
பிரம்மாண்டமான ‘U’ வடிவத்தில் இருந்த அந்தப் பிரபல தனியார் மருத்துவமனையை தள்ளியிருந்து பார்க்கும் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் தோற்றமளித்தது. அருகில் போய் அந்த வளைவான பெயர்ப் பலகையைப் பார்க்கும் போது தான் அது மருத்துவமனை என்பதே தெரிந்தது. வசதியானவர்களும், ஹெல்த் கார்டு வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் என அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். புதுப்புது வியாதிகள், புதுப்புது மருத்துவ மனைகள் இரண்டும் இந்திய வரைபடத்தில் சீராக வளர்ந்து கொண்டே தானிருக்கிறது. இங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் அனைத்து படுக்கைகளும் எப்போதும் நிரம்பியே இருக்கும். எதிரேயுள்ள பிளாஸ்டிக் சேர்களில் கவலை அப்பிய முகங்களுடன் அமர்ந்திருந்தவர்கள் தலைசரிந்து தூங்க ஆரம்பித்திருந்தனர்.
நள்ளிரவு பனிரெண்டரை ஆகியும் ஜோசப் என்ற செந்தில் மட்டும் சுவர் ஓரத்து நாற்காலியில் கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருந்தான். மாநிறம், கலைந்த தலைமுடி, கலங்கிய கண்கள். பல யுகங்களாய்த் தான் அங்கேயே கல்லாய் உறைந்திருப்பது போல் உணர்ந்தான். அப்பா நேற்றிரவு ஏன் அப்படிச் சொன்னார்? அது தான் அவரது கடைசி வார்த்தைகளா? அதன்பின் கண் விழிக்கவேயில்லையே! அவரை மயங்கிய நிலையில் இங்கே வந்து சேர்த்து இன்றோடு ஏழு நாட்களாகிறது. இரத்த அழுத்தம் அதிகமானதால் மூளையில் உள்ள இரத்தக்குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். உடனேயே தகுந்த சிகிச்சையை ஆரம்பித்து விட்டதால் குணமாகி விடும் என்று முதலில் நம்பிக்கை அளித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமும் இருந்தது. பகலெல்லாம் அம்மாவும், தங்கையும் இருப்பார்கள். இரவு எப்போதும் இவன் தானிருப்பான். சில நாட்கள் பகலிலும் இங்கேயே தவம் கிடப்பான்.
நேற்றிரவு அவருக்கு மெதுவாகக் கஞ்சி ஊட்டி விட்டான். அவரும் அரை டம்ளர் திருப்தியாகச் சாப்பிட்டார். அப்புறம் தான் “நெஞ்சு வலிக்கறதுடா செந்தில். நான் இல்லைன்னாலும் உங்கம்மாவையும் தம்பி தங்கச்சியையும் நீ தாண்டா பாத்துக்கணும். அவங்க உன்கிட்ட முன்னப்பின்ன நடந்தாலும் இந்த அப்பாவுக்காகப் பொறுத்துக்கோப்பா” என்று சொல்லும் போதே பேச்சு குழற ஆரம்பித்து விட்டது. “உங்களுக்கு ஒண்ணும் இல்லைப்பா, நாளைக்கே நீங்க ஜம்முனு எழுந்து நடந்து வீட்டுக்கு வரப் போறீங்க. நிறைய மருந்து குடுத்துட்டே இருக்கறதால உங்களுக்கு இந்த மாதிரித் தோணும். நிம்மதியா இப்ப தூங்குங்கப்பா. என்னோட அம்மாவையும், தம்பி தங்கச்சியையும் நான் பார்க்காம யாரு பார்த்துப்பாங்க? சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதீங்கப்பா “ என்று அவர் நெஞ்சை நீவி விட்டான். அப்பா ஏனோ கையெடுத்துக் கும்பிட்டார். அதன் பின் எதுவும் பேசவுமில்லை. கண் விழித்துப் பார்க்கவுமில்லை.
திரும்பவும் டெஸ்ட் எடுத்தார்கள். இப்போது டாக்டர்கள் முகத்திலேயே நம்பிக்கை இல்லாதது போல் தோன்றியது. நாளை காலை பத்து மணிக்குத் தலைமை மருத்துவர் வருவாராம். அவர் வந்து பார்க்கும் வரை எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்பா ஏன் அப்படிச் சொன்னார்? என்னைப் பார்த்த முதல் நாளே என்னைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு விட்டதாகச் சொல்வார். “ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல உன்னைப் பார்த்தவுடனேயே உன் மேல் இனம்புரியாத பாசம் வந்துடுச்சுடா” என்று சொல்வார். ஆனால் அம்மாவுக்கு மட்டும் என்னிடம் அதிக ஒட்டுதல் ஏற்பட்டதேயில்லை. பட்டும் படாமலும் தானிருப்பாள். நான் வேற்று மதத்தவன் என்பதாலா? அல்லது அம்மாவின் சம்மதம் கேட்காமலேயே அப்பா என்னை அழைத்து வந்து விட்டதாலா? அல்லது அப்பாவின் சம்பளத்தில் அவர்களது இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதே சிரமமாக இருக்கும்போது மூத்தவனாய் நான் வந்து குடும்பத்தில் ஒட்டிக் கொண்டதில் வருத்தமா?
அப்பா சொல்லக் கேட்டு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி என் மனதில் பதிந்து போயிருந்தது. என்னைப் பொறுத்தவரை கடற்கரை மணலில் கூட்டத்தோடு நான் ஓடி வந்தது மட்டுமே புகை மூட்டம் போல நினைவில் தங்கியுள்ளது. என்னைப் பெற்றவர்களின் முகங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் நினைவில் சிக்க மாட்டேன் என்கிறது. அம்மாவின் பானை வயறும், கடைசியாக அவள் கட்டியிருந்த சிவப்புச் சேலையும் மட்டுமே நினைவுக்கு வருகிறது. அப்பா என்னை முதன்முதலாகப் பார்த்த நாளை ஒரு கதை போலச் சொல்வார். நான் திரும்பத் திரும்ப அந்தக் கதையை சொல்லச் சொல்வேன். அதைக் கேட்டுக் கேட்டுஅதை நினைத்தவுடனே என் கண் முன்னே காட்சிகள் விரிய ஆரம்பிக்கும்.
என் அப்பா (இப்போது நினைவிழந்து உடம்பெல்லாம் குழாய்கள் பொருத்தி எமனோடு போராடிக் கொண்டிருக்கிறாரே அந்த சுவாமிநாதன் ) அலுவலக நிமித்தமாக கன்னியாகுமரி சென்றிருக்கிறார். உடன் வந்தவர்கள் எல்லாம் முந்தைய இரவு அடித்த சரக்கின் உபயத்தால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களாம். இவருக்கு அது பழக்கமில்லாததால் அதிகாலையில் விழிப்பு வந்து தங்கியிருந்த விடுதியிலிருந்து காலாற நடக்கலாமே என்று கிளம்பியிருக்கிறார். கொஞ்ச தூரம் நடந்த பின் எதிர்ப்புறமிருந்து திபுதிபுவென்று பெருங்கூட்டம். யாரைப் பார்த்தாலும் கூச்சலும், அழுகையும், பதற்றமும். கடல் கொந்தளித்து பெருஞ்சீற்றத்துடன் பனைமரம் அளவுக்குப் பொங்கி ஊருக்குள் வருகிறதாம். போரில் பெரும் படை துரத்தி வரும் போது புறமுதுகிட்டு வருவது போல ஒருவரை ஒருவர் முந்த முயன்று, தள்ளி, தடுக்கி விழுந்து ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு ஓடி வந்த ஐந்து வயதுக் குழந்தை கீழே விழுந்ததைக் கூடப் பார்க்காமல் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பதைபதைத்த அப்பா அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓரமாய்க் கூட்டத்தின் பின்னால் நடக்கிறார். பயமும், நடுக்கமும் அழுகையும் சூழக் குழந்தை அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது. கடலை விட்டு வெகுதூரம் வந்தபின் தான் கூட்டம் நிதானமாகியிருக்கு. அப்புறம் தான் தன் குடும்பத்தில் யாரைக் காணோம் என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பா தங்கியிருந்த விடுதி கடற்கரையிலிருந்து தள்ளியிருந்ததால் தப்பித்தது. இவர் விடுதிக்கு அந்தக் குழந்தையுடன் போய்ச் சேரும் போது நிறையப் பேர் அங்கேயும் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இவர் நண்பர்கள் இந்த கலாட்டாவில் கண் விழித்து இவரிடம் குழந்தை யாரெனக் கேட்டிருக்கிறார்கள்.
அப்பா “எனக்கும் தெரியாது. கூட்டத்தில் தனியாக அழுதுகொண்டு வந்தது. கூட்டத்தில் யாரும் இவனைக் கண்டு கொள்ளவில்லை. நான் தூக்கியதும் என்னிடம் ஒட்டிக் கொண்டது. எனக்கும் என்ன பண்ணவென்று தெரியலை. தூக்கிட்டு வந்துட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். மிரண்டு போயிருந்த குழந்தைக்குத் தன்னிடமிருந்த பிஸ்கட்டுகளும் தண்ணீரும் கொடுத்திருக்கிறார். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு ஆறு பிஸ்கட்டுகளையும் கடகடவென சாப்பிட்டது. பாவம் நல்ல பசியுடன் ஓடிக் களைத்துப் போயிருக்கிறது. அப்புறம் தான் அப்பா “உன் பெயர் என்ன?” என்று கேட்டதற்கு “ஜோசப்” என்றது. மெதுவாக அவன் அம்மா, அப்பா பற்றி விசாரித்த போது “அப்பா நீ ஓடு, அம்மாவும் நானும் பொறத்தால ஓடி வாரோம்னு சொல்லிச்சு. நான் ஓடியாந்துட்டேன். அவுகளைத் தான் இன்னும் காணம்” என்றான் மழலை மாறாத குரலில்.
ஊரே சுடுகாடு போல் அழுகையும், பிணக் குவியல்களுமாய் ஆகிப் போனது. இதைப் பார்க்கப் பார்க்க அவன் பயத்தில் அவரிடம் பசையாய் ஒட்டிக் கொண்டான். காவல்துறை, தீயணைப்புத் துறை, அரசாங்க ஊழியர்கள், என்.ஜி.ஓ.க்கள் எல்லாம் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தற்காலிகமாகப் பள்ளிகளிலும், திருமண மண்டபங்களிலும் வீடிழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். இரண்டு நாட்கள் குழந்தையுடன் அப்பா அலையாய் அலைந்ததில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோசப்பின் அம்மா ஜான்சியும், அப்பா ஜேம்ஸும் சுனாமியில் பலியானது தெரிய வந்தது. பாவம் நிறைமாச கர்ப்பிணி ஓட முடியாமல் தவித்ததும், மனைவியை விட்டுவிட்டு வர மனமில்லாமல் அவளைச் சுமந்து வர முயற்சி செய்து கடலலை அவர்கள் இரண்டு பேரையுமே இழுத்துச் சென்றதையும் பார்த்தவர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு நெருங்கிய உறவுகள் யாரும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை.
இது எதையும் உணராமல் அவரையே வளர்ப்பு நாய்க்குட்டி போலச் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு வர அவருக்கு மனசேயில்லை. அவரறியாமல் அந்தக் குழந்தை மேல் ஒரு பாசம் தொற்றிக் கொண்டது. பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு அவர்களிடம் தன் முகவரியையும் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டார். இவ்வளவு மட்டுமே சொல்வார். அவர் என்னை வீட்டுக்குத் தூக்கி வந்த பின் அம்மாவின் reaction என்னவாக இருந்தது என்று சொன்னதில்லை. அம்மாவின் செய்கைகளிலிருந்து அம்மா வேண்டா வெறுப்பாக என்னை ஏற்றுக் கொண்டிருப்பாள் என்று தான் தோன்றியது. ஆனாலும் அம்மா எப்போதும் என் வயிற்றுக்கு வஞ்சனை செய்ததில்லை. அம்மா மணக்க மணக்கச் செய்யும் சமையல் என் நாவில் தங்கி விட்டது. இதையே சாப்பிட்டு வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு அசைவ உணவின் மேல் விருப்பம் எழுந்ததேயில்லை.
எனக்கு விபரம் தெரிந்த பின் அப்பா என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு “உன் மனசுக்கு எப்படித் தோணறதோ அந்தக் கடவுளைக் கும்பிட்டுக்கோ. இவ்வளவு நாள் விபரம் தெரியாமல் என்னோட கோவிலுக்கு வந்த, விபூதி பூசிக்கிட்ட. நான் உன்னை வளக்கறதால என்னோட மதத்துல தான் நீயும் இருக்கணும்னு சொல்ல மாட்டேன். நீ என்ன முடிவெடுத்தாலும் அப்பாவின் பாசம் மாறாது” என்றார். என்னைப் பெற்றவர் கூட என்னிடம் இவ்வளவு பாசமாக இருந்திருப்பாரா என்று தெரியாது. வருஷம்தோறும் சுனாமி தினத்தன்று கூட்டத்தோடு போய் அவர்களை நினைத்து மலர்கள் வைப்பதோடு அவர்களுக்கும் எனக்குமான உறவு நின்று போய்விடுகிறது.
ஒரு வேளை, இந்த அப்பாவின் அன்பு எனக்குக் கிடைக்காமல் போயிருந்தால் அவர்களை நினைத்து உருகியிருப்பேனோ என்னவோ! இப்போதும் அந்த நாளில் சிவப்புச் சேலை கட்டிய பானை வயிறு அம்மாவும், முகம் மறந்து போன அப்பாவும், அம்மாவின் வயிற்றிலிருந்த சிசுவும் மரணித்த சோகம் வந்து அப்பிக் கொள்ளும். அன்று இந்த அம்மாவின் பார்வையில் ஒரு கனிவு இருக்கும். அவளே அவன் தட்டில் சூடாக சோறு போட்டு அவனுக்குப் பிடித்த காரக்குழம்பும் கீரை மசியலும் போட்டு அவன் சாப்பிடும் வரை பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். இப்படியே தினமும் இவன் பக்கத்தில் உட்கார்ந்து பரிமாற மாட்டாளா என்ற ஏக்கம் வரும். மற்ற நாட்களெல்லாம் மேசையில் வைத்து விட்டு நகர்ந்து விடுவாள். அப்பா இவன் கூடவே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு சாப்பிடுவார்.
தம்பிக்கும், தங்கைக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா வருடத்தில் அந்த ஒரு நாள் தவிர மற்ற நாட்களில் அவனுக்கோ, அப்பாவுக்கோ பரிமாறினதேயில்லை. இவனது வரவால் அம்மாவுக்கும், அப்பாவுக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத விரிசல் விழுந்து விட்டது புரிந்தது. அப்பா அதுபற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒரு வேளை நான் இல்லாத நேரங்களில் ஏதாவது விவாதித்துக் கொள்வார்களோ என்னவோ! தம்பி பரத்தும், தங்கை லாவண்யாவும் அவர்களுக்குள் அடித்துக் கொள்வது போல் இவனிடம் இலகுவாகப் பழகவில்லை என்ற மனத்தாங்கல் இவனுக்கு உண்டு தான். தங்கை குட்டியாக இருக்கும்போது இவன் தான் தோளில் சுமப்பான். தம்பியுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடியிருக்கான். அவர்கள் வளர வளர, அம்மா சொல்லியோ, அவர்கள் பாட்டி சொல்லியோ இவனிடமிருந்து ஒதுங்கி விட்டார்கள். அந்த வீட்டில் ஆளும் கட்சியாக அம்மாவும், தம்பி தங்கையும் இருப்பார்கள். டெப்பாசிட் இழந்த அரசியல்வாதிகள் போல இவனும் அப்பாவும் நடத்தப் படுவார்கள். அதனால் இவனுக்கும் அப்பாவுக்குமான நெருக்கம் அதிகரித்தது. அதன் பின் அவர்கள் இவனைக் கூடுதலாக உதாசீனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்பா இல்லாமல் அந்த வீட்டில் எப்படி இருக்கப் போகிறான்னு தெரியலை. இன்னும் ஒரு வருஷத்தில் படிப்பு முடிந்து விடும். கேம்பஸ் இன்டர்வியூவில் இவன் மதிப்பெண்ணுக்குக் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று அப்பா சொல்லுவார்.
டாக்டர் வந்து சொல்வதற்குள் நான் ஏன் நெகட்டிவ்வாக யோசிக்கிறேன் என்று தன்னைக் கடிந்து கொண்டான். ஆனால் அவன் பயந்த மாதிரியே மறுநாள் அவன் அப்பா கண் திறக்காமலேயே கண்ணை மூடி விட்டார்.
அப்பாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். நிம்மதியாக உறங்குவது போல் படுத்திருந்தார். தலைமாட்டில் அம்மா விரிந்த கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவர் வருகையின் போதும் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தாள். அம்மாவின் உறவினர்கள் இவனைப் பார்த்து குசுகுசுவெனத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அப்பாவின் உடன்பிறப்புகள் ‘அவனே போயிட்டான், அவனுக்கே இந்த வீட்டுல மதிப்பு கிடையாது, நமக்கெதுக்கு வம்பு?’ என்பது போல் ஒரு ஒதுக்கத்துடன் இருந்தார்கள்.
அம்மாவின் தம்பி பரத்திடம் “நீ தான் அவர் வாரிசு, அதுனால ஆக வேண்டிய காரியத்தைப் பாக்கணும், போய்க் குளிச்சுட்டு வா”என்றார். பரத் என்னைப் பார்த்த பார்வையில் உடம்பெல்லாம் கூசியது. ‘அப்பா, நீங்க மட்டும் தான் என்னை உங்க மகனாக ஏத்துக்கிட்டீங்க! இப்ப நீங்களே இல்லை, இனிமேல் நான் அனாதையா? நான் அனாதையாகி இருபது வருஷம் ஆகப் போறது, ஆனாலும் இதுவரை அப்படியொரு எண்ணமே எனக்கு வந்ததில்லையே அப்பா! எனக்குன்னு யாருமே இல்லையேப்பா’ வெடித்துக் கொண்டு அழுகை வந்தது. “அப்பா!” என்ற கதறல் அந்தத் தெரு முனைச் சுவரில் மோதி எதிரொலித்தது.
தலை குனிந்து அழுது கொண்டிருந்த அம்மா நிமிர்ந்தாள். “செந்தில், நீ தானடா உங்கப்பாவுக்கு மூத்த பிள்ளை, நீ தானேடா அவருக்குக் கொள்ளி போடணும்? இப்படி அழுதுக்கிட்டு உட்கார்ந்திருந்தா ஆயிடுச்சா? உங்கப்பாவைக் கரை சேர்க்க வேண்டாமா? அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டாமா? எழுந்து ஆக வேண்டிய வேலையைப் பாருடா”என்றாள் அழுத்தமாக.
வந்திருந்தவர்கள் எல்லாம் திகைத்து நின்றார்கள். பரத் அம்மா பக்கத்தில் வந்து “உனக்கு மூளை கலங்கிப் போயிடுச்சா? அவனை மூத்த பிள்ளைன்னு சொல்றியே, அவன் என்ன நீ பெத்த பிள்ளையா? தெருவுல அனாதையா நின்னுக்கிட்டிருந்தவனை அப்பா கூட்டிட்டு வந்துட்டார்னு நீ தான எங்க கிட்ட கதை கதையாச் சொல்லியிருக்க, இப்ப அவன் தான் மூத்த பிள்ளை, அவன் தான் கொள்ளி போடணும்னு நீயே சொல்ற!” என்று கோபமாய்க் கத்தினான்.
“ஆமாண்டா, அவனை உங்கப்பா கூட்டிட்டு வந்தார்னு கோபப்பட்டிருக்கேன் தான், அவனை நீங்க உதாசீனம் பண்ண நானும் ஒரு காரணம் தான். ஆனால் என்னிக்கு உங்கப்பா படுக்கையில் விழுந்தாரோ அன்னிலேருந்து அவன் சாப்பிடலை, தூங்கலை, அப்பாவை விட்டு நகராம இருந்தான். முகம் சுளிக்காமல் அவரோட மலம், மூத்திரம் சுத்தம் பண்ணினான். என்னைக் கூடச் செய்ய விடலை. அவர் கிட்டயே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருந்தான். உங்கப்பா இருக்கும்வரை அவரோட அருமை எனக்குப் புரியலை. உங்களுக்கும் புரியலை. இவன் அவரை தெய்வமாகத் தான் மதிச்சான். அதுனால அவருக்குக் காரியம் பண்ற தகுதி அவனுக்குத் தான் இருக்கு. இதுல வேற யாரும் தலையிடாதீங்க” என்றாள் உறுதியாக.
அதுவரை பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்த செந்தில் என்னும் ஜோசப் அம்மாவின் மடியில் முதல் முறையாக முகம் புதைத்தான். “அம்மா!” என்று கதறினான். அம்மா அவன் தலை கோதி “என் மகனே!” என்று அரற்றினாள்.

One Comment on “வசந்தா கோவிந்தராஜன்/சுனாமிப் புதல்வன்”