உரிமையும் இருமையும்/கால சுப்ரமணியம்

பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும். அதை அப்படியே பயன்படுத்தினாலும் வேறுவிதத்தில் (மீண்டும் தகவலை வைத்து அந்த பழைய மூலத்தைத் தானே தேடிக் கண்டுபிடித்தும் கூட) வெளியிடுவதைத் தடுக்க முடியாது.

ஆனால் கு.ப.சேதுஅம்மாள் படைப்புகள் தான் நாட்டுடமை ஆயின (அதிலும் ஏதோ ஒரு தொக்கு வைத்தே கொடுத்தார்கள் என்று நினைவு). கு.ப.ரா.வுக்கு இன்னும் இல்லை என்றே நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம். எனவே குபரா விஷயத்தில் சிக்கல் எழுகிறது என்றும் நம்புகிறேன். வாரிசு பற்றி அறிய முடியாததால் நான் சங்கரராமின் மண்ணாசையை மறுபதிப்புச் செய்தேன். பல பதிப்புகள் அதற்கு இன்று உள்ளன. ஆனால் நான் சங்கரராமின் (சுமார் என்றாலும்) அனைத்துப் புத்தகங்களையும் தேடிப்பிடித்து பதிப்பிக்க வைத்துள்ளேன். யாரும் முன்னதாகப் பதிப்பித்தால் ஒன்றும் செய்யமுடியாது. நானும் ஒரு பதிப்பு ஆக வெளியிடலாம்.


ஷண்முகசுந்தரத்தின் வாரிசுகளும் முன்பு அவரது நூல்களைப் போடுவதில் முகம்கொடுக்கக்கூட இல்லை, அவர் மேல் அவர்களுக்கு அவ்வளவு கடுப்பு. ஒருசமயம் நானும் பெருமாள் முருகனும் சேலத்தில் ஒரு பள்ளியில் தம்பி மகன் இருப்பதாகக் கேள்விப்பட்டுத் தேடிச் சென்று இல்லாமல் ஏமாந்தோம். நான் சட்டிசுட்டது என்ற நாவலை முதல்பதிப்பைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தேன். அதற்குமுன்பே மூன்று நாவல்களுக்குள் அதை பதிப்பித்திருந்தார் பெருமாள் முருகன். ஆனால் அது ராணிமுத்து வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட பதிப்பு. எனது பதிப்புக்குப்பின் பெருமாள் முருகன் நற்றிணையில் சட்டி சுட்டது கொண்டுவந்தார். அவர் இப்போது முதல் பதிப்பைத் தேடிப் பிடித்திருக்கலாம். அல்லது என் பதிப்பைக் கூட பயன்படுத்தியிருக்கலாம் ( நான் அதில் செய்த சில எழுத்துத் திருத்தங்கள் இதில் உள்ளாத என்பதை இனித்தான் நான் ஒப்பிடவேண்டும்.) இதை நான் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை.

இப்போது ஷண்முகசுந்தரம் பெயரில் (சுப்ரபாரதி மணியன்) விருது ஒன்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அவரது வாரிசான தம்பி மகனைத் தொடர்பு கொண்டது தெரியவருகிறது. சரி ஏதோ அவரும் செய்திருப்பார்போலிருக்கிறது என்று ஒரு புரிதல் இவருக்கு இன்று ஏற்பட்டிருக்கலாம். முன்பு சுணக்கம் கொண்டிருந்த சி.சு,செல்லப்பாவின் மகன் வாடிவாசல் திரைப்பட முயற்சிக்குப் பின் செல்லப்பாவின் எழுத்துக்களை எல்லாம் மறுபிரசுரம் செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதுபோல்.
நான் சில அபூர்வமான கதைகளைக் கண்டுபிடித்துவைத்துள்ளேன். அதன் தகவலை வெளியிட்டால் கூட மற்றவர் உடனே தாமே தேடிப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே நானாக வெளியிடும் வரை அவை மறைவாகவே இருக்கும். தற்செயலான தேடலில் யாரும் அவற்றில் சிலதை கண்டுபிடிக்கவும் கூடும். எனவே உரிமை கோரல் என்ற விஷயம் மிகமிகச் சிக்கலானது.


பிரமிள் படைப்புகள் விஷயத்திலேயே சில நுட்பமான சொற்களை ஏதோ போகிறபோக்கில் வீசி இறைத்ததுபோல் சொல்வதைப் பார்க்கலாம். ஆவணத்தைக் காட்டுங்கள் என்கிறார் ஒருவர். ஒப்பந்தத்தைக் காட்டுங்கள் என்கிறார் ஒருவர். ராயல்டிக்காக பாடுபடுபவர்கள் தானே இவர்களிடம் ஆவணத்தையோ ஒப்பந்தத்தையோ காட்டி ஐயம் இடக் கேட்க வேண்டும். ஒப்பந்தம் என்ற சொல் சட்டப்படியானதாகத் தோன்றினாலும் ஏதோ அவருக்காகச் செலவழித்ததுக்கும் உழைத்ததுக்கும் பிரதியாக பெற்றுக்கொண்ட சன்மானம் போல தொனிப்பதைக் கவனிக்கலாம். பிரமிள் தனது படைப்புகளை ஈடுபாட்டுடன் சரியான வகையில் எடுத்துவைப்பதற்குத் தகுதியானவர் இவர் என்ற வகையில்தான் எனக்கு உரிமையாக்கியிருக்கிறார். என்னை விட அவருக்கு பொருளாதார விஷயத்தில் தாரளமாக உதவிய சில அன்பர்களும் வாசகர்களும் உண்டு. ஆனால் படைப்பு விஷயத்தில் தான் என் பங்கை அதிகம் சொல்லலாம். பிற்காலத்தில் அவர் எழுதியதை அப்படியே எனக்கு அனுப்பிவிடுவார். நான் அவருக்குப் பிடிக்காத பத்திரிகைகளில் கூட அவற்றை காலம் கழிகிறதே என்று பிரசுரிக்க வைத்துள்ளேன். அந்தக் கட்டுரைகளை நான் எந்தவிதமாக எடிட் செய்து வெளியிட்டாலும் ஒருசொல் முணுமுணுத்ததில்லை. தகவல் பிழைகளை இலக்கணப் பிழைகளைக் களைவதை வரவேற்பார். தகவல்களைத் தக்க இடங்களில் சேர்த்தாலும் பாராட்டுவார். கதைகளில் கூட சில சொற்களை மாற்றியிருக்கிறேன். நீக்கியிருக்கிறேன். கவிதைகளின் அடிகளை மாற்றி அமைத்திருக்கிறேன். கட்டுரைகளில் ஏராளமான சந்திகளைச் சேர்த்திருக்கிறேன். இப்பொழுது மற்றவர்கள் சிலர் அவரை வெளியிடும்போது தனக்கு உகந்ததை மட்டுமே சேர்ப்பார்கள் மற்றவற்றை ஒதுக்குவார்கள். நான் அவரைத் தொகுக்கும் போது கால வரிசையில் ஒன்றுவிடாமல் தொகுப்பேன். தேர்ந்து தரும்போது என்னுடைய ரசனைக்கு உகந்ததைத் தொகுக்காமல் அவரது ஆளுமையை வெளிப்படுத்துவனவற்றையே சேர்ப்பேன். தன் பெயரை கவிஞராக நிலைநாட்டாதவரும் கவிதை விமர்சனமாக எதுவும் எழுதாதவரும் (என்னைப்போல என்றுகூட வைத்துக்கொள்ளுங்களேன் –

நான் பிரமிளின் கவிதைகளில் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் என்னை நான் எல்லோருக்கும் மேலான படிப்பாளியாக கருதினாலும்.) தேர்ந்த படிப்புமுறை இல்லாதவரும் தொகுக்க வரும் போது அதைத் தவிர்க்கவே நான் முனைவேன். இப்படிப்பட்ட தொகுப்புகள் வந்து பிரமிள் இன்றைய வாசகருக்கு அறிமுகமாவதை விட ”இல்லாமல்” இருப்பதே மேல். பிரமிளைப் பற்றிய எதிர்விமர்சனங்கள் காத்திரமாக இருந்தால் அவையும் இடம் பெறவே செய்வேன். குறை விமர்சனங்கள் என்றால் தவிர்க்கவோ, மேலதிகக் குறிப்புகளோடு வெளியிடவோ செய்வேன். எனக்கு பிரமிள் மேல் வீர வழிபாடு ஒன்றும் கிடையாது. அவரை தகுதிக்கு மீறி மேன்மைப்படுத்தும் நோக்கமும் இல்லை. (அவரது படைப்புகளை வெளியிட மிக உதவிய ஆனால் அவரது செயல்பாடுகளில் எதிர்நிலையான வசந்தகுமார், அப்படித்தொகுக்கும்போது அவரது இலக்கிய அரசியல் கட்டுரைகளை நீக்கவும் அதிரடிக் கவிதைகளைத் தவிர்க்கவும் யோசனை கூறியுள்ளார். அப்படியெல்லாம் அவரைக் காபந்து பண்ண வேண்டியதில்லை என்று இருப்பதை அப்படியே முன்வைக்கவே முனைந்தேன்.)

அவரைப் பற்றி யாரேனும் தவறாக மதிப்பிடும் போது பாய்ந்துபோய் குதறுவதும் கிடையாது. ஆறவிட்டு பிறகு சமயம் வாய்க்கும்போது அதை மறுத்தும் விரித்தும் எழுதவே செய்வேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும் ஒரு ரசனை அளவு இருக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டே எல்லாருடனும் பழகுகிறேன். சிலரிடம் நெருங்கி பழகமுடியாததற்கு மனக்கூச்சமே காரணமாகலாம். நான் பொதுவாக எனது நண்பர்களாக உள்ள எழுத்தாளர்களிடம் அவர்களது படைப்புகளைப் பற்றி விவாதிப்பதே கிடையாது. எழுதும்போது விருப்புவெறுப்பற்ற நிலையில் விருப்போ மறுப்போ வெளிப்படலாம். எனவே என்னை எழுத்தின் மூலம் அறிந்தவர்கள் நேரில் பழகும்போது வியப்படைந்திருக்கிறார்கள்.