
விரிந்து பரந்த வெளி. பூரணமான ஒளி வெள்ளம். ஆயிரம் கோடி மின்னல்கள் விண்ணில் ஒன்றாய் உதித்து மண்ணைத் தீண்டியும் மறையாமல் ஒளித் தூண்களாக மாறி நிறைத்த பிரகாசம். சபேசன் அதனுள் தலை குப்புற விழுந்து கொண்டிருந்தார். புலன்கள் உணராவிட்டாலும் கண்களோ மனமோ மதியோ இன்னமும் ‘ தான் ‘ என்று உணர வைத்துக் கொண்டிருக்கிற ஏதோ ஒன்று அந்த ஒளிக் கடலினுள் பற்றிக்கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று பரபரப்பாய் தேடியது. நீந்துவது போல வேகமாக கைகளையும் கால்களையும் உதைத்தார்.
‘உடம்பு இப்படி தூக்கிப் போடறதே!’
ஓரிடத்தில் வெண்மையொளி சற்று மங்கலாகத் தெரிய வேகமாக அங்கு போனார் . சிறிய மஞ்சள் மலர் . மணலை கையால் தள்ளுவது போல் வேகமாக ஒளியை இரு கைகளாலும் தள்ளினார் . கருமையாக ஏதோ புலப்பட்டது. கடல் போன்ற இரு பெரிய விழிகள். தீபாராதனை ஒளியில் சபேசன் தினமும் தரிசித்த, உலகத்து துக்கத்தை எல்லாம் விழுங்கி கருணையோடு ஜொலிக்கும் விழிகள். நீலக்கல் நெற்றிச் சுட்டி சாற்றும் போதுதான்…இறுதியாய் அவள் முகம் நினைவு வர தாயே என்று இறுகப் பற்றிக் கொண்டார்.
“அப்பா”…மகள் அலறினாள்.
” என்ன புண்ணியாத்மா பாரும்! அம்பாளுக்கு அபிஷேகம் முடிச்சு திரை போட்டுட்டு அலங்காரம் செய்துண்டு இருந்தார். திடீர்னு உள்ளே சத்தம். வெளில நிக்கிற நாங்க குரல் கொடுத்தும் பதில் இல்லையேன்னு திரையை விலக்கினா புடவை சார்த்திட்டு ஆபரணம் அணிவிச்சுண்டு இருக்கறச்சே அப்படியே அவள் பாதத்தில் சரிஞ்சுட்டார். அவசரமா இங்கே எடுத்துண்டு வந்தோம்”.
சுற்றி இருந்தவர்களின் கண்களில் வழிந்த கண்ணீர் சபேசன் பிரிவினாலா அல்லது அவருக்கு கிடைத்த பாக்கியத்தினாலா?

One Comment on “அனுராதா ஜெயசங்கர்/நீல நெற்றிச்சுட்டி”