
பெயர் தெரியா
ஊரைக்கடக்கும்
பொழுதறியாநேரத்தில்
முகத்தில் மோதும்
மென்பனிக் காற்றில்
சலித்துக் களைத்த
மனம் கரையும் ..
ஆயிரம் வருஷ
அமானுஷ்யமாய்
தூரே துலங்கும்
கோயில் கலசம்
எதுவோ உதிர்த்த
சிறுபொன்சிறகு
காற்றில் நழுவி
தரையைத் தழுவுமுன்
கவிதையொன்றைப்
பற்றிக் கொள்ளும்..
வார்த்தைகளெலாம்
கொட்டிக் கவிழ்த்த பின்
காரணம் இருந்தும் இல்லா
பாரம் மறைய
உணர்வுக் கனலில்
நான் நீறாகி
அமைதி கமழும்
வெறும் வெளி
வீடு.

“நான் நீறாகி” என வாசிக்கவும்..
ரசனைகள் கவனமாய்
வார்த்தைகள் கனமாய்
உணர்வுக்கனல் பொங்கி எழுந்து சாம்பலாகக் கனன்று அடங்கும் கணத்தை அமைதி என்ற அழகும், நியாயமாக மனதில் கனமாகத் துருத்திக் கொண்டு இருந்த வார்த்தைகளை இழந்த பிற்பாடும் பாரம் குறையாமல் ஆதங்கம் பாரமாக இன்னமும் அழுத்துவதை வெளிப்படுத்திய பாங்கு வெகு அருமை.
அருமை
பஞ்ச பூதங்கள்…
ஐந்து வரிகளில்…
அதுவல்லவோ ‘பஞ்ச்’
மிக அருமை நண்பரே
சிறுபொன் சிறகு காற்றில் நழுவி தரையைத் தழுவுமுன்
ஆஹா
கவிதை ஜனிக்கும் நேர அளவு அற்புதம்
தேர்ந்தெடுத்த சொற்கள். விவரிக்கும் சூழலில் இயல்பான அமைதி . காரணம் இருந்தும் பாரம் மறைய…..மனம் இலேசாகும் …சிறு இறகாய் மெல்ல மிதந்து அமைதி சூழ்ந்து…..மோனத்தில் கரையும்.
அற்புதம்.