முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கலைமகளும், திருமகளும்

பாபுவுக்கு எப்படி இசையில் அவ்வளவு ஆர்வம் வந்தது என்று தெரியாது.
இளையராஜா இசையென்றால் உயிரை விடுவான்.‌அதுவும் அவர் இசையமைத்து வெளிவந்த எண்பது மற்றும் தொண்ணூறுகளில் வந்த படப் பாடல்களில் கிடாரை வைத்து அவர் செய்த இசை அற்புதத்தை மிகவும் ரசிப்பான்.
படிப்பு ஏறாமல் பாதியிலேயே நிறுத்திய அவன், கொட்டாங்குச்சியில் கம்பியை இணைத்து, ஒரு நூதனமான வாத்தியத்தைத் தயாரித்து, இளையராஜா பாடல்களையும், சில நேரங்களில் தான் மெட்டுப் போட்ட பாடல்களையும் அதில் இசைத்து மகிழ்வான்.
தந்தையை இழந்த அவனை, வீட்டு வேலை செய்து காப்பாற்றி வரும் அம்மா, சில நேரங்களில் இவன் மெட்டு போட்ட பாடல்களை இரசித்தும் , பல நேரங்களில், அவனை உருப்படும் வழியைப் பார்க்கச் சொல்லித் திட்டியும் வருபவள்.
அவள் வேலை செய்யும் வீட்டு முதலாளியின் பணக்கார நண்பர் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்று அறிந்து இவனை நிறைய புத்திமதி சொல்லி அனுப்பி இருந்தாள் அம்மா.
இவனை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பங்களா வாட்ச் மேன், ஹாலில் அமரச் சொல்லி விட்டு, ஐயா பிஸியாக உள்ளதாகவும், தான் வந்து கூப்பிடும்போது மாடியறைக்குப் போக வேண்டுமென்றும் கூறிவிட்டுப் போய்விட்டான்.
அந்த அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பங்களா வீட்டைப் பார்வையால் அளந்த பாபுவின் கண்கள் சுவரில் மாட்டப் பட்டிருந்த கிடாரை ஆசையுடன் பார்த்தன.
அம்மாவின் போதனைகள் மனதுக்குள் ஒரு பக்கம் எதிரொலித்தாலும், கை துறுதுறுப்பை அடக்க முடியாமல், கிடாரை ஆசையுடன் கையில் எடுத்து விட்டான் பாபு.
மெதுவாக அதிலிருந்த வில்லையினால் கம்பிகளை மீட்ட, முதலில் அபஸ்வரமாக ஒலித்த வாத்தியம், இவன் கை இழுப்புக்குக் கட்டுப்பட்டு இனிய இசையை வழியவிட்டு அந்த இடத்தைத் தேவலோகமாக மாற்றியது.
முதலாளிக்கு அவரது குருநாதர் பரிசாகத் தந்த அந்த வாத்தியத்தை யார் தொட்டாலும் கடுங்கோபமடைவாரென்பதை அறிந்திருந்த , இவன் வாசிப்பைக் கேட்டு ஹாலுக்கு ஓடி வந்த வாட்ச்மேன், இவன் வாசிப்பதைப் பார்த்து விட்டு , ஒரு பெரும் புயலை எதிர் பார்த்தவனாய்ச் செய்வதறியாமல் நின்றான்.
கண்களை மூடி வாசித்த பாபு, கை தட்டலைக் கேட்டுக் கண் விழித்தால் எதிரே,விபூதி குங்குமம் அணிந்த, எங்கோ பார்த்த தோற்றம் கொண்ட அந்த நடுத்தர வயதானவர் நின்று கை தட்டிக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி இசையமைப்பாளரான அவர், தாம் இசையமைக்கும் தொடரின் சூழலுக்கேற்ற மெட்டைத் தேடிக் கொண்டிருந்த போது, அதே மெட்டை, பாபு இசைத்ததைப் பாராட்டி அவனைப் பற்றி விசாரித்தார்.
அதுவரை கலைமகள் அருள் மட்டுமே பெற்றிருந்த அவனுக்குத் திருமகளின் கடைவிழிப் பார்வையும் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன