
ஒருவரின் முகத்திற்கு கம்பீரம் அளிப்பது எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்களா செவிகளா வாயா அல்லது கன்னங்களா? மூக்கு தான் அந்தப்பெருமையை அடைகிறது!
முகத்தில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் மூக்குதான் முகத்துக்கே பொலிவைத்தருகிறது. நெற்றியின்நடுவே இரு புருவங்களுக்கு மத்தியில் தொடங்கி வாய்க்கு மேலே வந்து முடியும் மூக்கின் கம்பீரம் தனிதான்.
உலகப்பேரழகி கிளியோபாட்ரா என்றதுமே அந்த அழகிய நாசிதானே முதலில் நினைவுக்கு வருகிறது!
கருடபுராணம் என்னும் பழைய நூல் சொல்கிறது நீண்ட நாசி உள்ளமனிதர்கள் அதிர்ஷ்டக்காரர்களாம்!
மகாகவி வால்மீகி தனது ராமாயனத்தில் ராமனின் அங்கங்களை வர்ணிக்கும்போது மூக்கையும் வர்ணிக்கிறார்.சுனாசிகா என்று.
..அனுமனுக்கு தாமிரசிவப்பில் சுந்தரமான நாசியாம்! இதையும் வால்மீகி ராமாயணத்தில்குறிப்பிடுவார்.
இதே ராமாயணத்தில் சூர்ப்பனை மூக்கறுபடலம் முக்கியமான ஒன்று. ராமனை விரும்பி தன் ஆசையை அவள் சொல்லும்போது லஷ்மணன் கொதிப்படைந்து அவள் மூக்கினைதான் முதலில் வெட்டுகிறான்! மூக்கறுபட்ட தங்கை நிலைகண்டு இரக்கப்பட்டதைவிடவும்அவள் வாயினால் சீதாவின் அழகினைக்கேட்டதும் தான் ராவணனுக்கு சீதாதேவியைக்கவர்ந்துவர தோன்றுகிறது.
ஓவியர்களுக்கு கண் காது உதடுகள் வரைவதில் பிரச்சினை இருக்காது நாசி வரையும்போதுதான் தூரிகையில் அவர்கள் கவனம் அதிகமாகும்!
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள் என்கிறது நாசி ஜோஸ்யம்!!
மக்கள் கண்டறியக்கூடிய வாசனைகளின் எண்ணிக்கை 10,000 முதல் 100 பில்லியன் வரை அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று பிலடெல்பியாவில் உள்ள மோனெல் கெமிக்கல் சென்ஸ் மையத்தின் சுவை மற்றும் வாசனை ஆராய்ச்சியாளரான டாக்டர் கேரி பியூசாம்ப் கூறுகிறார். நம் அனைவருக்கும் நம் மூக்கில் வாசனையைக் கண்டறியும் செல்கள் வெவ்வேறு சேர்க்கைகளைக் கொண்டுள்ளன என்று அவர் விளக்குகிறார்
வாசனைத் தகவல்கள் மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவதால், வாசனைகள் நம் வாழ்வின் பல அம்சங்களை பாதிக்கலாம், அதாவது நினைவாற்றல், மனநிலை மற்றும் உணர்ச்சி.
வயதாகும்போது, மூக்கில் ஓரளவுக்கு வாசனை உணரும் திறன் குறைகிறது, ஆனால் மூளையில்தான் அதிகமாகக் குறைகிறது,” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்புச் சிதைவு நோய்கள் மற்றும் வாசனை இழப்பு குறித்த நிபுணர் டாக்டர் தாவங்கரே தேவானந்த்.
கழுகு கருடன்போன்ற பறவைகளை நினைக்கும்போதே அந்த மூக்குகள் கண்முன் பிரும்மாண்டமாகும்.கிளி மூக்கு அழகாக இருக்கும்.சற்றே முன்பக்கம் வளைந்த மூக்கு முகத்துக்கு எடுப்பாக இருக்கும். மூக்குமட்டும் இல்லாவிட்டால் கண்கண்ணாடிக்கு வாகாய் உட்கார இடம் ஏது?
அனாவசியமாய் ஒருபாவமும் அறியாத மூக்கு இந்தவாய் ஏதாவது தப்பாய் பேசிவிட்டால் அடிபடும் nosecut!
மூக்கும் முழியுமாக இருந்தால் ஒருவர் அழகாக இருப்பதாக சொல்கிறோம் மூக்கு அமைப்பில் தான் ஒருவர் முகமே வேறுபடுகிறது அல்லவா? ஜப்பானியர்களை சீனர்களை மூக்கைப்பார்த்தே பெரும்பாலும் நாம் அடையாளம் தெரிந்துகொண்டுவிடுகிறோம்.
ஆனாலும் பாருங்கள்
நீரின்றி அமையாது உலகுபோல நாசியின்றி இயங்காது உடம்பு ஆமாம் ஒருவர் இறந்தால் மூச்சடங்கிவிட்டது என்கிறோம்.அதை உறுதி செய்துகொள்ள விரல்களை மூக்கின் கீழே தான் வைத்துப்பார்க்கிறோம். ப்ராணவாயு எனும் மூச்சுக்கு உதவும் காற்றினை மூக்கு வழியாக உடலுக்கு செலுத்துகிறது.
தியானத்துக்கு மூக்குதான் அவசியம்.பெண்கள்முகத்திற்கு அழகுசேர்ப்பது மூக்குத்திதானே!
.ப்ராணாயாமம் செய்ய , வாசனைகளை நுகர,கோபம் வந்தால் (மூக்குக்குமேல் கோபம்):) என்று மூக்கின் பயன்பாடுகள் அதிகம் இருக்க நாம் எந்தவிஷயத்திலாவது தலையிட்டால்’உன் மூக்கை நுழைக்காதே’ என்று அதட்டுகிறார்கள். நம்மால் மூக்குக்கு கெட்டபெயர் பாருங்கள்!
யாரையாவது மட்டம்தட்டவேண்டுமானல் நல்ல நோஸ்கட் கொடுத்தேன் என்கிறார்கள்.நாமும் எந்தவிஷயத்திலாவது நுழைந்து தோற்றால் மூக்கறுபட்டோம் என்கிறோம்.
எப்படியோ போங்கள் மூக்கு விஷயம் மேலும் எழுதிக்கொண்டேபோனால் மூக்கின்மேல் விரலை வைத்து நீங்கள் வியக்கலாமோ என்னவோ!

ஒரு மூக்கு பத்தி இத்தனை விஷயமா!!! மூக்கின் மேல் விரலை வெச்சு படிச்சு என் மூக்கு சிவந்தே போயிடுத்து!!! Mythili, you always write something unusual and capture everyone’s attention and love. Loved it. Love Shankari