மூன்று கவிதைகள்

பானுமதி ந

1.வானும், நிலமும்

கூப்பிடு தூரம் தான் என்றார்கள்.

எட்டும் தொலைவில் என்று சொன்னார்கள்.

வானம் கூட தொட்டு விடும் தூரம் தான்.

என் கால்கள் பாவும் நிலம்.

2. தேடல்

மஞ்சள் குளத்தின் மதகில் மைனாக்கள் உல்லாசம்

கிளையில் தனித்த குயிலின்  குரல் கேட்குமா இனி?

கூவி அழைத்தால் குரல் கொடுப்பானாமே?

எந்த வனத்தில் தேட?

3.மனமும், மனிதனும்

உள்ளத்து இடந்தனிலே ஒன்றிக் கலந்திட்ட

கள் அது கடன் தனை மறந்திடாய் மனிதா

பள்ளத்தில் பாய்ந்தோடும் நீர் போல

கள்ளத்தனம் நீக்கி வாழுதல் நலமே!-அதில்

எள்ளத்தினை தவறுமிலை காண்.

கல்லாய் அமர்ந்தான் கடவுள் துயின்றும் விட்டான்

சொல்லால் அர்சித்தால் செவியும் இலானாய்

பண்ணைப் பாடினால் பரிவு மற்றோனாய்

கண்ணீர் சொரிந்தால் கருணையும் யிலானாய்

நாவல் மரத்தடியில் நமச்சிவாயன் இருக்கின்றான்.

செருக்குற்று நீ அழைத்தால் தேன் வருமோடா

கருவுற்று உருகி வரும் ஈன்றெடுத்த மகவின் பால்

உருவற்று உருகி வரும் அன்பிலாது போகுமோ

இழிவு செயின் தாயின் மனமும் நோகாது நிற்குமோ

தெளிவுற்று சிந்தனையில் திகழ்ந்திடு மனிதா!

காரணங்கள் பல கூறி ஏமாற்றும் மனமே

தோரணங்கள் தொங்கிட பவனி வரும் கள்ளன்

தோரணமாய்க் கண்ணீர் வழிந்தோடும் மக்கள் தன்

மால் மயக்கம் பற்றின் மேல் படிந்திடவும் வைத்தானே

தாள் நீக்கி கதவைத் திறந்திடவும் மறந்தானே!

வாலரவு விஷமதனை விருந்துண்ட மாதேவன்

கோளரவு விஷத்தை குன்றிட்ட கோபாலன்

மால் மயக்கம் உந்தன் மதி மயக்கம் தானேடா

உன் மயக்கில் தேனுமே கசந்து போகும் தானேடா

ஊண் உறக்கம் வென்றிடு, உண்மையை உணர்ந்திடு.

ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தானஞ்சும்

ஆதியே அருளே பாலன் அழுததை தடுத்து ஆட்கொண்டாய்

ஓதியே உந்தன் நாமம் உயர்ந்தோர் பெரியோரெல்லாம்

பாவியே நானும் உந்தன் பரிவினை மறந்து போனேன்

சோதியே வாராய் உன் சரண மலரைத் தாராய்.