
பக்தர்களைத் தேடி வந்து தரிசனம் தரும் பாபா!
யுகங்கள் தோறும் அவதார புருஷர்கள் தீயவர்களை ஒழித்து நல்லவர்களை காக்க இவ்வுலகில் அவதரித்தார்கள் என்று புராணங்கள் இதிகாசங்களில் படிக்கிறோம். ஒரு ராவணனை ஒழிக்க ஒரு ராமாவதாரம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நல்லவர்கள், தீயவர்கள் என்று பாகுபடுத்திப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்போது? ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு ராமனும் இருக்கிறான். ராவணனும் இருக்கிறான். ஒரு தர்மனும் இருக்கிறான். ஒரு துரியோதனனும் இருக்கிறான். இப்பேர்ப்பட்ட மனிதர்கள் நிறைந்த இந்த கலியுகத்தில், மாசற்ற அன்பினால் மனிதர்களை ஆட்கொண்டு ஒன்றும் புரியாமல் மாயையில் உழலும் அவர்களுக்கு உதவி, அவர்கள் யார் என்பதை, உண்மையில் அவர்களுக்கு உணர்த்தவே மகான்களின் தோற்றம் ஏற்படுகிறது.
"என் அன்பின் வடிவங்களே!" என்று வாஞ்சையோடு அடியவர்களையழைக்கும் இந்த நூற்றாண்டின் வாழ்ந்த அவதார புருஷர் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா, எப்போதும் சொல்வது "என் வாழ்க்கை தான் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கும் செய்தி!" என்பதுதான். பிரேமையின் முழு உருவமாக விளங்கி மனித குலத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவையால் உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் நேசத்துக்குப் பாத்திரமானார்.
கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதுதான் நாம் கடைத்தேற ஒரே வழி என்று அறிவுறுத்தும் பாபா நாமஸ்மரணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி,
"அது அனைத்து ஆன்மீக சாதனைப்பயிற்சிகளிலும் முற்றிலும் உயர்ந்தது. நீ நாமஸ்மரணம் செய்யும்போது உணர்ச்சிப் பெருக்கு, ஆழ்ந்த பக்தி, அன்பு இவற்றோடு நாமத்தைக் கூறு. அது உனக்கு எல்லா நன்மைகளையும் அளிக்க வல்லது. நீ தேர்ந்தெடுக்கிற கடவுளின் பெயர் எந்த மதத்தை அல்லது எந்த நாட்டைச் சேர்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தினமும் நாமஸ்மரணத்திற்காக ஐந்து நிமிடமாவது செலவிடு. கலியுகத்தில் நிறுத்த இயலாத பிறப்பு, இறப்பு என்கிற சம்ஸாரச் சுழலிலிருந்து விடுதலையும் முக்தியும் பெற நாமஸ்மரணம் போதுமானது. உன்னை அழிக்க நினைக்கும் எல்லா குணக்கேடுகளிலிருந்தும் நாமஸ்மரணம் உன்னைப் பாதுகாத்து உனக்கு எப்போதும் மன அமைதி தர வல்லது." என்கிறார்.
புட்டபர்த்தியில் பாபாவின் தரிசனத்திற்காக சாயி குல்வந்த் ஹாலில் பக்தர்கள் வந்து அமர்வார்கள். அந்த ஹாலின் அமைப்பு ஏதோ தேவலோகம் போலிருக்கும். ஹாலின் மேல் தளத்தின் உட்புறச் சுவரை அண்ணாந்து பார்த்தோமானால் மரகதப் பச்சை வண்ணத்தில் சதுரம் சதுரமாக கலை நேர்த்தியோடு கூடிய அலங்கார வடிவங்களைப் பார்க்கலாம். பார்த்த மாத்திரத்திலேயே மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அந்த வண்ணமும் அலங்காரமும் பாபாவின் அறிவுரைப்படி அமைக்கப்பட்டதாம். லட்சக்கணக்கில் பக்தர்கள் அமர்ந்திருந்த போதும் ஒரு குண்டூசி கீழே விழுந்தால் கூட துல்லியமாகக் கேட்கும் அளவுக்கு நிசப்தம். உலகம் முழுவதையும் தன் கருணைப் பார்வையால் வசீகரித்து மக்களைக் காக்கும் பகவானின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். பாபா தன் இருப்பிடத்தை விட்டுக் கிளம்பி தரிசனம் தர வருகிறார் என்பதை அறிவிக்க மிக மெலிதான தொனியில் புல்லாங்குழல் இசையொலி கேட்கும். அந்த இசை நிசப்தமான சுற்றுச் சூழலுக்கு மேலும் இனிமை கூட்ட, பக்தர்கள் பக்தியோடு கூப்பிய கரங்களுடன் பாபா வரும் வழி மேல் விழி வைத்து ஆவலோடு காத்திருப்பார்கள்.
'ஆஹா!' எத்தகைய மகோன்னதமான காட்சி! ஒரு மலர்ந்த ரோஜாவே நடந்து வருகிறதா? கருணையும், இரக்கமுமே மனித வடிவெடுத்து, இதழ்களில் விகசிக்கும் புன்முறுவலுடன் காற்றில் மிதப்பது போல பக்தர்களைக் காட்து ரட்சிக்க பக்தர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகளின் நடுவே நடந்து வரும் காட்சியை வருணிக்க வார்த்தைகளேயில்லை. அவரை தரிசித்ததுமே அருள் மழை பொழியும் அந்த திருவடிவம் நம்மை அமைதிப்படுத்தி இணையற்ற ஆனந்த பரவசத்தில் திளைக்க வைக்கிறது.
எல்லோரையும் நேசி! எல்லோருக்கும் சேவை செய்!
Love all! Serve all!
எப்போதும் உதவி செய்! ஒருபோதும் யாரையும் துன்பப்படுத்தாதே!
Help ever! Hurt never!
வேதங்கள் உபநிஷத்துக்களின் சாராம்சங்கள் எல்லாம் நாலே வரிகளில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உபதேசமாக பக்தர்களுக்குக் கிடைக்கிறது.

Superb discription in simple and effective words. Excellent Sai Ram.