எஸ். சரத்குமார் /காட்சிப் பிழை

திருச்சி பேருந்து நிலையம்.
விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்பிய அந்த அரசுப் பேருந்தில், பேச்சியம்மாளையும் கருப்பையாவையும் தவிர வேறுயாரும் இல்லை. பேச்சியம்மாள் அதைத் தான் எதிர்ப்பார்த்தாள். எப்போதாவது தான் இப்படி அமையும். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
கருப்பையா, ‘அம்மா…அம்மா…’ என்றபடி அவளைச் சுற்றிக் கொண்டான்.
‘எங்க போகனும்?’
‘கோயம்புத்தூர்ங்க’
பஸ் கண்டக்டர், பேச்சியம்மாளை வித்தியாசமாகப் பார்த்தார். 
‘ஏம்மா. முன்னாடி தான் அவ்வளவு சீட்டு காலியா இருக்குல. அங்க போய் உக்கார வேண்டியது தான’
சொல்லிக் கொண்டே டிக்கெட்டைக் கிழித்தார்.
பேச்சியம்மாள் எதுவும் பேசவில்லை. நூற்றி ஐம்பது ரூபாயை சில்லறையாக கண்டக்டரிடம் கொடுத்து அவளுக்கான டிக்கெட்டை மட்டும் வாங்கிக் கொண்டாள்.
‘பையனுக்கு பஸ் பாஸ் இருக்கு’
கீழே குனிந்து பையைத் துழாவிய அவளை நிறுத்தி, ‘பரவாயில்ல…இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு ஒருவித குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தார் கண்டக்டர்.
பேருந்து மெல்ல ஊர்ந்தது.
பேச்சியம்மாள், கருப்பையாவை இழுத்துத் தோள் மீது போட்டுக் கொண்டாள்.
‘அம்மா…அம்மா…’
‘என்னப்பா?’
‘அம்மா…அம்மா…’
‘கருப்பு…கொஞ்சம் நேரம் தூங்குப்பா’
அவனுக்கென்று தயார் செய்த உணவுப் பொட்டலங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். இதையெல்லாம் கீழே சிந்தாமல் அவன் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம், இப்போதே அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்தது.
வயது இருபதைக் கடந்தும் ஐந்து வயதிற்குண்டான மூளை வளர்ச்சியே கருப்பையாவுக்கு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்தபோது கூட அவன் அழவில்லை. சாவு வீட்டில் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம், ‘அம்மா…அம்மா…’ மட்டும்தான்.
பேச்சியம்மாளுக்கும் கருப்பையாவை விட்டால் யாருமில்லை. மாதாமாதம் கருப்பையாவுக்கு வரும் உதவித்தொகையால் தான் நாட்கள் செல்கிறது.
நிலம், வெளிர்நீலமாக மாறிக்கொண்டிருந்தது. ஜன்னலோர மரங்கள் நிர்வாணமாய் காட்சியளித்தன. சில்லென்று முகத்தை மூடிய காற்றால் சற்றே உறங்கிப் போயிருந்தாள் பேச்சியம்மாள்.
*
‘கோயம்தூர் மட்டும் ஏறுங்க… கோயம்தூர்…கோயம்தூர்…’
சட்டென்று விழித்த பேச்சியம்மாளின் முகம் இருண்டுப் போயிருந்தது. கருப்பையாவை ஒருமுறை பார்த்தாள். அவன் பாதி தூக்கத்தில் இருந்தான். வாயின் ஒரு பக்கத்தில் வழிந்தோடிய உமிழ்நீர் காய்ந்திருந்தது. ஊர் பேர் அறிய வெளியே தெரியும் மளிகைக் கடை ஒன்றின் பெயர் பலகையைப் பார்த்தாள்.
‘கரூர்’
பேருந்தின் இருபுறமும் இப்போது மக்கள் ஏறத்தொடங்கினர். கருப்பையாவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
‘அம்மா…அம்மா…’
‘ஒன்னுமில்ல சாமி. சீக்கிரமா போயிடலாம். சரியா?’
பேச்சியம்மாள் சற்று பதற்றமானாள். கூட்டத்தில் கருப்பையாவை சமாளிப்பது சிரமம். திடீரென வெடித்து அலறினால் மொத்த பேருந்தும் இவனைத்தான் பார்க்கும். இரண்டு பேரையும் பாதியில் இறக்கிவிட்ட கதைகளெல்லாம் நிறைய நடந்திருக்கிறது.
ஒருமுறை இதே போன்ற ஒரு பேருந்து பயணத்தின் போது அருகிலிருந்த முதியவர் ஒருவரை அடித்துவிட்டான் கருப்பையா. ஆத்திரமடைந்த அவர், அவனுடைய நிலை கண்டு உடனே அமைதியாகி விட்டார்.
ஆனால் எல்லோரும் இப்படி இருப்பதில்லை.
‘பைத்தியத்தலாம் ஏன்யா பஸ்ல ஏத்றீங்க?’ என்று கோபம் கொள்வர். மற்றவர்கள் அப்படிச் சொல்லும்போது பேச்சியம்மாளின் இதயமே வெடிப்பது போன்று இருக்கும். தனியாக வாடகைக் கார் மூலம் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. அதற்காகும் செலவைக் கொண்டு ஆறு மாதங்கள் குடும்பத்தையே ஓட்டலாம்.
மூளைப்பிறழ்வு நோயாளிகளைக் கையாள்வதென்பது, இருபுறமும் கூர்மையுடைய கத்தியைக் கையில் வைத்திருப்பதைப் போன்றது. இருவரில் யார் உணர்ச்சிவசப்பட்டாலும் ஒருவருடைய கையை அது கிழித்துவிடும்!
பேருந்து, கரூரைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது. ஜன்னலைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்க்கும் சூரியனை ஒருவித நடுக்கத்துடன் வரவேற்றாள் பேச்சியம்மாள்.
கருப்பையா இன்னமும் அமைதியாகத் தான் இருக்கின்றான். இப்படியே கோயம்புத்தூர் வரை வந்துவிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு.
‘அம்மா…அம்மா…’
வயிற்றைப் பிசைந்தபடி சிணுங்கினான் கருப்பையா.
‘பசிக்குதா கண்ணு? வெள்ளக்கோயில்ல வண்டிய நிறுத்துவாங்க. உனக்கு பிஸ்கட் வாங்கித் தரேன்‌. சரியா?’
‘அம்மா…பிஸ்கட்…பிஸ்க்ட்ட்ட்ட்…’
‘சரி கண்ணு. வாங்கித் தரேன்’
‘அம்மாமாமாமாமாமாமா…’
முன்சீட்டில் அமர்ந்திருக்கும் சிலர் திரும்பிப் பார்த்தனர். அதில் ஒருவர், கருப்பையாவைப் பார்த்து முகம் சுளித்தார்.
‘கருப்பு…கொஞ்சம் அமைதியா வா சாமி’
பேச்சியம்மாள் கெஞ்சத் தொடங்கினாள்.
மீண்டும் ‘ஆஆஆஆஆ…’ வென அலற, பேச்சியம்மாளுக்கு பதற்றம் கூடியது. பயம் தொற்றிக் கொண்டது.
‘அப்பனே முருகா…ஊரு போய் சேர்ர வர இவன கொஞ்சம் அமைதியா வச்சுக்கப்பா…’
உணவுடன் சேர்த்து பேப்பரில் மடித்து வைத்திருந்த கைமுறுக்கு அவளுடைய நினைவுக்கு வந்தது. பையினுள் இருக்கும் அதை அவசர அவசரமாக வெளியே எடுத்தாள். பாதியாக உடைத்து கருப்பையாவின் வாயில் திணித்தாள்.
‘ஃப்பூ…’
முறுக்கு பறந்து சென்று முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் தலைமீது விழுந்தது.
‘சார்…சார்…மன்னிச்சிடுங்க சார். பையனுக்கு கொஞ்சம்…’
அவர் பேச்சியம்மாளை உற்று நோக்கினார். பாதி முறுக்கை கையில் வைத்துக் கொண்டு சோர்வுடன் அமர்ந்திருந்த அவளைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது.
‘மன்னிச்சிடுங்க சார்’
மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.
‘சரிமா. நோ ப்ராப்ளம்’
அவர், கருப்பையாவுக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவரின் சாயலில் இருந்தார்.
முதன்முதலில் திருச்சி அரசு மனநல மருத்துவமனையில் கருப்பையாவை  சோதனை செய்துவிட்டு, ‘இந்தப் பிரச்சினைய சரி பண்றது ரொம்ப கஷ்டம். கடைசி வர இவன குழந்தையா தான் பாத்துக்கனும்…’ என்றபோது பேச்சியம்மாள் பேச்சற்று நின்றாள். அப்போதாவது கஷ்டங்களை பங்குபோட்டுக் கொள்ள துணை ஒன்று இருந்தது. ஆனால் இன்றைய அவளுடைய நிலைமை வேறு.
‘உன் பையன கொண்டு போய் அநாத ஆஸ்ரமத்துல சேத்துடு. தனி ஆளா அவன வளக்கறது கஷ்டம்…’ என்று யார் யாரோ சொல்லியும் பேச்சியம்மாள் அதனை சட்டை செய்யவில்லை.
‘இது என் அப்பன் முருகன் கொடுத்த குழந்த…’ என்பாள்.
இயலாதவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம், அவர்களைப் பார்த்து பரிதாபம் கொள்வது. பேச்சியம்மாளைச் சுற்றியிருந்த எல்லோரும் அதைத்தான் செய்தனர். உதவி செய்ய‌ தான் யாரும் முன்வரவில்லை.
*
வெளியே எட்டிப் பார்க்க முயன்று, சூரிய ஒளி கண்ணில் குத்தியதால் விடுக்கென தலையை உள்ளே இழுத்துக் கொண்டான் கருப்பையா.
‘கருப்பு…தலைய வெளியே நீட்டிக் கூடாது சாமி’
‘அம்மா…அம்மா…’
மறுபடியும் பிஸ்கட் ஞாபகம் வந்து அவன்  கத்துவதற்குள், வெள்ளக்கோவிலை அடைந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
பேருந்து, வைரமடையை நெருங்கியபோது பெரிய ‘ஸ்பீட் ப்ரேக்கர்’ ஒன்றின் மீது ஏறி இறங்கியது. அதில் தூக்கி எறியப்பட்ட கருப்பையா, மூன்று இருக்கைகளைத் தாண்டி முன்னே சென்று விழுந்தான்.
‘கருப்பு…’
‘அம்மாமாமாமாமாமாமா…’
‘அய்யய்யோ…என்னாச்சு கண்ணு…அடி பட்டுடுச்சா?’
‘அம்மாமாமாமாமாமாமா…’
கருப்பையாவின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
‘அய்யயோ…எம்புள்ளைக்கு ரத்தம் வருதே’
‘அம்மாமாமாமாமாமாமா…’
‘வலிக்குதா கண்ணு?’
புடவையால் அவன் மூக்கை அழுத்திப் பிடித்தாள். அவன், கைகால்களை மேலும் கீழுமாக ஆட்டிக் கொண்டிருந்தான். எல்லோரும் நடப்பதை வேடிக்கை பார்த்தார்களேத் தவிர, அவனைத் தூக்கிவிட யாருமே முயற்சி செய்யவில்லை.
இதுபோன்ற நேரங்களில் பேச்சியம்மாள் தன்னுடைய சுயத்தை இழந்து விடுவாள். அவளையும் மீறி எழும் கோபம், சுற்றியிருக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
கருப்பையா விழுந்த இடத்தில் ஹெட்போனுடன் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவனிடம் ஆக்ரோஷமாக நெருங்கி, ‘டேய்…உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா டா?’ என்று கத்த, அவன் என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்தான்.
‘உங்க யாருக்குமே மனசாட்சி இல்லையா? எல்லாரும் வேடிக்க மட்டும் பாக்கறீங்களே…ச்சீ…’
பேருந்தில் இருந்த அனைவரும் கண்டக்டரைப் பார்க்க, அவர் பேச்சியம்மாளை நோக்கி வந்தார்.
‘ஏம்மா…என்னம்மா பண்ணிட்டு இருக்க?’
‘நீங்களே சொல்லுங்க சார். எம்புள்ள பல்டி அடிச்சி கீழ விழறான். எல்லாரும் வேடிக்க தான் பாக்குறாங்க. யாருமே உதவி பண்ணல. பாருங்க சார் எம்புள்ளைக்கு மூக்குல அடிபட்டு ரத்தம் வருது…’
பேச்சியம்மாளை சமாதானம் செய்து அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைத்த அவர், நேரே டிரைவரிடம் சென்று அவர் காதில் எதையோ முனுமுனுத்தார்.
‘அஞ்சு நிமிஷத்துல வெள்ளக்கோயில் வந்துடும். இறக்கி விட்டுடலாம்…’ என்றார் டிரைவர்.
‘அம்மா…அம்மா…’
‘ஒன்னுமில்ல சாமி.‌ சரி ஆயிடும். அம்மா இருக்கேன். சரியா?’
‘…’
‘எம்புள்ளைக்கு நீங்க என்னடா உதவி பண்றது? எம்புள்ளைக்கு நான் இருக்கேன்டா’
கருப்பையாவை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டாள் பேச்சியம்மாள்.
‘எம்புள்ளைக்கு நான் இருக்கேன்…எம்புள்ளைக்கு நான் இருக்கேன்…’
பேருந்து வெள்ளக்கோயிலில் நின்றது.
‘வண்டி பத்து நிமிசம் நிக்கும்.‌ சாப்பிடுறவங்க சாப்பிடலாம். பாத்ரூம் போறவங்க போலாம்…’
கருப்பையாவின் டவுசரை விலக்கி, உள்ளே மடித்து வைத்திருந்த துணியை சரி பார்த்துக் கொண்டாள் பேச்சியம்மாள். அது இன்னமும் ஈரமாகவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டாள்.
கண்டக்டர் ஒருமுறை பேச்சியம்மாளைப் பார்த்தார். அவர் மட்டுமல்ல, பேருந்தில் இருந்த பெரும்பாலோரின் பார்வை அவள் மீதே இருந்தது.
பயணிகளை ‘ராஜா பேக்கரி’ வரவேற்றது.
கருப்பையாவின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள் பேச்சியம்மாள். ரத்தம் கசிவது நின்றிருந்தது.
‘அம்மா…அம்மா…’
‘ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுங்க’
‘என்ன பிஸ்கட் வேணும்?’
‘ஏதோ ஒன்னு கொடுங்க’
‘அம்மா…பிஸ்கட், பிஸ்கட்…’
‘எவ்வளவு?’
‘இருபது ரூபா’
‘ஒன்னு, ரெண்டு, மூனு…’ என ஒவ்வொரு நாணயமாக எண்ணி மேசை மீது வைத்துக் கொண்டிருந்த பேச்சியம்மாளை மேலும் கீழும் பார்த்தார் கடைக்காரர்.
‘அண்ணி…’
பரிச்சயமான குரல். யாரென்று திரும்பி பார்த்தாள்.
அது, கிருஷ்ணன்.
கிருஷ்ணன், பேச்சியம்மாள் கணவரின் தூரத்து உறவு‌. அவனும் கோயம்புத்தூர் நோக்கி வேறொரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
‘கிருஷ்ணன் தானே. எப்படிப்பா இருக்க?’
‘நல்லா இருக்கேன் அண்ணி. நீங்க?’
‘இருக்கேன்ப்பா…’
‘எங்க போறீங்க அண்ணி?’
‘கோயமுத்தூர்ப்பா’
‘தனியாவா போறீங்க?’
‘இல்லப்பா. கருப்பையா இருக்கான்’
கிருஷ்ணனின் முகம் மாறியது.
‘கருப்பையாவா?’
‘ஆமாப்பா’
‘எங்க இருக்கான்?’
‘இதோ இங்க நிக்கறானே’
பேச்சியம்மாள் கை காட்டிய இடத்தில் யாருமே இல்லை. கிருஷ்ணன், ஒருவித மிரட்சியுடன் பேச்சியம்மாளைப் பார்த்தான்.
அப்போது, ‘தம்பி…’ என்ற குரல் கேட்டது.
‘சொல்லுங்க சார்’
மிரட்சி விலகாமல் அவர் பக்கம் திரும்பினான் கிருஷ்ணன்.
‘நீங்க இந்த அம்மாவுக்கு வேண்டியவரா?’
‘ஆமா சார். சொல்லுங்க’
‘தம்பி…பஸ் ஏறினதுல இருந்து இந்தம்மா தனியா பேசிட்டு வராங்கப்பா. மனநலம் சரியில்ல போல’
கிருஷ்ணனுக்கு இப்போது தான் எல்லாம் புரிய ஆரம்பித்தது.
‘பஸ்ல எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்துட்டே வராங்க. என் தலைல கூட சாப்பாடு பொருள தூக்கி போட்டுட்டாங்க’
‘…’
‘பக்கத்துல யாருமே இல்ல தம்பி. ஆனா யாரோ இருக்கற மாதிரியே கருப்பு கருப்புனு பேசிட்டு வராங்கப்பா’
கிருஷ்ணன், பேச்சியம்மாளின் இந்நிலையை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.
‘கருப்பு அவங்க பையன் தான் சார். மூளை வளர்ச்சி இல்லாதவன். விவரம் தெரியாது. ஆறு மாசத்துக்கு முன்ன அவனே வெளிய நடந்து போய், சாக்கடை தொட்டிக்குள்ள விழுந்து செத்துட்டான்’
‘ஓ…அதுக்கு அப்பறம் இவங்கள நீங்க பாக்கலையா?’
‘இல்ல சார். இவங்களுக்கு ஒரு தம்பி கோயமுத்தூர்ல இருக்காரு. அவரு தான் இவங்கள பாத்துக்கராருனு நெனைச்சேன். ஆனா இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பாங்கனு தெரியாது சார்’
‘சரிங்க தம்பி. எப்படியும் இவங்கள திரும்ப பஸ்ல ஏத்தமாட்டாங்க. நீங்க அவங்கள கூப்பிட்டு போய் வீட்டுல விட்டுடுப்பா. இல்லனா ஹாஸ்பிடல்ல சேத்துடு. பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு’
‘சரிங்க சார்’
கிருஷ்ணன், பேச்சியம்மாளைப் பரிவுடன் பார்த்தான்.
‘அண்ணி…கருப்பையா இங்க இல்ல. அவன் செத்துப்போய் ரொம்ப நாள் ஆச்சு. உங்களுக்கு ஞாபகம் இல்லையா?’
‘இல்ல…எம்புள்ள சாகல…இதோ இருக்கான் பாரு…’
பேச்சியம்மாளின் முகம் சிவந்தது. உடலை குலுக்கி குலுக்கி, ‘எம்புள்ள சாகல…எம்புள்ள சாகல…’ என்று அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
கண்டக்டர், ‘எல்லாரும் வந்தாச்சா? போலாம் ரைட்…’ என்றதும், பேருந்து புகையைக் கிளப்பியபடி கோயம்புத்தூர் நோக்கிப் பாய்ந்தது.
‘போறானுங்க பாரு கருணையே இல்லாத பைத்தியக்காரனுங்க. எம்புள்ளைய எப்படி கூப்பிட்டு போகனும்னு எனக்கு தெரியும். ஊருல உங்க பஸ் ஒன்னுதான் ஓடுதா?’
பேருந்து, பேச்சியம்மாளின் பார்வையை விட்டு மறைந்த போதும் அத்திசையைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணன், அழைப்பே வராத அவனுடைய மொபைல் ஃபோனை சட்டைப்பையில் இருந்து எடுத்தான். ‘சொல்லுங்க மேடம்…’ என்று ஏதோ முக்கியமான அழைப்பு வந்திருப்பதைப் போல பாசாங்கு காட்டினான். பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் நோட்டமிட்ட அவன், மெல்ல அவ்விடத்தைவிட்டு நழுவத் தொடங்கினான்.
இறக்கிவிட்ட அதே இடத்தில் இன்னமும் ‘கருப்பு கருப்பு’ என்று தனியாக பேசிக்கொண்டிருந்தாள்
பேச்சியம்மாள்.

(10.09.2025)

One Comment on “எஸ். சரத்குமார் /காட்சிப் பிழை”

  1. மனவளர்ச்சி இல்லாத குழந்தை கடைசியில் தான் குழந்தை இல்லை என்ற விவரம் படிக்கும் போதே கண்ணில் நீர் வருகிறது என்றால் மிகையல்ல

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன