
<>
எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.
அவருடைய மகள் திருமணம்.பஞ்ச கச்சம், தடித்த பூணூல், நெற்றியில் ஸ்ரீசூர்ணத்
தோடு பேராசிரியரைப் பார்க்க விநோதமாக இருந்தது. தீவிரமான ஸ்ரீவைஷ்ண
வராக இருப்பாரோ என்ற சந்தேகம்.
எனக்கு வைஷ்ணவ விவகாரங்கள் ஏதும் தெரியாது என்றார்.சகஜமாகக் கிண்டலும் கேலியுமாக உரையாடவும் கூடியிருக்கிறது.நாடகச் சிந்தனைகள் நிரம்பியவராக இருந்த போதிலும் இலக்கியம் சார்ந்த அனைத்துபகுதிகளிலும், தளங்களிலிலும் இடைவிடாமல் சிரத்தையாய் இயங்கினார்.ஒரு விழாவில் என் சிறுகதைத்தொகுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
புதிது பழசு என ஏதுமில்லை என்பார்.நிலைத்து நிற்பன எல்லாமே புதிதுதான்;நவீனம்தான்என மேன்மைப்படுத்துவார்.திருக்குறுங்குடி
கைசிக நாடகத்தை மீட்டெடுத்தது குறித்தான பெருமிதம் அவரிடமிருந்தது.
அது நியாயமான சரியான………….. பெருமிதமும்கூட.அதற்காக அவர் மேற்கொண்ட
மிகவும் கடுமையான பிரயாசைகளை அறிந்தவன் நான்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் அவர் வீடு கட்டிக் கொண்டிருந்தார். ஒருவித புதுபாணி.லாரி பெக்கர் வடிவமைத்துதது. அதற்கான செங்கற்கள் எங்கள் ஊரிலிருந்து ஒருவரிடம் பிரத்யேகமாய் சொல்லித் தயாரித்தது.செங்கல் ஆசாமி வியப்போடுதான் அதைச் செய்தார்.
மின்விசிறி தேவையில்லை மின்சார விளக்குகளும் பகலில் தேவையில்லை என்றார்.
சிமெண்ட் பூச்சு இல்லாமலே தேங்காய் சிரட்டைகள் முதலான பொருள்களோடு வீடு
உருவாகிக் கொண்டிருந் தது.கேரளபாணி மாதிரிதான் எனக்குத் தெரிந்தது. சுற்றிலும்
தீப்பெட்டிகள் மாதிரி இருக்கும் வண்ணங்களையெல்லாம் தீற்றிய வீடுகளுக்கு மத்தியில் பேராசிரியர் வீடு தனியாகக் காட்சியளிக்கும். உங்க மனைவிக்கு இப்படி வீடு
உருவாவதில் சம்மதமா என்று கேட்டதற்கு அவங்களையேகேளேன் என்றார்.
என் மகள் கலப்புத் திருமணம் என்றார். தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜர்
சந்நிதிக்கு முன் எங்களுக்கு நாடகப் பயிற்சியளித்தார். ஏதோ ஆங்கிலநாடகமொன்றின் தமிழ் வடிவம்.மிகக் கடுமையான பயிற்சி.பிரமாதமான ஒரு நாடகக் குழுவை உருவாக்கிவிட ஆசை. ‘அட..நீங்களா..!என்ற வசனம் எனக்கு. நூறுதடவைக்குப் பின்னும் எனக்கு சரியாக வரவில்லை .என் நாடக ஞானப் பூஜ்யத்தைக் கேலியும் கிண்டலும் செய்வார்.சிரிப்பார்.
பெருமுயற்சியிலும் அவரால் என்னைச் சரிபண்ண முடியவில்லை.பிரசாத முறுக்கு வாங்கிதந்து பேசாமல் கவிதை எழுதிக் கொண்டிரு போதும் என்று வேடிக்கை பார்க்க
உட்கார்த்தி வைத்துவிட்டார்.தேசிய நாடகப்பள்ளியில் பயின்றதையும்
இப்ராஹிம் அல்காசியின் மேதமையையும் சொல்வார்.தன்னோடு பயின்ற
இன்னொருவர் கோபாலி என்றதும் நினைவுக்கு வருகிறது.
ஒருதடவை மெலட்டூர் பாகவத மேளா பார்க்க என்னையும் அழைத்துச்சென்றிருந்தார்.
நாடகத்தில் -பிரகலாதா-ஒரு கதாபாத்திரம் நெருப்புப் பெட்டியை உரசி குத்து
விளக்கேற்றிது.ஐயா.. ஒரு விளக்குச் சுடரால் ஏற்றினால் நன்றாக இருக்குமே
என்றேன்.நீ நல்லா கவனிக்கிறாய் என முதுகில் தட்டினார்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அவரிருந்தவரை நாடகங்களுக்குத் தவறாது போய்விடுவேன்.பின்னால் பேராசிரியர்.மு.ராமசாமி.அப்புறம் எல்லாம் மறந்தே போனது.பேராசிரியர் இடைவெளியற்று பேசுவதுகேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.சாதாரண அஞ்சல்துறைக்காரனாகிய எனக்கு இதெல்லாம் புரியுமா என்ற விஷயமே அவருக்கிருந்ததில்லை. வெங்கட் சாமி நாதனுக்காக ஒரு நினைவுக் கூட்டம் ஏற்பாடு செய்யச் சொன்னார் ஒருமுறை. மழை விடட்டும் என்ற என்னுடைய பதிலை ரசிக்கவில்லை. அவரை மிகச்சிறந்த நாடகாசிரியர் எனக் கொண்டாடுவர்.
ஆனால் நானோமிகச்சிறந்த நட்பாளர் என்பேன்.இன்றிலிருந்து அவர் இல்லை என்பது மிகத் துயரத்தைத் தரக்கூடியதுதான்.மரணம் கொடிதுதான்.
^^^^ (மீள்)
