கைத்தடியுடன் எழுந்து வா!

 கு. மா. பா. திருநாவுக்கரசு


நெட்ட நெடு உயரம்! 

புன்னகைத் தவழும் முகம்! 

கைத்தடியுடன்

வட்ட வடிவக் முகக்கண்ணாடி! 

முழுவழுக்கைத் தலை! 

அரையாடையில் 

ஆடும் கடிகாரம்! 

எளிய நின் தோற்றத்தை… 

இன்று

நின் பிறந்தநாளைக் கொண்டாடி

காந்தியம் பேசும் 

அரசியல்வாதி மட்டுமல்ல, 

ஆன்மிக ஞானிகளும் கூட

கடைப் பிடிப்பதில்லை! 


மத நல்லிணக்கத்திற்காக – நின்

வாழ்நாளையே அர்ப்பணித்தாய்!

சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்க

மூன்றாம் வகுப்பில் பயணித்தாய்!

அரிச்சந்திரன் கதைக்கேட்டு

பொய்மையைக் கைவிட்டாய்!


வெள்ளையர்களை வெளியேற்றி

விடுதலையைப் பெற்றுத் தந்தாய்!  


இன்று… 

பள்ளத்தில் உழலும் மக்கள்

பரிதவித்துக் கிடக்கின்றார்! – பல

கொள்ளையர்கள் மேலமர்ந்து

கும்மாளம் போடுகின்றார்!

கரண்சியில் புன்னகைக்

காட்டும் உன்னை

கட்டுக் கட்டாய் பதுக்கி வைத்து, 

வாராணசி தண்ணீரில்

பாவத்தைக் கழுவுகின்றார்! 


கைத்தடியுடன் நீ 

மீண்டும் எழுந்து வா! 

பள்ளத்தில் தவிப்பவர்க்கு

கைக்கொடுத்து தூக்கிவிடு! 

அகிம்சையை மறந்து

கொள்ளையடிப்பவரை

தடியடியால் நீக்கிவிடு! 

One Comment on “கைத்தடியுடன் எழுந்து வா!”

  1. யதார்த்தமாக அருமையான வரிகளில் கவிஞரின் ஆதங்கம் கவிதையாக மலர்ந்துள்ளது. வெகு நன்று.

Comments are closed.