சுஸ்ரீ/ஒரு பஸ்கரின் தினம்

லண்டன் நகரத்தின் ‘டிரஃபால்கர் ஸ்கொயர்’ எப்போதும் போலப் படு பிசி.
ஜான் வெக்சல் மெதுவாகத் தன் பொருட்களை முதுகிலும் கைகளிலுமாகச் சுமந்து கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து மெதுவாய் அவர்களை விலக்கியவண்ணம் நடந்தான். டூரிஸ்ட் கூட்டம் நிரம்பி வழியும் நேஷனல் காலரிக்கு எதிரில் உள்ள அந்த அழகான வட்ட வடிவ குளத்துக்கு அருகில் தன் வழக்கமான இடத்தை அணுகினான்.

முதுகில் ஒரு கயிற்றின் ஆதாரத்தோடு தொங்கிய மரப் பெட்டியை இறக்கி வைத்து விட்டு நேராக நிமிர்ந்து உடம்பை முறுக்கி வெஸ்ட்மின்ஸ்டர் ரெயில் நிலையத்திலிருந்து நடந்து வந்த களைப்பை விரட்டி அடிக்க முயற்சி செய்தான்.

அடுத்து கழுத்தில் மாட்டியிருந்த கிடார் வாத்யம் கீழே சங்கீதமாய் இறங்கியது.மரப் பெட்டியைத் திறந்து தன் கனத்த கோட், மதிய உணவாக மார்த்தா கொடுத்தனுப்பிய சாண்ட்விச் பேக்கிங், காஃபி நிறைந்த ஃபிளாஸ்க் ஒவ்வொன்றாய் மரப் பெட்டிக்குள் வைத்து மூடினான். இப்போது இன்றைய தினத்தைச் சந்திக்கத் தயார்.

அந்தப் பெட்டிதான் அவன் அமர இருக்கை.கிடாரை சரியாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டு அதன் நரம்புகளை டிங், டிங் என அன்பாய்த் தடவிக் கொடுத்தான்.
சட்டென உயிர் பெற்ற வாத்யம் பிரியன் ஆடம்ஸ்(Brian Adams) பிரபலமான
“எவ்ரி திங் ஐ டூ,ஐ டூ இட் ஃபார் யூ” பாடல் ஆக்ரோஷமாய் வெளி வந்ததுஅந்த சின்ன வாத்யத்திலிருந்து. மெல்ல மெல்ல கூட்டம் சூழ்ந்தது பாடல் கரகோஷத்துடன் முடிந்தவுடன் சுற்றியிருந்த கூட்டம் மெதுவே கலைகிறது
அதில் நாலைந்து பேர் சில பவுண்ட் நாணயங்களை ஜான் வெக்சல் முன்னால் இருந்த அட்டை டப்பாவில் போட்டு விட்டு நகர்ந்தனர். மதியம் வரை அந்தக் கிடார் பல பாடல்களை இசைத்து மகிழ்வித்தாலும் அட்டை டப்பாவில் விழுந்தது சில்லறை நாணயங்களே.

லண்டனின் பஸ்கர்களில் (தெருப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள்) ஒருவனான ஜான் அன்றைய கலெக்‌ஷனை எண்ணி கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ரெயில் ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.தின்பண்ட கடைகள் நிறைந்த ரயில் நிலையத்தில் குழந்தை ஆலிவருக்கு பெரிய கேக் வாங்க ஆசைதான், தினசரி செலவுக்கே 30 பவுண்ட் வேணும்.
என்ன செய்ய ஒரு சாக்லெட் டோநட் வாங்கலாம் அவ்வளவுதான்.கண்ணீர் பொங்கியது.

லண்டனின் பணக்காரர்கள் பெண்ட்லி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ கார்களில் பறந்தனர்.உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்கர்களும் நகரில் நிரம்பி வழிகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன