நம்ப வீட்டு பித்ருக்கள்/ரேவதி பாலு

முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து அதிகாலையில் மொட்டைமாடியில் காக்கைகளுக்கு போடுவது வழக்கம். அதிகாலை சில்லிப்பை அனுபவித்தபடி காக்கை கள் பாய்ந்து பாய்ந்து ஏதோ கல்யாண ரிசப்ஷன் டின்னர் தயிர்சாதம் ரேஞ்சுக்கு அதை ருசித்து சாப்பிடுவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சில சமயங்களில் பால் திரிந்து போயிருக்கும். பாத்திரத்தில் குடை தூக்கிக்கொண்டு ‘சொய்’ என்று புளித்துப் போயிருக்கும் அதில் மீந்துபோன பிரட் துண்டங்களை போட்டு கலந்து காக்கைகளுக்கு வைத்தால், சும்மா குலாப் ஜாமுனை
ருசிப்பதுபோல் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடும். விதவிதமான காக்காய்கள். கன்னங்கரேலென்று பெரிய அண்டங் காக்கைகள். சாம்பல் நிற கழுத்தோடு சாதா காக்கைகள். ஒரு கால் உடைந்த காக்காய், ஒரு மூக்கு உடைந்து போன காக்காய், ஒற்றைக்கண் காக்கா என்று ஊனமுற்ற காக்கைகள் வேறு இந்த காக்காய் கூட்டத்தில் காணப்படும்.

ஒரு நாள் அதிகாலையில் எழுந்த என் கணவர், காப்பி போடுவதற்காக என்னைத் தேடிக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்தார். காக்கை கூட்டத்திலிருந்த ஊனமுற்ற காக்கைகள் அவர் கவனத்தை கவர, கிண்டலாகக் கேட்டார் ” என்ன உங்க பிறந்த வீட்டு பித்ருக்கள் வந்திருக்காங்களா? “

” என் பிறந்த வீட்டு பித்ருக்கள் எங்க அண்ணன் வீட்டுக்கு தானே வருவாங்க? இது நம்ம வீட்டு பித்ருக்கள் தாங்க ” என்றேன் புன்சிரிப்போடு.


ஒரு நொடி காக்கைகளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்று இருந்தவர், ” கீழ வந்து காபி போடுறியா ” என்றவாறே மள மள என்று படி இறங்கினார்.
இப்போது பித்ரு ஆகிப்போன கண் பார்வை இழந்த பெரிய தாத்தாவும் போலியோ அட்டாக்கில் நடக்க முடியாமல் போன பெரியப்பாவும் அவர் ஞாபகத்துக்கு வந்து இருக்குமோ’ என்று யோசித்தவாறே நானும் பின்னாடியே படி இறங்கினேன்