வசந்தா கோவிந்தராஜன்/தாய்மாமன்

திருச்சி
“மாப்பிள்ளையின் அம்மாவும் அப்பாவும் இந்த மாலையைப் போட்டுண்டு மணைப் பலகையில் உட்காருங்கோ” என்று வாத்யார் ராமநாதய்யர் சத்தமாகச் சொன்னார்.
மாப்பிள்ளையின் அப்பா ‘சுப்பையா ஆச்சாரி’ என்று எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படுபவர். திருச்சியில் ஓரளவு பிரபலமான நகைக்கடைக்குச் சொந்தமானவர்.நாணயமானவர், கைராசிக்காரர் என்று பெயர் எடுத்ததால் காலங்காலமாக இவர் கடையில் நகை வாங்குபவர்கள் உண்டு. இப்போதெல்லாம் விளம்பரங்களையும், அதில் நடிக்கும் அழகு தேவதைகளையும், கடைகளின் பிரம்மாண்டத்தையும் பார்த்து இவரது வாடிக்கையாளர்களில் சிலர் நகர்ந்துகொண்டு தானிருக்கிறார்கள்.
கம்பீரமான அவரைப் பார்த்தாலே மரியாதை பிறக்கும். நகைக்கடையின் உரிமையாளர் என்றாலும் அவர் மனைவி மங்களம் கச்சிதமாகத் தான் நகை அணிவார். அம்பாளுக்குச் சாத்தற மாதிரி அடுக்கடுக்காய் நகைஅணிவது அவருக்குப் பிடிக்காது. இரண்டு பேரும் மாலையுடன் மணையில் உட்கார்ந்தார்கள்.மணமகன் அருண் சாதாரண மஞ்சள் வேட்டி சட்டையிலேயே முன்னாள் கதாநாயகன்போல இருந்தான்.(இப்பவுள்ள படங்களில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் பெருசாக வித்தியாசம்இருக்காது)
அருண் பெங்களூரில் Google நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அங்கேதான் ஷோபனாவைச் சந்தித்தான். யதேச்சையாகப் பேசிக்கொண்டபோது ஒரேஊர், ஒரேஜாதி என்று தெரிந்ததும் இருவருக்கிடையே ஒரு ஈர்ப்பு பிறந்தது. ஆரம்பத்தில் நூலிழையாய் இருந்த அன்பு சில மாதங்களிலேயே காதலாய் மாறி விருட்சமாக வளர்ந்து விட்டது. இப்போதெல்லாம் இளைஞர்கள் கண்ணை மூடிக்கொண்டு காதலிப்பதில்லை. ஆள்பார்த்து, தகுதிபார்த்து, குடும்பம்பார்த்து, கையிருப்பு பார்த்து என வேலைக்கு ஆளெடுப்பது போல்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் சில சறுக்கல்கள் வரத்தான் செய்கின்றன. அருண் ராமநாதய்யர் சொல்லச் சொல்லப் பெற்றவர்களுக்குப் பாதபூஜை செய்துமுடித்தான்.
அடுத்தது “பொண்ணோட அம்மா, அப்பா வந்து உட்காருங்கோ” என்றார் ராமநாதய்யர். ஷோபனாவின் அப்பா ஷண்முகம் பொன்மலை இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். அவர் மனைவி திலகா ‘தில்லானா மோகனாம்பாள்’ வடிவு சாயலுக்கு இருப்பாள். பணத்தாசையிலும் வடிவுதான். இவர்கள் காதலை உடனடியாகத் திலகா ஒப்புக்கொள்ளக் காரணம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஷண்முகம் வழக்கம்போல் பச்சைக்கொடி காட்டி விட்டார். திலகா முகத்தில் கவலையும், ஆத்திரமும் வெளிப்படையாகத் தெரிந்தது. அவ்வப்போது ஒப்புக்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஷோபனா வரும்போதே அருணைப் பார்த்து ஒரு வசீகரப் புன்னகையை வீசினாள். மஞ்சள் புடவையில், மின்னும் நகைகளுடன், பொருத்தமான ஒப்பனையில் பளீரெனத் தெரிந்தாள். அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த அருண், அவளது சிரிப்பில் கிறங்கிப் போனான். அம்மாவின் முகத்தைப் பார்த்தவுடன் ஷோபனாவையும் கவலை தொற்றிக் கொண்டது. நேற்றிலிருந்து ஆயிரம் தடவை அம்மா புலம்பி விட்டாள்.
“தாய்மாமன் கட்டுச் செய்ய வேண்டிய அண்ணன் இன்னும் வரலையே! அண்ணிக்கு ஏற்கனவே என்னைப் பிடிக்காது. சமயம் பார்த்துக் கழுத்தறுக்கறாங்களோ! அவங்களை நேரில் போய் அழைக்கலைன்னு கோபமாய் இருக்கும்.அண்ணன் எப்படியும் வந்துடுவாரே, அவரும் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு வராமல் இருக்காறோ! பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைச்சதுல அண்ணிக்குப் பொறாமை இருக்கும்.” என்று புலம்பிக் கிட்டே இருக்காங்க.
ஷோபனா அம்மா, அப்பாவுக்குப் பாத பூஜை பண்ணும் போதே அம்மாவிடம் கிசுகிசுப்பாக “மாமாவுக்கு என்ன பிரச்சனையோ, ஃபோனும் எடுக்க மாட்டேங்கறாங்க. நீயாவே ஏதாவது கற்பனை பண்ணிக்காதே. உன் முகத்துல கடுப்பைக் காட்டாதேம்மா. கல்யாணத்துக்கு வந்தவங்களை கவனி” என்றாள். அப்பாவும் “அதைத்தான் நானும் சொல்றேன். உங்கம்மா கேட்காமல் முகத்தைப் பானைமாதிரி வைச்சிருக்கா. சம்பந்தகாரங்க தப்பா நினைக்கப் போறாங்க” என்றார். அதன்பின் திலகா முகத்தைச் சாதாரணமாக வைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் தாய்மாமன் சடங்கு செய்ய வேண்டிய முறை வந்தபோது திலகாவின் முகம் மீண்டும் இருண்டு போனது. நல்ல வேளையாக ஒன்றுவிட்ட அண்ணனை வைத்துச் சமாளித்து முடித்தார்கள். சென்னையில் உள்ள உறவினர் ஒருவரை அண்ணன் வீட்டில் நேரில் போய்ப் பார்த்து விபரம் சொல்ல ஷண்முகம் கேட்டிருந்தார். அவரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர் “அவங்க எல்லாரும் வீட்டுலதான் இருக்காங்க. அண்ணிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்” என்றார். இதைக் கேட்டதும் திலகாவின் ஆத்திரம் இன்னும் அதிகமானது.
“இவங்களுக்கு முடியலைன்னா இவங்க மட்டும் வீட்டுல இருக்க வேண்டியது தான! எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வரக் கூடாதுன்னே ஏதாவது வேஷம் போட்டிருப்பா. எங்கண்ணன் வெகுளி, இவ நடிப்பைப் பார்த்து ஏமாந்து உட்கார்ந்திருக்கும்” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள். ‘உங்கண்ணன் வெகுளிதான். அதுனால தான் முதுகொடிய அவர் பட்டறையில உட்கார்ந்து சம்பாதிக்கறதுல பாதியைக் கறந்துடறயே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ‘அண்ணியை அவரது மகனைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு அண்ணனாவது வந்திருக்கலாமே’ என அவருக்கும் கூடத் தோன்றியது.
கெட்டிமேளம் முழங்கச் சுற்றமெல்லாம் வாழ்த்த ஷோபனா கழுத்தில் அருண் திருமாங்கல்யம் கட்டினான். அடுத்து இரண்டு பேரும் ‘நாகவள்ளி பூஜை’க்குத் தயாரானார்கள். ஷோபனா 50,000 ரூபாய் பட்டுப் புடவையில் தேவதைபோல் ஜொலித்தாள். மஞ்சள் காட்டன் புடவையிலேயே அவளைப் பார்வையால் விழுங்கியவனின் கைகள் இப்போது துறுதுறுத்தது. ‘நம்கடை விளம்பரத்தில் இவளை நடிக்க வைத்தால் விற்பனையில் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்து விடுவோமோ’ என்று யோசித்தான். அப்புறம் ‘இந்த அழகு தேவதை எனக்கு மட்டுமே சொந்தம், இவளைப் பார்த்துக் கண்டவர்களும் ஜொள்ளு விடறதை எப்படி என்னால் சகித்துக் கொள்ள முடியும், அதைவிட எங்கள் கடை நஷ்டமடைந்தால் கூடக் கவலையில்லை’ என்று தோன்றியது.
இவர்களைச் சுற்றி சிறுசுகள் உட்கார்ந்து கிண்டல் செய்ய ஆரம்பிக்க, பெரியவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை அசைபோட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். ஷோபனாவும், அருணும் சிறு குழந்தைகளாய் மாறி இந்த விளையாட்டுகளை ரசித்துச் செய்தார்கள். இந்தச் சடங்குகள் எல்லாம் பார்க்கச் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தாலும் திருமணங்களின்போது வரும் சின்னச்சின்ன மனத்தாங்கல்கள் எல்லாம் மறந்து அங்கே மகிழ்ச்சி பரவும் என்பதற்காகவே இதையெல்லாம் ஏற்படுத்தி இருப்பார்களோ! திலகா கூட இதை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சடங்குகளை உற்றுக் கவனித்தால் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்தபலன் ஏதோவொன்று இருக்கும்போல.
நாகவள்ளி பூஜை முடிந்து முதலி்ல் பெண் வீட்டுக்கும், அடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கும் போய்ப் பாலும்பழமும் சாப்பிட்டு வந்தார்கள். மாப்பிள்ளை வீட்டு வாசற்படியருகே ஒருமரக்காலில் நெல்லை வைத்திருந்தார்கள். ஷோபனா அதை இடற, வீடுமுழுக்க நெல்மணிகள் சிதறியது. வருடம் முழுக்க வீட்டில் தானியத்துக்குத் தட்டுப்பாடு வரக் கூடாது என்பதற்கான வேண்டுதல்இது. அன்று மாலை வரவேற்பு முடிந்து தம்பதிகளை மாப்பிள்ளை வீட்டுக்கு முதலிரவுக்கு அனுப்பி வைத்தாயிற்று.
அதே நேரம் சென்னை துரைப்பாக்கத்தில் இருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் பத்தாம் எண் வீட்டில் மயான அமைதி நிலவியது. ஆமாம், இன்னும் சில மணி நேரங்களில் மயானத்திற்குப் போக வேண்டிய அந்த மனிதரை ஐஸ் பெட்டிக்குள் கிடத்தியிருந்தார்கள். தலைமாட்டில் குத்து விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது. கொத்தாக ஏற்றி வைத்திருந்த ஊதுபத்தியின் வாசனை அந்த ஹால் முழுவதும் நிரம்பியிருந்தாலும் அதையும் மீறிக் காற்றில் செத்த வீட்டின் ஈரவாடை நாசிக்குள் நுழைந்தது. இறந்தவரின் முகத்தில் பேரமைதி தெரிந்தது. அவர் தலைமாட்டில் அவரது மனைவி சாந்தா கல்லாய் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள். அவள் மகன் கார்த்திக் அருகில் வந்து உட்கார்ந்து அம்மாவின் தலையைக் கோதினான்.
“இன்னிக்கு ராத்திரி வரை அப்பாவின் இறப்புபற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டீங்க. இப்பமணி எட்டு ஆயாச்சு. இப்ப சொன்னாத் தான் அவங்கல்லாம் கிளம்பிவரத் தோதா இருக்கும். அப்படியும் கூடக் காரியம் முடிய நாளை மதியம் ஆயிடும். விஷயம் தெரியாம அத்தை உங்களைக் கிழிச்சுத் தொங்க விட்டிருப்பாங்க. நீங்கதான் கல்யாணம் நல்லபடியாக முடியட்டும்னு சொல்லிட்டீங்க. இப்பவாவது சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
அம்மா அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள். “உங்கப்பா பத்து வயசுலயே பட்டறைல உட்கார்ந்தவர். அவர் தங்கச்சி மேல உயிரையே வைச்சிருந்தார். தங்கச்சி மகளுக்கு ஒருநல்ல வாழ்க்கை அமையும்போது உங்காப்பாவால அது தடைபடக் கூடாதுன்னுதான் இதுவரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொரு கல்யாணத்துக்குப் பின்னாடியும் எத்தனை பேரோட உழைப்பும், பிழைப்பும் இருக்கு தெரியுமா? ஒரு தடவை நின்னு போச்சுன்னா திரும்ப அது நடக்குமாங்கறது கூடக் கேள்விக்குறி தான்யா. உங்க அத்தை என்னை முப்பது வருஷமாத் திட்டிக்கிட்டு தான் இருக்காங்க. அது எனக்குப் பழகிப் போயிடுச்சு தம்பி. அதுனால தான் அவங்க அனுப்பின ஆள்கிட்ட ‘எனக்கு உடம்பு சரியில்லை’ன்னு பொய் சொல்லி அனுப்பச் சொன்னேன்.
இப்ப ஷோபனா புகுந்த வீட்டுக்குப் போயிருப்பா. உங்க சுப்பையா மாமாகிட்டப் பக்குவமாச் சொல்லி அவங்க இரண்டு பேரையும் கிளம்பிவரச் சொல்லு. தங்கச்சி வராம உங்கப்பா கிளம்ப மாட்டார்ப்பா” என்று சொல்லி முடிக்கும்போது அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அடிவயிற்றிலிருந்து விம்மல் வெடித்துவர, இவ்வளவு நேரம் கல்லாய் உறைந்து போயிருந்த அம்மா உள்ளுக்குள் நொறுங்கிப் போயிருப்பது புரிந்தது. அத்தனை நேரமாய் உள்ளுக்குள் துக்கத்தை விழுங்கித் தொண்டைக்குள்ளேயே அடைத்து அடைத்து வைத்திருந்த அம்மா இனியும் தாங்க முடியாது என்பது போல் வாய்விட்டு அலற ஆரம்பித்தாள்.

One Comment on “வசந்தா கோவிந்தராஜன்/தாய்மாமன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன