
“அப்பா..அண்ணா அடிக்கிறான்..”
ஆத்யாவின் அலறலில் என் கையிலிருந்த காஃபி மேலே சிந்தியது. என்ன குருஷேக்த்ரம் இன்று என்ற பதைப்பில் உள்ளே ஓடினேன்.
எட்டு வயது தங்கையின் மேல் கிட்டத்தட்ட அமர்ந்து அவளை அடி விளாசிக் கொண்டிருந்தான் என் மகன் ஆரவ்.
பன்னிரண்டு வயது.
” ஆரவ், என்ன இது? ” என்று கத்தியபடி அவனை விலக்கும் போதுதான் கவனித்தேன். அவன் முகமும் அழுதழுது வீங்கி இருந்தது. என்னைப் பார்த்தவுடன் இருவரும் கோரசாக அமெரிக்கன் ப்ளூஸ் போன்று சத்தம் எழுப்பினார்கள்.
ஆரவ் அழுதுகொண்டே கை காட்டிய திசையில் பார்த்தேன். எனக்கே ஒரு நிமிடம் இதயத் துடிப்பு நின்றுவிட்டது.
அவனுக்கு இசையும் ஓவியமும் உயிர். பள்ளிகளுக்கு இடையே நடக்கும் ஒரு ஓவியப் போட்டிக்காக அவனது ஆதர்சம் பாப் மேர்லே வை ஒரு வாரமாக பொறுமையாக வாட்டர்கலரில் வரைந்து நேற்று இரவுதான் முடித்து இருந்தான். இன்று கொண்டு போக வேண்டும். ஆனால் இப்போது பாப் மேர்லே சகல வண்ணங்களிலும் வழிந்து கொண்டிருந்தார். விளங்கிவிட்டது. படத்தை முடித்த பின்தான் காண்பிப்பேன் என்று ஒரு வாரமாக அவளை அந்த அறைக்குள் விடவில்லை. ஆர்வ மிகுதியில் அவள் அவனுக்குத் தெரியாமல் போய் பார்க்கும் போது
கை தவறி தண்ணீர் கொட்டி இருக்க வேண்டும்.
” சாரிப்பா, வேணும்னு செய்யலைப்பா. தெரியாம கொட்டிடுச்சுப்பா. சாரிண்ணா.”
” எல்லாம் வேஸ்ட்” அவன் இன்னும் அழ, அவளும் சேர்ந்து அழ எனக்குத் தலை சுற்றியது.யோசித்தேன்.
” ஆரவ், இது இப்படியே இருக்கட்டும். படத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்கலாம்.
‘ இசைக்கும் ஓவியம்’
” அதாவது அவரது ஓவியம் கூட இசைக்கும். வழிகிற வண்ணங்கள் ஒரு குறியீடு. கேட்டா அந்த மாதிரி சொல்லு.
புரியுதா?”
அரைகுறை மனதோடு எடுத்துக் கொண்டுபோனான். மாலை கோப்பையோடு திரும்ப வந்தான்.
” நான் உனக்காக பாப் மேர்லே கிட்ட வேண்டிக்கிட்டேன் அண்ணா” என்றாள் ஆத்யா.
***

ரொம்ப நல்லாருக்கு கதை.
கீதா