ரேவதி ரஸவாதி/அழகியசிங்கரின் இசை புதிது குழுவின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா

        அழகியசிங்கரின் இசை புதிது குழு என்னும் இசை குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா 21.03.26 அன்று அம்பத்தூர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கோலாகலமாக நடந்தேறியது. “என்னது அம்பத்தூரிலா? அவ்வளவு தொலைவு எப்படி வருவது?‘ என்று பிரமித்து போனவர்களை, ‘இதோ இங்க தான் இருக்கு அம்பத்தூர்!’ என்று சௌகரியமான பயணத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்து கை பிடித்து கூட்டி வந்தார் சீதா லக்ஷ்மி.  அதே போல சங்கரனும், பி.நாகராஜனும் அவரவர்கள் இடத்திலிருந்து வருபவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வர  உதவினார்கள். 
        எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், பதிப்பாளர், என்று பன்முகங்களை உடைய திரு அழக்கியசிங்கர் அவர்கள் புதிது புதிதாக  வாட்சப்பில் குழுக்களை ஆரம்பித்து வைத்து சில வருடங்களாகவே கதை புதிது, சொல் புதிது, இசை பதிது, கலை புதிது போன்ற குழுக்கள் இலக்கியம், கவிதை, இசை பிற கலைக்களுக்காக நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. 
    இதில இசை புதிது குழுவில் கர்நாடக சங்கீதம், திரையிசை என்று இரண்டிற்கும் களம் அமைத்து கொடுத்து சாந்தி ரஸவாதியும், நாகேந்திரபாரதியும் இதை நிர்வகித்து வருகிறார்கள். அநேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள் அங்கத்தினார்களாக இருக்கும் இந்த குழுவில் வாரம் ஒரு ராகம் குறிப்பிடப்படும்.  அந்த ராகத்தில் அங்கத்தினர்கள் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடுவார்கள். தினமுமே காலை வேளையில் திருமுறை பாடல்களான தேவாரம். திருவாசகம், திருப்புகழ் எல்லாம் அங்கத்தினர்களால் ஆர்வத்தோடு இசைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
   காலை கண் விழித்ததுமே திருச்சிற்றம்பலம் என்று கணீர் குரலில் ஆரம்பித்து பாடும் ராமசாமியை தொடர்ந்து அஷ்டபதி, திவ்யநாம சங்கீர்த்தனம் என்று பாடும் ஸ்ரீநிவாசன், திருப்புகழ் பாடும் திருப்புகழ் சங்கரன் என்று காலைப்பொழுது மிக ரம்யமாக புலரும் இந்த குழுவினருக்கு. இதைத் தவிர மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை, காலையில் கர்நாடக சங்கீதம், பக்திப் பாடல்கள், பிற்பகலில் திரையிசைப் பாடல்கள் என்று நெறிமுறை வகுத்து கொண்டு, அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி கொண்டு உலா வரும் குழு இது.  
       நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்திரா ராமநாதன் கூறியது போல ‘பாத்ரூம் சிங்கர்ஸ்’  என்று தங்களுக்குள்ளேயே  பாடிக் கொண்டிருந்தவர்கள்  பக்கா பாடகர்களாக உருவாகி இருக்கிறோம் என்று பெருமிதப்படும்  குழு இது. குழுவில் ஒருவருக்கொருவர் அவர்களுக்கு சங்கீதம்  சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து  கொள்வதும் உண்டு.  கம்பீரமாக,  நம்பிக்கையோடு,  ஒரு பொது இடத்தில் ஆண்டு விழாவில் மேடையேறி பாடி  இவர்கள் தாங்கள் வளர்த்து கொண்ட திறமையை  வெளிப்படுத்துகிறார்கள்.  அது மட்டுமல்ல.  இது எல்லோரும் அவரவர்கள் விருப்பப்பட்டு வந்து சேர்ந்த குழு. இது தானாக சேர்ந்த கூட்டம். இந்த வார்த்தையை சும்மா சொல்லவில்லை.  இந்த நிகழ்விலேயே பார்வையாளராக வந்த ஒரு பெண்மணி ஆர்வம் மேலிட தானும் குழுவில் சேரலாமா என்று கேட்டு, இப்பொழுது சேர்ந்தும் விட்டார்.     இசை என்பது   எப்படி ஒருவருக்கொருவர் தொற்றிக் கொண்டு ஆவலை கிளப்புகிறது என்பதை அங்கே கண்கூடாக காண முடிந்தது. 
    மிகவும் துறுதுறுப்பான குழு நிர்வாகிகளுள் ஒருவரும், இந்த குழு ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவுமான  நாகேந்திர பாரதியின் முயற்சியின் பெயரில் இப்பொழுது இருக்கும் ஸ்மூயூல், கரோக்கே என்னும்  அதி நவீனமான டெக்னாலஜியிலும் தேர்ந்தவர்களை கொண்டு (அதற்கு தனியாக ஸ்மூயூல்புதிது என்று குழு அமைத்து )  விருப்பப்படுவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.   இதில் கற்று தேர்ந்து  ஜோராக ஸ்மூயூல், கரோக்கே என்று எல்லா விதமாகவும் பாடுவதில் குழுவில் வேணி ஸ்ரீநிவாசன் தம்பதி, உஷாபரதி நாகேந்திர பாரதி  தம்பதி, கலா சரஸ்வதி குமார், ராம்குமார்   என்று நிறைய  பேர் அசத்துகிறார்கள். அது மட்டுமல்ல. வேணி ஸ்ரீநிவாசன் தம்பதி, சங்கரநாராயணன் போன்றோர் தங்களுக்கென்று யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள்.  இசையில் அவர்களுடைய வெற்றி பயணம் அவர்களுக்கு மட்டுமல்ல குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் உற்சாக மூட்டுவதாக  அமைகிறது. 
   தினமும் மத்தியானம் 3.30 மணிக்கு ஒரு  ‘குவிஸ்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது.  ஒரு கர்நாடக சங்கீத பாடல், ஒரு சினிமா பாடல் ஒலிக்க செய்து அந்த ராகத்தை கண்டு பிடிக்க செய்யும் முயற்சியில் குழுவினர் அனைவரும் சுறுசுறுப்பாக ஈடுபடுவதை காணலாம். இதற்கு பின்புலமாக இருப்பவர் குழுவின் சிறந்த கர்நாடக பாடகியான குவிஸ் மாஸ்டர் வேணி. இவ்வளவு நல்ல காரியங்கள் நடைபெறும்போது அதை பாராட்டி ஊக்குவித்து தட்டிக்  கொடுக்க ஒருவர் தேவை தானே ? அதை செவ்வனே செய்பவர் கேள்வி சந்திரசேகர்.  அன்று தன்னுடைய நாம சங்கீர்த்தன பாடல் ‘பால் மணக்குது’ மூலம் அரங்கையே அதிர வைத்தார். மேடையேறி ஆளுக்கொரு திரையிசைப் பாடல் பாடி நம்மை மகிழ்வித்த பானுமதி,  புஷ்பா விஸ்வநாதன்,  உடல் நலம் சரியில்லாதபோதும் விட்டுக் கொடுக்காமல் அவ்வளவு தூரம் வந்து மேடையேறி ஒரு பாடலை பாடி அவையோரை மகிழ்வித்த  ஆர். கே.  என்று,  இந்த குழுவின் பாசமான உறுப்பினர்கள் யாரை சொல்வது, யாரை விடுவது?
    மூன்றாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை குழுவினரின் இசை   நிகழ்ச்சி நடை பெற்றது.  உறுப்பினர்கள் நுழைந்ததுமே இல்ல நிர்வாகிகளில் ஒருவரான திருமதி பார்வதி பாலகிருஷ்ணன்  அவர்களை அன்பாக வரவேற்று டீ பிஸ்கட் கொடுத்து உபசரித்தார்.  முதலில் திரையிசைப் பாடல்களும் பிறகு ஒரு நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி  போர் நிற்கவும், உலக சமாதானத்தை  வேண்டியும் நடத்தப்பட்டது. இல்லத்திலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திரளாக இல்லத்தில் இருப்பவர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.  மிகவும் பிரபலமான பாடல்களே நாம சங்கீர்த்தனத்தில் பாடப்பட்டதால் கூடவே அவர்களும் பாடி ரசித்தது மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. பக்க வாத்தியக்காரர்கள் ஹார்மோனியம் வாசித்த ராஜாராமும், மிருதங்கம் வாசித்த பாலக்காடு ஷரத்தும் மிக அனுசரணையாக வாசித்து நாம சங்கீர்த்தன பாடல்களை ஜொலிக்க வைத்தனர். 
      வயதானவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது என்பதை இல்ல நிர்வாகிகள் முதலிலேயே அறிவுரைத்ததால், நிகழ்ச்சி நேரத்தில் ஆரம்பித்து நேரத்தில் முடிய,   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்திரா கையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு,  மிக திறம்பட நிகழ்ச்சியை நிர்வாகித்தார். அதே சமயத்தில் அவருடைய கலகலப்பான இணைப்புரையும், அவர் ஒவ்வொரு பாட்டை பற்றியும் வெளியிடும் தகவல்களும்  எப்போதும் போல எல்லோரையும் ரசிக்க வைத்தது. 
      குழுவில் பாடகர்கள் மட்டுமல்ல வாக்கேயக்காரரும் இருக்கிறார். சங்கரநாராயணன், வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர், தானே இயற்றி இசை அமைத்த பாடல்களை தானே பாடி குழுவில் போடுவார்.  அதை மற்றவர்கள் ஆவலாகக் கேட்டு கற்று கொண்டு பாடுவதும் உண்டு. இவரை கௌரவிக்கும் பொருட்டு ‘இசை அமுது’ ’ என்னும் தலைப்பில் அழகியசிங்கரின் விருட்சம் பதிப்பகம் இவருடைய 100 பாடல்களை தொகுத்து இந்த  நிகழ்ச்சியில் ஒரு புத்தகம்  வெளியிட்டது. நிகழ்ச்சியிலேயே இவர் ஆனந்தம் இல்லத்தை பற்றி  ஒரு பாடல் இயற்றி பாடி அவர்களை மகிழ்வித்தார்.  இந்த புத்தகத்தை அழகியசிங்கர் வெளியிட இல்லத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான திருமதி பார்வதி பாலகிருஷ்ணன் பெற்று கொண்டார். இல்லத்தின்  மூத்த உறுப்பினரான திரு நாராயணன் இல்லத்தை பற்றி  பகிர்ந்து கொண்ட தகவல்கள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது,   இப்படி கூட சிறப்பாக ஒரு முதியோர் இல்லத்தை நிர்வகிக்க முடியுமா என்று. 
       இப்போது  ‘ராகம் புதிது’ என்று ஒரு புதிய குழு ஆரம்பிக்கப் பெற்று கர்நாடக சங்கீதத்தின் பால பாடமான சரளி வரிசையிலிருந்து அலங்காரம் வரை விரும்புவர்கள்  கற்று கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  குழு உறுப்பினர், குழுவின் கே. பி. எஸ் என்று போற்றப்படும் கணீர் குரல்   கஸ்தூரி வாசுதேவன் திறம்பட கற்றுக் கொடுக்கும் இந்த பால பாடம்,  யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டு இந்த நிகழ்ச்சியில் அழகியசிங்கர் வெளியிட இல்லத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான திருமதி பத்மாவால்  பெற்று கொள்ளப்பட்டது.  நாட்டுபண்ணுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைய, இல்லத்திலேயே எங்களுக்கு அன்பாக இரவு நேர சிற்றுண்டி  பரிமாறினார்கள். இல்லத்தின் சுத்தமும் சுகாதாரமும் பிரமிக்க வைத்தது.  இல்லத்தில் உள்ளவர்கள் அன்போடு  இசை புதிது குழுவினர்களோடு பேசி அளவளாவியது ஏதோ நம் இல்லத்தில் இருப்பதைப் போல  ஒரு சந்தோஷத்தை தோற்றுவித்தது. 
    இந்தக் குழுவை இசைக்குடும்பம் என்று அன்போடு குறிப்பிடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த  குழுவை ஒரு குடும்பமாக  பாவிப்பதால்தான் சக உறுப்பினர்களின் சுக துக்கங்களில் மிக இயல்பாக  பங்கு கொள்ள முடிகிறது.  குடும்பங்களில் விசேஷங்களில் இளம்பெண்கள் உற்சாகமாக வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்வதை போல, இந்த நிகழ்விலும்  குழுவின் இளம் பெண்களான ஜானகியும், சுகன்யாவும்  அன்போடும் அக்கறையோடும் நிகழ்வு நடைபெற சிறப்பாக ஓடியாடி உதவினார்கள்.  அதற்கும் அடுத்த தலைமுறை இளஞ்சிட்டுகள்  சஞ்சனா  (நாகேந்திர பாரதியின் பேத்தி) திறம்பட ஜூம்  நிகழ்விற்கு  ஏற்பாடு செய்து அதை முழுவதுமாக கண்காணித்ததும், மிருதுளா(சுகன்யாவின் புதல்வி)  பால பாடம் அலங்காரம் பாடல் தன் மழலை மாறாத இனிமையான குரலில் பாடியதும் இசை புதிது குழு  ஒரு இசைக் குடும்பம் தான்  என்பதை ஆணித்தரமாக  நிரூபிப்பதாக  அமைந்தது. எப்போதும் போல இந்த விழாவிற்கு குழு சம்பந்தப்பட்ட செலவுகள், ஆசிரமத்திற்கு  அளிக்கப்பட்ட நன்கொடை, என்று எல்லா விஷயங்களையும்  மிக நேர்த்தியாக நிதி மேலாண்மை செய்தார் குழுவின் பொருளாளர் லதா கிருஷ்ணகுமார். மொத்தத்தில் இந்த மூன்றாவது ஆண்டு நிறைவு விழா அனைவருக்கும் மனம் நிறைந்த ஒரு விழாவாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன