ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே..

பழசாகி பாதி ரசம் போன கண்ணாடியில் பார்த்து பொட்டு வைத்துக் கொண்ட போது “நீ பேசறதுக்கு முன்னாடி உன் கண்ணு பேசுதடி” என்று பாபு சொல்வது காதில் கேட்பது போல இருந்தது விஜிக்கு. சின்னவள் கண்ணாடியில் இவளுடைய லிப்ஸ்டிக்கால் கிறுக்கி வைத்து இருந்ததெல்லாம் கன்னத்தில் கோடுகள் போல் தெரிந்தன. ‘கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு’ என்ற பாடல் வரி மனதில் ஓடியது.
வசதியான வீட்டில் வளர்ந்து, கல்லூரி படிக்கும் போது, வசதி இல்லாத, கூட படித்த பாபுவை காதலிக்க தொடங்கி, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து வாழ்க்கை தொடங்கியது. நிரந்தர, சரியான வேலை கிடைக்காத பாபு ஆட்டோ ஓட்ட தொடங்கி இவளும் ஒரு வேலைக்குச் சென்று வாழ்க்கை தொல்லையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. சந்தோஷமான வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பெற்ற நிலையில் தேவைகள் அதிகமானது. வருமானம் போதாமல் பாபு வேலைக்காக அரபு நாடுகளுக்குச் சென்றான். அங்கு அவன் படும் கஷ்டம் இவளையும் பாதித்தது.
முடி கொட்டி இளைத்துப் போனாள்.
வருமானம் போதவில்லை. குடும்பத்தை ஓட்ட தானும் ஏதாவது வேலைக்கு சென்றாக வேண்டுமே… ஒன்றுக்கு இரண்டாய் குழந்தைகளைப் பெற்று விட்டோமே… பிறந்த வீட்டை உதவிக்கு அணுகக்கூடாது என்று ஒரு வீம்பு மனதுக்குள் இருந்தது. மனம் இறுகியதில் தான் நினைப்பதை மற்றவர்களுக்கு முகத்தில் காட்டாமல் இருப்பது பழகி விட்டது.. கடைசியாக செய்து கொண்டிருந்த வரவேற்பாளர் வேலையையே தொடர்ந்தாள். அந்த வேலைக்கு சில வேஷங்கள் தேவையாகத்தான் இருக்கின்றன.
கண்ணாடியில் பார்த்து பூவை பின்னால் பின்னலில் சொருகி, பொட்டை சரி செய்து கொண்டு, பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வேலைக்கு கிளம்பினாள் விஜி.
ஆன்ட்டி வீட்டு டிவியில் எம் எஸ் விஸ்வநாதன் பாடிக் கொண்டிருந்தார். “எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே…”

சாந்திசந்திரசேகரன்/அவள்..! – விருட்சம் நாளிதழ்

3 Comments on “ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே..”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன