகுமாரன், ஜெயமோகன் என யோகியின் தடங்களை உணரும் இந்த உணர்வுக் கொம்பின் நீட்சி எங்கே துவங்கியது என்ற தேடலைவிட, இந்தத் தேடலின் இலக்கு என்ன என்பதே என்னுள் எழுந்த கேள்வி.
யோகி ராம்சுரத்குமார் சிலாகித்த ‘தியானதாரா’ என்ற சிறிய புத்தகம் பலரைச் சென்றடையவேண்டும் என்பதே இதை எழுதிய நோக்கம் என்று மெல்லப் புரிபட்டது.
யோகி ராம்சுரத்குமார் எனும் நாமம் நம்முள் வெளிப்படுத்தும் விசேஷங்கள் அனேகம்.
“தீஷை என்பது சடங்கல்ல. நெருப்பினால் நெருப்பைத் தூண்டுதலே தீஷை” என்கிறார் சாது அப்பாத்துரை. சந்திராதித்தர் உள்ளவரை தீஷை என்பது இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
இலக்கியம் என்பது என்ன? என்கிற கேள்விக்கு பலதரப்பட்ட விவாதங்களும், சண்டைகளும், விமர்சனங்களும் பல காலமாய்த் தொடர்ந்து இருந்துவருகின்றன. இன்று நாம் படித்து மகிழ்கிற சங்க இலக்கிய நூல்கள் குளத்தில் வீசப்பட்டும், கரையான் அரித்தும் போக மிஞ்சியவையே. நம் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த இலக்கியங்கள் யாவும், அக்காலத்து மனிதர்களின் மடத்தனங்களைக் கடந்து, காலம் கடந்த ஆயுளைக் கொண்டிருக்கிறது. இவை பிறந்து வளர்ந்தவையல்ல. இறந்து வளர்ந்தவை.
– சரஸ்வதி சுவாமிநாதன்
(கடவுளின் குழந்தை)
