சுஸ்ரீ/இது என்ன மாயம்

வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன்.
சட்டென ,மின்னலாய் ஒரு பெண் வந்து நின்றாள் அருகில் , கூட வந்த அவள் பெற்றோரை நான் கவனிக்கவில்லை.,இப்படி ஒரு பெண்ணை வாழ்நாளில் பாத்ததில்லை.பார்வையிலிருந்து மறைந்து விடும் முன் கண்ணுக்குள் சிறை பிடித்தேன்.அவள் கண்ணிலிருந்து தப்பி விடாமல் ஜாக்கிரதையா பாதிக் கண் மூடி நடந்தே வீடு விரைந்தேன்.
என்னறையில புகுந்து கவனமாய் கதவை மூடி மெல்லக் கண் திறந்தேன் இமை முடிகள் குத்தி காயப்படாமல் கவனமாக தூரிகையில் வைத்து வண்ணம் தோய்த்து மெல்ல மெல்ல அந்த வெண்திரையில் உயிரானாள்.
இதென்ன காதில் அணிகலனுக்கு பதில் வண்ண மலர்,சித்திரை வெயிலில் வாடி விடாதோ. அவசரமாய் மாற்றுவதற்குள் கதவைத் தட்டும் சத்தம்.

என் மனம் நிறைத்த கன்னியின் சித்திரத்தை மறைக்க நேரமில்லை.பட்டென கதவைத் திறந்தேன்.தாயார்தான்,”டேய் சிவா நான் சொல்வேனே சின்ன வயதில் ஓடிப் போன என் தம்பி உன் மாமன் இத்தனை வருடத்துக்கப்பறம் குடும்பத்தோடு வந்திருக்கான்,
ஹாலுக்கு கொஞ்சம் வா”மனம் மிகு களிப்புடன் சொன்னாள்.

அறைக் கதவை ஜாக்கிரதையாக மூடி விட்டு வெளியே வந்தேன்.ஹாலில் வெளிச்சம் அதிகமாயிருந்தது,தன் பெற்றோரின் நடுவே அமர்ந்திருந்த அந்த தங்கத் தாமரைதான் காரணமா. ஏற்கனவே என் விழிக்குள் புகுந்து,
வண்ணம் அணிந்து என் கேன்வாஸ் போர்டில் இறங்கி அறைக்குள் சிறை பட்டவள் இங்கமர்ந்து எப்படி
சிரிக்கிறாள்.இது என்ன மாயம்.

One Comment on “சுஸ்ரீ/இது என்ன மாயம்”

  1. அடடா! கண்ணுக்குள் புகுந்தாள் ஹாலுக்குள் பிரசன்னமாகி விட்ட மாயம்தான் என்ன?

Comments are closed.