ஜி பி சதுர்புஜன்/மத்தளம்

“என்னடா ? இப்பிடி  மொட்டையா இருக்கே ?”

பதைபதைப்புடன் என்னைப் பார்த்துக் கேட்டான் வைத்தீஸ்வரன். பழைய பள்ளி நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தோம். வெளிப்பிரகாரக் கம்பி வரிசைகளைப் பாம்பு போல வளைந்து வளைந்து கடந்து உட்பிரகாரத்திற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.
எனக்கு வைத்தீஸ்வரனின் பதைபதைப்பு சுத்தமாகப் புரியவில்லை.
“மொட்டையா ? என்னடா உளர்ற….? இந்த அறுபது வயதிலும் புசுபுசுன்னு என் தலையிலே முடி இருக்கே ? நீதான் சொட்டை !” என்று ஆசையாக அவன் வழுக்கைத் தலையைத் தடவினேன்.
“அதில்லேடா ! மண்டையில இருக்கிற முடியைப் பத்தி சொல்லல…. என்ன பிராமணனா இருந்துண்டு தோள்ல பூணல் இல்லாம இப்படி மொட்டையா இருக்கேன்னு கேட்டேன் ! எங்கே போச்சுடா உன்னோட பூணல் ?”
ஆமாம்…. அப்போதுதான் கவனித்தேன். வைத்தீஸ்வரன் வெள்ளை வெளேர் என்று பூணூல் தரித்திருந்தான். அதைப் பார்க்கும்போது என் உடம்பு வெற்றுடம்புதானே !
“ஓ அதைக் கேக்கறியா வைத்தி ? பூணல் போட்டுத்தான் ஆகணுமா ? உனக்குத்தான் தெரியுமே ! நான் நம்மளோட போர்டிங் ஸ்கூல்ல இருந்த போதே, எட்டு வயதிலேயே பூணூலைக் கழற்றி ஆணில மாட்டிட்டேனே ! சின்ன வயசுலேயே தாத்தா இருக்கும்போதே பூணூல் போடணும்னு குடும்ப வழக்கப்படி என்னோட ஏழு வயசுலயே போட்டு விட்டாங்க…. அதுக்கப்புறம் போர்டிங் ஸ்கூல் வந்துட்டேன்…வந்து கொஞ்ச நாள்லேயே கழட்டி வச்சுட்டேன்….”
யாரோ “முன்னால போங்க !”, என்று கூட்டத்தில் தள்ளி விட்டார்கள். பேச்சு மும்முரத்தில் க்யூவின் முன்னேற்றத்தைக் கவனிக்கவில்லை.
முன்னேறினோம்.
“ஏன் கழட்டினே? வீட்டுல பணம் செலவழிச்சு, பண்டிகையாட்டம் கொண்டாடி, ஆசையா போட்டு விட்டதை சும்மா போட்டுண்டு இருக்க வேண்டியதுதானே ?”
வைத்தி என்றோ நடந்ததற்கு, இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இன்று கோபித்துக் கொண்டான் என்னை.
“வைத்தி….அது என்னன்னா… நம்ம ஸ்கூலுக்கு பூணலோட வந்தபோது, எல்லா பசங்களும் கேலி பண்ணினாங்க…. டேய் பார்ப்பான், டேய் பார்ப்பான்னாங்க…. அப்ப மனசு ரொம்ப கஷ்டப்பட்டேன்….எதுக்கு இப்படி எல்லார் கேலிக்கும் உள்ளாகணும்னு கழட்டி வெச்சேன் ! கூட இருந்த மொத்த பிராமண பசங்களும், உன்னைப்போல ஒத்தர் இரண்டு பேரைத் தவிர – எல்லாரும் இதையேதான பண்ணினாங்க !”
வைத்தி என்னுடைய பழைய ரணத்தை எல்லாம் கிளறி விட்டு விட்டான். எந்த ஒரு மன விகல்பமும் இல்லாத என்னைச் சுற்றி இருந்தவர்களுடைய கேலியும் கிண்டலும் குத்திக்காயப்படுத்திய சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது…. அப்போதுதானே “ஒரு பார்ப்பனனின் பிரார்த்தனை” என்று புதுக்கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன் ?,,,,
“சரி…. அப்ப கேலி பண்ணினாங்கன்னு கழட்டினே ! இன்னிக்கி யார் உன்னை கேலி பண்றாங்க ? ஏன் இன்னும் பூணலை போட்டுக்காம இருக்கே ?”
வைத்தி என்னை விடுவதாய் இல்லை. மேலும் மேலும் விளக்கம் கேட்கிறான்….
அது இல்லேடா வைத்தி…. நீ சொல்றது கரெக்ட். இப்ப யாரும் என்னை வறுத்தெடுக்கலை. ஆனா, அப்புறம் காலேஜுக்கு போனபோது நானே பலவிதமான சுய பரிசோதனையில் ஈடுபட்டேன். என்னையே பல கேள்விகளைக் கேட்டுக்கிட்டேன். “எதுக்காக மத்தவங்க கிட்ட இருந்து நம்மை வித்தியாசப்படுத்திக்கணும் ?” என்கிற கேள்வி என்னைக் குடைந்தது. இப்படிப்பட்ட சுய சிந்தனையினால இதெல்லாம் எனக்கு வேண்டாம்னு நானே தீர்மானிச்சுக்கிட்டேன் ! அதைத்தான் இன்னைக்கும் ஃபாலோ பண்றேன்…. இது எதுவும் எனக்கு தப்பாத் தோணல !”
“ஓ…. அப்ப நீ உன்னோட அப்பா அம்மாவுக்கு ஸ்ரார்த்தம் எல்லாம் கூட பண்றது இல்லையோ ? அது ரொம்ப பாவம்டா ! ஒழுங்கா, இனிமேலாவது பண்ண ஆரம்பி ! உன் நன்மைக்காகத்தான் சொல்றேன் !” – வைத்தி எனக்கு உரிமையுடன் அட்வைஸ் செய்தான்.
இதற்குள் குருவாயூர் கிருஷ்ணனை நெருங்கிவிட்டோம். அமர்க்களமான தரிசனம். எனக்கு அந்த குருவாயூரப்பன்தான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பயபக்தியுடன் நகர்ந்தோம்.
நான் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் இரண்டு நாட்கள் நான் பார்க்காமல் விட்ட வாட்ஸ்அப் குரூப் மெசேஜ்களை ஓடவிட்டுப் பார்த்தேன்.
“இன்னிக்கும் ஜாதிப் பிரச்சனை தலை விரித்தாடுது…. இங்கே அமெரிக்காவிலே வந்து கூட இந்தியர்கள் ஜாதி வித்தியாசம் பார்க்கறாங்க !” – சத்யகீர்த்தி ஸ்கூல் குரூப்பில் எழுதி இருந்தான்.
“ஆமாண்டா! இந்துக்கள் மத்தியில் மட்டுமல்ல…. கிறிஸ்டியன்ஸ்ல கூட ஜாதிப் பிரச்சனை இருக்கு…. வித்தியாசம் பாக்குறாங்க…. மத்த மதங்களைப் பத்தி எனக்குத் தெரியல….” – இது மேத்யூவின் பங்களிப்பு.
“டேய் முரளி ! நீ ஏன்டா இன்னும் முரளி ஐயர்னு பேர் வெச்சிருக்கே ? பூணூலை எல்லாம் கழட்டிட்டே ! ஆனா, பேர்ல இன்னும் ஐயர்னு வச்சிருக்க ?”- என் மேல் பாய்ந்திருந்தான் சந்திரசேகர்.
“டேய் சும்மா இருங்கடா ! நம்ம குரூப்லேயே பலரும் அவங்கவங்க ஜாதி சங்கங்களில் – செட்டியார், பிள்ளை, ரெட்டியார்னு மெம்பராகத்தானே இருக்கோம் ? இப்பவும் எல்லாரும் அரேஞ்ச்ட் மேரேஜ்னு வந்தா, ஜாதி பார்த்துத்தானே நம்ம பசங்களுக்குக் கல்யாணம் பண்றோம் ? நம்ப ஜாதில பொருத்தமான ஜோடி கிடைக்கலைன்னாத்தானே அடுத்த ஜாதியை திரும்பிப் பாக்கிறோம் ?”
நிதர்சனத்தின் நிறத்தைச் சுட்டிக் காட்டினேன் நான்.
அமைதியானார்கள் அனைவரும்.
நம் பயணம் தொடரத்தான் செய்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன