வசந்தா கோவிந்தராஜன்/நாடக மேடை

“சங்கரன் சார், இன்னிக்கு பெரிய மனுஷங்க யாரோ நம்ம இல்லத்துக்கு வரப் போறாங்க போல இருக்கு. காலையிலேருந்து சுத்தம் பண்ற வேலை நடந்துக்கிட்டு இருக்கு.நம்ம எல்லாரையும் குளிச்சுட்டு சுத்தமா இருக்கச் சொல்லியிருக்காங்களே! நீங்க என்ன சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கீங்க!” என்றார் கோவிந்தன்.
அவரை ஏற இறங்க ஒரு முறை பார்வை பார்த்த சங்கரன் “எனக்கு இந்த நாடகம் சுத்தமாப் பிடிக்கலை. அவங்கவங்க பிறந்த நாளோ, திருமண நாளோ கொண்டாடறதுக்கு இங்க வரதும், இவங்க அன்னிக்கு மட்டும் நம்மை நல்லா கவனிச்சுக்கற மாதிரி ஷோ பண்றதும் அவங்க நமக்குப் பிச்சை போடற மாதிரி ஏதாவது கொடுத்து ஃபோட்டோ எடுக்கறதும் என் மனசுக்கு ஒப்பவேயில்லை. நம்மில் நிறையப் பேர் நம்ம புள்ளைங்க அவமானப் படுத்தறது தாங்காமத் தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கோம். இங்கயும் போறவங்க வரவங்க எல்லாம் நம்மை அவமானப் படுத்தறாங்க. வாழ்க்கையே கசப்பாய் இருக்கு கோவிந்தன் சார் “என்றார்.
“உலகமே ஒரு நாடக மேடை”ன்னு கேள்விப் பட்டிருக்கீங்க தானே! இப்போது நமக்குக் கொடுத்திருக்கும் பாத்திரம் ‘அனாதைக் கிழவன்’. இவங்க நல்லா வைச்சுக்கற மாதிரி நாம நடிச்சா இவங்களுக்கு ஒரு நல்ல தொகை டொனேஷன் வரும். எப்படியும் அதில் கொஞ்சமாவது நமக்குச் செலவழிக்க மாட்டாங்களா என்ற நப்பாசை தான். என்ன செய்ய, நேரம் ஆகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.
வேறு வழி இல்லாமல் சங்கரனும் தன்னிடம் இருப்பதில் பளிச்சென்று இருக்கும் வேட்டி, சட்டையுடன் தயாரானார்.
ஒரு பெரிய காரும், வேனும் வந்து நின்றது. ஆசிரம நிர்வாகிகள் பற்பசை விளம்பரம்போல் காதளவு சிரித்து வரவேற்றார்கள். காரிலிருந்து இறங்குபவர்களைச் சன்னல் வழியே பார்த்த சங்கரன் அதிர்ந்து போனார். மெதுவாகத் தோட்டத்துப் பக்கம் நழுவினார்.
முதலில் வந்தவர்கள் அறிமுகப் படலம் புகழாரத்துடன் நிறைவேறியது. பின்னர் அவர்கள் பிரபல உணவகத்திலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். முதலில் இரண்டு பேருக்கு மட்டும் ஐந்து வயதுச் சிறுவன் தன் கையால் கொடுத்தான். அப்புறம் அவன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் கொடுத்தார்கள். எல்லாமே வீடியோவில் பதிவாக்கிக் கொண்டார்கள்.
அவர்கள் சாப்பிட உட்காரும் முன் கடகடவென எல்லார் கையிலும் தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடை பை ஒன்றை வரிசையாக நிற்க வைத்துக் கொடுத்துப் புகைப்படங்கள் எடுத்தார்கள்.
கோவிந்தன் சங்கரன் சாரை எதிர்பார்த்து அவரைக் காணாமல் பரிதவித்தார். நல்ல சாப்பாடையும், நல்ல டிரஸ்ஸையும் மிஸ் பண்றாரே! இந்த நாடகம் பிடிக்கவில்லை என்றாரே! அவர் வாங்கவில்லையென்றால் இன்னிக்குச் சாப்பாடு கூட அவருக்கு இருக்காதே! அவருக்கென்று கேட்டு வாங்கலாமா என்று யோசித்தார்.
மேனேஜரிடம் சொல்லி விட வேண்டியது தானெனத் தீர்மானித்து அவரிடம் போய் மெதுவாக “சங்கரன் சாருக்குக் கொஞ்சம் உடம்பு முடியலை. அதுனால அவர் வரலை. அவருக்கும் ஒரு சாப்பாடும், டிரஸ்ஸும் வாங்கினால் நல்லது..” என்று இழுத்தாற்போல் சொன்னார். இந்த மேனேஜர் எப்போது சிரிப்பார், எப்போது வெடிப்பார் என்பது ஒரு புரியாத புதிர்.
அவர் இன்று நல்ல மூடில் இருந்தார் போல. அவர்களிடம் “இவர் அறை நண்பருக்கு உடம்பு சரியில்லையாம். அவருக்கும் ஒண்ணு கொடுத்துடுங்க” என்றார். அதை வாங்கிய பின் தான் கோவிந்தனுக்கு நிம்மதியாக இருந்தது.
வந்தவர்கள் மேனேஜரிடம் காசோலை கொடுத்து விட்டு உடனே கிளம்பி விட்டார்கள். நாடகம் முடிந்து திரை போட்ட மாதிரியிருந்தது. சாப்பாட்டுப் பை, புதுத் துணிப்பை சகிதம் சங்கரனைத் தேடினார். அவர் தோட்டத்தில் சுவர் பார்த்து உட்கார்ந்திருந்தார்.
“என்ன சங்கரன் சார், நல்ல தரமான வேட்டி, சட்டை, ஆனந்தபவன் சாப்பாடு எல்லாத்தையும் மிஸ் பண்ணி இருப்பீங்க. நான் கேட்டு வாங்கிட்டேன், வாங்க சாப்பிடலாம்” என்றார்.
திரும்பிய சங்கரன் முகம் பார்த்து அதிர்ந்து போனார். கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீருடன் இதுவரை பார்த்தேயிராத சங்கரன்.
“என்ன ஆச்சு சங்கரன் சார், உடம்பு சரியில்லையா?” என்று கைகளைப் பிடித்துக் கொண்டார்.
சங்கரன் சார் அவர் நெஞ்சில் முகம் புதைத்துக் கோவெனக் கதறி விட்டார். “வந்தது வேற யாருமில்லை. என் புள்ளையும், பேரனும் தான். அவனுக்கு நல்ல வேலை கிடைச்சு இரண்டு மாசத்துலயே ஒரு பெரிய இடத்துப் பெண்ணை விரும்பறேன்னு சொன்னான். அவன் ஆசைப்பட்டான் என்ற ஒரே காரணத்துக்காக நாங்களும் சம்மதித்தோம். நாங்க சம்மதிக்கலைனனாலும் கல்யாணம் பண்ணிண்டிருப்பான். தேனிலவு முடிஞ்ச கையோட அவன் வீட்டோட மாப்பிள்ளையா அவங்க கூடப் போயிட்டான். தனியார் நிறுவனத்தில் எடுபிடி வேலை செய்த என்னை அப்பான்னு சொல்லிக்க வெட்கப்பட்டான். எங்களையும் அந்த வீட்டு அவுட் ஹவுஸில் வந்து இருக்கச் சொன்னான். எங்கள் மனம் ஒப்பவில்லை. மறுத்து விட்டோம்.
கொஞ்ச நாள் எங்களை வந்து பார்த்துக்கொண்டிருந்தான். அப்புறம் வருவது குறைந்து நின்னே போச்சு. எப்படியோ உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைத்தேன். சக்திக்கு மீறி அவனைப் படிக்க வைச்சதால் கையில் சேமிப்பும் இல்லை. மனைவி இறந்ததைக் கூட அவனுக்குச் சொல்லலை. உழைக்க உடம்பில் தெம்பு இல்லாமல் போனதால் இங்கே வந்து சேர்ந்து விட்டேன். தெரியாதவங்க எத்தனையோ பேர் கொடுத்தபோது வாங்கியிருக்கேன். இப்ப என் மகனே அவன் புகுந்த வீட்டாருடன் வந்து கொடுக்கும்போது நான் தவித்துப் போயிட்டேன். நான் இங்க இருக்கறது தெரிஞ்சா அவன் அவமானப் படுவான். அப்புறம் இங்க என்னை இருக்க விடுவாங்களோ என்னவோ. தெரியாதவர்களிடம் பிச்சை வாங்கலாம். சொந்த மகனிடமே வாங்கலாமா?” என்று கண் கலங்கினார். உடனே சமாளித்துக் கொண்டு “ஆமாம், என் பேரன் எப்படி இருக்கான்?” என்று ஆர்வமாய்க் கேட்டார்.
கோவிந்தனுக்கு ‘இப்படியும் மனிதர்களா? பெற்றவர்கள் எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு அக்கறையில்லை. ஆனால் தங்கள் சுய விளம்பரத்துக்காக முதியோர் இல்லத்துக்கு வந்து ஆதாயம் தேடறாங்க. எனக்காவது வாரிசு இல்லை, குடும்பம் இல்லை. இவருக்கு இப்படியொரு குடும்பம், இதைவிட என் நிலையே பரவாயில்லை. அந்தப் பைகளை அப்படியே குப்பையில் வீச வேண்டும் போல் ஆத்திரம் எழுந்தது. வாட்ச்மேனுக்காவது கொடுக்கலாம் என்று பத்திரப்படுத்திக் கொண்டார். “இன்று நானும் உங்களுடன் சேர்ந்து உபவாசம் இருக்கேன்” என்று நண்பரின் முதுகை ஆதரவாகத் தடவினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன