
“சதீஷ், நாளைக்கு உன் பிளஸ் 2 ரிசல்ட் வருதே! கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம். என் கூட வரயா?” என்று முருகேசன் கேட்டார்.
ஷார்ட்ஸ், டீ ஷர்ட், லேசான குறுந்தாடி என இந்தக் கால இளைஞனுக்கான சர்வ லட்சணங்களுடன் காட்சியளித்த சதீஷூக்கும் மறு நாள் வரப்போகும் பிளஸ் டூ ரிசல்ட்டை நினைத்தால் வயிறு கலங்கத்தான் செய்கிறது. கண்டிப்பாகக் கணக்கு காலை வாரி விடும் என்று தோன்றுகிறது. அவன் மனசுக்குப் பிடித்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த வீட்டுக் கொள்கை வேறு நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. மார்க் குறைந்தால் அந்தக் கொள்கையைக் கொஞ்சம் வளைத்தால் போதும், இவன் எதிர்பார்க்கும் கல்லூரியில் பிடித்த கோர்ஸில் சேர்ந்து விடலாம். தாத்தாவைக் கொஞ்சம் தாஜா பண்ணலாமா என்று யோசித்தான்.
“தாத்தா, ஏற்கனவே பேப்பர் திருத்தறவங்க மார்க் போட்டு பட்டியலே ரெடியாகி இருக்கும். நாம போய்க் கும்பிடறதால மார்க் எதுவும் மாறப் போறதில்லை. சும்மா உன்கூட வேணா கோவிலுக்கு வரேன்” என்றான். வழக்கமாகக் கோவிலுக்குப் போவதென்றால் தட்டிக் கழிப்பவன் நாளை ரிசல்ட் பதற்றத்தால் வரச் சம்மதிப்பது அவருக்கும் புரிந்தது.
“அது எனக்கும் தெரியும்பா. நானும் பேராசிரியரா இருந்தவன் தானே. ஆனாலும் நம்மோட பிரார்த்தனைகளால் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அவ்வளவு தான்”
“அப்படியே சரவணபவன் போயிட்டு வரலாமா? சாம்பார் வடை சாப்பிட்டு நாளாச்சுன்னு நேத்து நீங்க சொல்லிட்டு இருந்தீங்களே! கந்தசாமி அண்ணன் இருக்காரான்னு பாக்கறேன்”
டிரைவர் கந்தசாமி வருவதற்குள் முருகேசனை உங்களுக்குச் சின்னதாக அறிமுகம் செய்து விடுகிறேன். எழுபது வயசாகும் அவர், பௌதிகப் (Physics) பேராசிரியராகப் பிரபல கல்லூரியில் பணிபுரிந்தவர். ஐம்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பே தன் சாதிச் சான்றிதழைக் கிழித்தெறிந்தவர். தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமேயொழிய தன் பிறப்பினால் கிடைக்கும் எந்தச் சலுகையும் வேண்டாமென உதறித் தள்ளியவர். தான் மட்டுமல்ல மகன் சுந்தரேசன், மகள் கவிதா யாருக்குமே சாதிச் சான்றிதழ் வாங்காமலே உச்சம் தொட வைத்தவர். மகன் சுந்தரேசன்(சதீஷின் அப்பா) பிளஸ் டூவில் மாநில அளவில் பத்தாம் இடத்தைப் பிடித்து அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து தற்போது சென்னையில் சிறந்த Cardiologist என்று பெயர் வாங்கியவர். மகள் கவிதா IIM அகமதாபாத்தில் MBA படித்து தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர். இவர்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் சாதிக்கான சலுகையைப் பயன்படுத்தக் கூடாது என்று முருகேசன் போட்ட கண்டிஷன் தான் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இவரது இந்த உறுதிக்குக் காரணம் பாரதியும், பாகீரதி அம்மாளும். சதீஷ் வந்து விட்டான்.
“தாத்தா, கந்தசாமி அண்ணன் ரெடியாத்தான் இருக்கார். நீ பாத்ரூம் போகணும்னா போயிட்டு வா, அப்புறம் அங்க வந்து ‘டாய்லெட் எங்க இருக்குன்னு?’ என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது” என்று பொறுப்பாகச் சொல்லும் பேரனைப் பார்த்துச் சிரித்தார்.
“உன்கிட்ட நாங்க முன்னாடி சொன்னதை இப்ப நீ எனக்குச் சொல்ற! ஆனாலும் ஞாபகப்படுத்தினதுக்கு தேங்க்ஸ்டா “ என்று தன் படுக்கையறையுடன் இணைந்திருந்த பாத்ரூமுக்குப் போய் வேலையை முடித்துத் திரும்பினார்.
ஹாலில் வழக்கம் போல் தொலைக்காட்சி சீரியலில் மூழ்கியிருந்த மருமகள் மீனாட்சியிடம் “நாங்க கோவிலுக்குப் போயிட்டு வரோம்” என்றார். சீரியல் மாமியாரிடமிருந்து கண்ணை எடுக்காமலே “பாத்துப் போயிட்டு வாங்க” என்றாள்.
வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, வெள்ளைத் துண்டு சகிதம் கண்ணாடியும், கைத்தடியுமாகக் கிளம்பின தாத்தாவைப் பார்த்து சிரித்த சதீஷ் “ராம்ராஜ் விளம்பரத்துக்குக் கிளம்பின மாதிரி இருக்கீங்க தாத்தா” என்றான். அவனைப் பார்த்து புன்னகைத்த முருகேசன் “உங்க பாட்டி நான் காலேஜ் கிளம்பிப் போகும்போதெல்லாம் என்னைப் பெருமையா ஒரு பார்வை பார்ப்பா பாரு, அதுக்காகவே நான் பளிச்சுனு கிளம்புவேன். இப்ப வழியனுப்ப அவ தான் இல்லை. என்ன அவசரமோ, போன வருஷமே என்னை விட்டுட்டுக் கிளம்பிட்டா “ என்று கண்ணாடியைக் கழற்றி மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
சதீஷூக்குத் தாத்தா மேல் அளவு கடந்த பிரியம். அவர் மனசைத் திசை திருப்ப “மந்தைவெளில இவ்வளவு பெரிய தனி வீடு எப்ப தாத்தா வாங்கினீங்க? என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஃபிளாட்ல தான் இருக்காங்க. நம்ம வீடு தான் அழகான தோட்டத்தோட இருக்கு” என்று சொல்லிக் கொண்டே கார்க் கதவைத் திறந்து விட்டான்.
“நாப்பது வருஷம் முன்னாடி இங்கெல்லாம் ஃபிளாட்ஸே கிடையாது. எல்லாமே தனி வீடு தான். அப்ப எங்க காலேஜ் லெக்சரர்ஸ் நாலைந்து பேர் பேங்க் லோன் போட்டு தனி வீடு வாங்கினோம். இப்ப அவங்கல்லாம் வீடுகளை வித்துட்டு வேற வேற இடத்துல செட்டில் ஆயிட்டாங்க. நான் மட்டும் தான் அதே வீட்டுல இருக்கேன்” என்றார் பெருமிதமாக.
பத்து நிமிடங்களில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டார்கள். அன்று பிரதோஷமானதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. முருகேசன் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் கண்ணார தரிசித்து “இந்தக் குழந்தை நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் அவன் விரும்பும் கோர்ஸ் கிடைக்க அருள்புரிய வேண்டும்” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். கோவிலில் இளசுகள் கூட்டம் அதிகமாக இருந்தது சதீஷுக்கு சந்தோஷமாக இருந்தது. நம்மளை மாதிரியே நாளை வரும் ரிசல்ட் பயத்தில் வந்திருப்பாங்க என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
தரிசனம் முடித்து வழக்கம் போல் சரவண பவனில் தாத்தா சாம்பார் வடை, பேரன் சில்லி பரோட்டா, டிரைவர் கந்தசாமி மசால் தோசை என சாப்பிட்டு முடித்தவுடன் முருகேசனு க்கு சாந்தோம் கடற்கரை போய் வரலாமே என்ற ஆசை எழுந்தது. சதீஷிடம் கேட்டார். அவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தாத்தாவைக் கொஞ்சம் தாஜா பண்ணலாமே என்று தோன்றியது. எப்படியும் தாத்தாவைத் தங்கள் சாதிக்கான சலுகையுடன் அவன் விரும்பும் பொறியியல் கல்லூரியில் சேரச் சம்மதிக்க வைக்க வேண்டும். இவர் சம்மதித்தால் போதும், அப்பா குறுக்கே நிற்க மாட்டார். அம்மா தான் இந்த ஐடியாவையே சொன்னாள். அதனால் “சரி தாத்தா, நானும் உங்க கிட்ட சில விஷயம் கேக்கணும்னு நினைச்சுட்டே இருக்கேன். போகலாம்” என்றான்.
முருகேசனுக்கு அவன் என்ன கேட்கப் போகிறான் என்பது கொஞ்சம் புரிந்தது. அவருக்கும் இன்று யாரிடமாவது அதைப் பகிர வேண்டும் என்ற யோசனை ஓடிக்கொண்டே தானிருக்கு. காந்தியைத் தாண்டி பரந்து கிடந்த மணலில் போய் உட்கார்ந்தார்கள். சதீஷுக்கு இளசுகள் எல்லாம் அவரவர் நண்பர்கள் அல்லது நண்பிகளுடன் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் போது தான் மட்டும் தாத்தாவுடன் உட்கார்ந்திருப்பது சங்கடமாக இருந்தாலும் இன்று இவரைத் தன் வழிக்குக் கொண்டு வரணும் என்று தீர்மானித்தான்.
தாத்தா மேல் துண்டைக் கீழே விரித்து உட்கார்ந்து கொண்டு கடலலைகளைப் பார்த்தார். “உன் மனசுல இப்ப என்ன எண்ணம் ஓடுதுன்னு தெரியுதுப்பா. நாளை வரும் ரிசல்ட்டில் உன் மார்க் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு, அதுனால நம்ம சாதிச் சான்றை உபயோகப் படுத்தினால் நீ நினைக்கிற காலேஜ்ல இடம் கிடைச்சுடும்னு உனக்கு நம்பிக்கை இருக்கு. உங்கம்மா ஏற்கனவே தன்னோட சாதிச் சான்றிதழைக் காட்டி உனக்கும் Certificate வாங்கி வைச்சிருக்கா என்பதும் எனக்குத் தெரியும். என் மாணவர்கள் தான் எல்லா இடங்களிலும் இருக்காங்களே, அவங்க கிட்ட எல்லாம் “சாதியில் ஏற்றத்தாழ்வு ஒழியணும்னா நமக்கான சலுகைகளை ஏற்க மறுக்கணும். நமக்கு சலுகை இல்லைன்னு நம் ஆழ் மனதுக்குள் பதித்துக் கொண்டால் நம் திறமை மீது நம்பிக்கை வைப்போம்” என்று சொல்லிச் சொல்லி நிறையப் பேரை மாற்றியிருக்கேன். அதுனால தான் என் பேரனுக்கே சாதிச் சான்று வழங்கும் போது அந்த மாணவன் மனசு கேட்காம என்கிட்ட சொல்லிட்டான். என் மனசில் இந்த விதையை விதைச்சவர் பாகீரதி அம்மா. என் சின்ன வயசுக் கதையை உன்கிட்டச் சொல்றேன், அப்புறம் நீயே உன் வாழ்க்கையை முடிவு பண்ணிக்கோ” என்றார்.
முருகேசன் குடும்பம் திருநெல்வேலி டவுனில் பத்து குடும்பங்கள் இருக்கும் ஒரு வளவு (காம்பவுண்ட்) வீட்டில் குடியிருந்தது. அவன் அப்பா தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்தார். பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் முருகேசன் படித்தார். அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகமானவன் தான் வைத்தி என்னும் வைத்தீஸ்வரன். அவன் அப்பா இரயில்வேயில் வேலை பார்த்தார். அந்த வருடம் தான் திருநெல்வேலிக்கு மாறுதலில் வந்திருந்தார். முருகேசனுக்கு வைத்தியைப் பார்த்த நாளிலேயே பிடித்துப் போனது. அவன் வீடு கரியமாணிக்கப் பெருமாள் கோவில் தெருவில் இருந்தது.
ஒரு சனிக்கிழமை வைத்தி தன் வீட்டுக்கு முருகேசனை வரச்சொல்லியிருந்தான். முருகேசன் தயங்கிக் கொண்டே வாசலில் நின்றான். திண்ணையில் தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்திருந்த பாட்டி “அம்பி, வைத்தியத் தேடிண்டு வந்திருக்கயா?” என்று கேட்டார்.
‘என் பெயர் முருகேசன், அம்பி இல்லை’ என்று சொல்ல வாயெடுக்கும் போது வைத்தி உள்ளிருந்து ஓடி வந்து “வாடா” என்று கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். “அம்மா, என் ஃப்ரெண்டு முருகேசன் வந்துட்டான்” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தான். இருட்டான சமையல் அறைக்குள்ளிருந்து பளீரென வெளிப்பட்ட அந்த அம்மாள், மேகத்திலிருந்து வெளிவரும் முழு நிலவு போல் தெரிந்தாள். வியர்வையில் லேசாக அழிந்த குங்குமப் பொட்டும், பளீரென்று இருபுறமும் ஜொலிக்கும் மூக்குத்திகளும், தோடுகளுமாக காந்திமதி அம்மன் போலவே இருந்தாள். “வாப்பா முருகேசா, நீ வருவன்னு வைத்தி சொன்னான். உன்கூடத் தான் சாப்பிடுவேன்னு காத்திண்டிருக்கான்” என்றார்.
அன்றிலிருந்து முருகேசன் அந்த வீட்டில் ஒருவனாகி விட்டான். திண்ணைப் பாட்டி மட்டும் இவனைப் பார்க்கும்போதெல்லாம் முணுமுணுப்பார். அவரும் இரண்டு வருடங்களில் காலமாகி விட்டார். அதன் பின் அவன் தன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட வைத்தி வீட்டில் இருக்கும் நேரம் தான் அதிகமாகிப் போனது. பாகீரதி அம்மாளுக்கு பாரதியார் பாடல்கள் மேல் கொள்ளைப் பிரியம். அவர் சொல்லிச் சொல்லி முருகேசனுக்கும் பாரதி நெருக்கமாகி விட்டார். தினமும் பாரதியார் பாடல் ஒன்றைச் சொல்லி அதன் விளக்கமும் சொல்லித் தருவார். அப்படித் தான் “சாதிகள் இல்லையடி பாப்பா” பற்றி விளக்கும் போது “முதலில் நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வு நமக்குள் வர வேண்டும். நமக்கே அவங்க நம்மை விட உயர்ந்தவங்களோ என்ற சந்தேகம் இருந்தால் தாழ்வு மனப்பான்மை தான் வரும். தன்னால் முடியாது என்று நம்பிக்கை இழப்பவனே சலுகை எதிர்பார்க்கிறான். உழைப்பால், முயற்சியால், அறிவால் உயர வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவன் தன்மேல் நம்பிக்கை வைத்துத் தானே முன்னேறுவான். எனக்குச் சலுகை உண்டு என்ற நினைப்பே நம்மைச் சோம்பேறியாக்கி விடுகிறது. என்னைப் பொறுத்தவரை நீயும், வைத்தியும் ஒன்று தான். மற்றவர்கள் அதுபோல இல்லையென்றால் அதைப்பற்றிக் கவலைப்படாதே! இங்கே சாதியைக் காட்டியே அரசியல் செய்வார்கள். உன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. உன்னிடம் அறிவும், உழைப்பும் இருக்கு. எதிர்காலத்தில் நீ சிகரம் தொடுவாய். பாரதி சொன்ன மாதிரி சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களையணும்னு நினைச்சால் முழுக்க முழுக்க உன் முயற்சியால் முன்னுக்கு வா. இது தான் இந்த அம்மாவின் ஆசை” என்றாள். இது முருகேசன் மனதில் கல்வெட்டு போல் பதிந்து போனது.
பதினொன்றாம் வகுப்பில் (அப்போது எஸ்.எஸ்.எல்.சி) வைத்தியும் , முருகேசனும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள். இரண்டு பேரும் P.U.C. ஒரே கல்லூரியில் சேர்ந்தார்கள். முருகேசன் குடும்பத்திலும் வைத்தியுடன் நெருக்கமாய்ப் பழக ஆரம்பித்ததிலிருந்து முருகேசன் நன்றாகப் படிப்பதுடன் ஒழுக்கமாகவும் இருப்பதைப் பார்த்து திருப்தியடைந்தார்கள். P.U.C.யிலும் இருவரும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள் பெற்றதும் என்ன படிக்கலாம் என்று முருகேசனுக்குக் குழப்பமாக இருந்தது. வைத்தி அப்பாவைத் திருச்சிக்கு மாற்றி விட்டதால் வைத்தி திருச்சியில் உள்ள கல்லூரியில் B.Sc (Physics) சேரலாம் என்று முடிவு செய்தான். முருகேசனைப் பொறுத்தவரையில் சாதிச் சான்றைக் காட்டினால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருந்தது. பாகீரதி அம்மாளும், வைத்தியும் கூட அவனை மருத்துவம் படிக்க வற்புறுத்தினார்கள்.
பாகீரதி அம்மாள் “இது போலச் செலவில்லாமல் டாக்டராக வாய்ப்பு கிடைக்கறது பெரிய விஷயம், உன்னை வெள்ளைக் கோட்டும், ஸ்டெதஸ்கோப்புமாய்ப் பாக்கணும்னு ஆசையாய் இருக்குடா” என்றார்.
“என்னம்மா நீங்களே இப்படிச் சொல்றீங்க. என்னை விடப் பத்து மார்க் கூட எடுத்திருக்கற வைத்திக்கு அந்த வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது, எனக்கு மட்டும் கிடைக்குதுன்னா அதுக்குக் காரணம் நான் இல்லையே! நான் பிறந்த சாதி தானே? சின்ன வயசுலேருந்து சாப்பாடு கூட பாரதியையும் எனக்குள்ள திணிச்சிருக்கீங்க. என்னையும் உங்க மகன்னு சொல்லுவீங்க. இப்ப மட்டும் நீ சாதிக்கான சலுகையை அனுபவிச்சுக்கோன்னு சொல்றீங்க! இது நியாயமா?” என்றான்.
“நான் சாதிக்கான சலுகை அனுபவிக்கக் கூடாதுன்னு சொன்னது எதுக்குன்னா, அப்ப தான் உனக்கும் உன் திறமை மேல நம்பிக்கை வரும், நானும் படிச்சு சாதிக்கணும்னு உத்வேகம் வரும்கிறதுக்காகத் தான். உங்க குடும்பத்துல கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறையே நீ தான். உன் சந்ததி வேணா இதை உபயோகப் படுத்தாம இருக்கட்டும். உனக்குக் கிடைக்கற நல்ல வாய்ப்பை இழக்காதேடா முருகேசா” என்று கெஞ்சினார்.
“இல்லைம்மா, எனக்கு அதுக்கான தகுதி இருக்கறதா நான் நினைக்கலை. அப்படியே நான் மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும் இந்த உறுத்தலே என்னை முன்னேற விடாமல் பண்ணிடும். சாதி பார்க்காமல் என் மார்க்குக்கு என்ன கோர்ஸ் கிடைக்குதோ அதுல சேர்ந்து முன்னுக்கு வந்து காட்டுவேன். இது சத்தியம்!” என்று சொல்லிச் சாதிச் சான்றைக் கிழித்தெறிந்து விட்டான்.
முருகேசனைப் பெற்றவர்களுக்கு மகன் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை. பாகீரதி அம்மாள் தான் அழுது விட்டார். “முருகேசா, உன்னைப் பார்த்தால் பிரமிப்பாய் இருக்குடா. அந்த முண்டாசுக்காரன் இப்ப உயிரோட இருந்தால் உன்னைத் தலை மேல வைச்சுக் கொண்டாடியிருப்பான். நீ சாதாரண மனுஷன் இல்லைடா! இந்த வயசுல இப்படியொரு பக்குவம் அபூர்வம். நீ அமோகமா வருவடா” என்று கட்டிக் கொண்டார்.
வைத்தி, நண்பனின் கையை பற்றிக் கொண்டான். “உன்னை நண்பன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்குடா. நம்ம நட்பு நம் கடைசி மூச்சு வரை நிலைச்சிருக்கும்டா” என்று இறுகத் தழுவிக் கொண்டான்.
இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தார்கள். படித்து முடித்த பின் வைத்திக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பதவி கிடைத்தது. முருகேசன் கல்லூரி விரிவுரையாளரானார்.
கடற்கரையில் இருள் சூழ்ந்து விட்டது. சதீஷ் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான். முருகேசன் “அடடே நேரமாயிடுச்சே, கிளம்பலாம்பா” என்றார். வரும் வழியில் எதுவும் பேசவில்லை.
மறு நாள் அதிகாலையில் வீடே விழித்துக் கொண்டது. சுந்தரேசன் கூட வீட்டில் இருந்தார். ஒன்பது மணிக்கு வெளியாகவிருந்த ரிசல்ட் ஒன்பதரைக்குத் தான் வெளியானது. வீட்டில் எல்லோரும் தானே பரீட்சை எழுதியது போல் படபடப்புடன் காத்திருந்தார்கள். சதீஷ் 1122 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவன் Maths 85%, Physics 94%, Chemistry 95% Computer Science 93% வாங்கியிருந்தான். அவன் நினைத்த மாதிரியே கணக்குப் பரீட்சை காலை வாரியிருந்தது. இந்த மதிப்பெண்ணுக்கு அவன் கனவுக் கல்லூரியில் பொதுப்பிரிவில் இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை. அதுவும் அவன் எதிர்பார்க்கும் CSE கிடைக்கவே கிடைக்காது. வீட்டில் எல்லாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுயவர்களின் முகபாவம் காட்டினார்கள்.
முதலில் சுதாரித்துக் கொண்டது முருகேசன் தான். “கவலைப்படாதே சதீஷ். கணக்கைத் தவிர எல்லாம் நல்ல மார்க் தான். வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டும் நம் அறிவை எடை போட முடியாது. இந்த மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அதில் படி. எஙகு படிச்சாலும் உன்னை நிரூபிக்கலாம். முன்னுக்கு வரணும்னு முயற்சி இருந்தாப் போறும்டா” என்றார்.
மருமகள் மீனாட்சியின் முகம் மாறியது. “நம்ம சாதிக்கு இந்த மார்க்குக்கு அவன் நினைக்கிற காலேஜ்ல இடம் கிடைக்கும். அவன் எதுக்குக் கிடைக்கிற காலேஜ்ல சேரணும்?” என்றாள் ஆக்ரோஷமாக.
முருகேசன் இதற்குத் தன் மகன், சிறந்த Cardiologist அழகாய் பதில் சொல்வான் என்று நினைத்து அவரைப் பார்த்தார்.
“நம்ம வீட்ல சாதியே வேண்டாம்னு இருக்கறது உனக்கும் தெரியுமில்லையா? அப்பறம் எப்படி நம்ம சாதிக்கான சலுகை கேட்க முடியும்?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டார். முருகேசன் பெருமிதமாக மகனைப் பார்த்தார். அடுத்த நிமிடமே அது தலைகீழாக மாறிப் போனது.
சுந்தரேசன் “அந்தக் காலேஜ் நடத்தறதே எனக்குத்தெரிஞ்சவர் தான். மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கு என்ன ஆகுதோ அதைக் கட்டிடலாம். நமக்கு வருமானத்துக்குக் குறைச்சலா என்ன? நாலு பை பாஸ் சர்ஜரி பண்ணிட்டா அந்தத் தொகை கிடைச்சுடும். கவலைப்படாதேடா சதீஷ்! நீ ஆசைப்படற காலேஜ்ல நீ கேட்கற கோர்ஸ் வாங்கித் தர வேண்டியது என்னோட பொறுப்பு. எனக்கு 12 மணிக்கு ஒரு சர்ஜரி இருக்கு, நான் கிளம்பறேன்” என்று புறப்பட ஆயத்தமானார்.
மீனாட்சி முருகேசனைப் பார்த்த பார்வையில் கொஞ்சம் திமிரும், கிண்டலும் கலந்திருந்தது. முருகேசன் மகனிடம் “ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேட்டுட்டுப் போ. நம்ம சாதிக்கான சலுகை அனுபவிப்பது எவ்வளவு தவறோ, காசு கொடுத்து சீட் வாங்குவது அதை விடப் பெரிய தவறு. உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை. உன் மகனுக்குப் புத்தி சொல்லுவன்னு நினைச்சால் அவனுக்குத் தப்பான பாதையைச் சொல்லித் தரயே! அப்புறம் எப்படி அவன் அறிவை வளர்த்துப்பான்?” என்றார்.
“நீங்க என்னப்பா, முன்னயும் போக விட மாட்டேங்கறீங்க, பின்னயும் போக விட மாட்டேங்கறீங்க! உங்களால எங்களுக்கு எளிதாய்க் கிடைக்க வேண்டியதைக் கூடக் கஷ்டப்பட்டுப் படிச்சதால் தான் கிடைச்சது. இப்ப என் மகனுக்காவது அது எளிதாய்க் கிடைக்கட்டுமேன்னு நினைக்கிறேன், நீங்க இப்ப அவன் விஷயத்துலயும் தலையிடறது எனக்குப் பிடிக்கல. சரி நான் கிளம்பறேன்” என்று வேகமாய்க் கிளம்பிப் போய் விட்டார். முருகேசன் கன்னத்தில் ஓங்கி அறை வாங்கிய மாதிரி உணர்ந்தார். சதீஷ் மெதுவாக மாடிக்கு நழுவினான். மருமகள் கணவரை வழியனுப்பப் போவது போல் கோணல் சிரிப்புடன் கடந்து போனாள்.
முருகேசன் திடீரென பத்து வயது கூடியது போல் உணர்ந்தார். எட்டடி நடந்து தன் அறைக்குப் போவதற்குள் எட்டு கிலோ மீட்டர் நடந்தது போல் தளர்ந்து போனார். கதவைச் சாத்திக் கொண்டு படுக்கையில் சரிந்தார். சுற்றும் மின் விசிறியை அண்ணாந்து பார்த்தார். பாகீரதி அம்மாளின் முகம் அதில் தெரிந்தது. வைத்தி இப்போது கோவையில் உள்ள வசதியான ஒரு சீனியர் லிவிங் ஹோமில் தானிருக்கிறார். அவருடைய ஒரே மகள் ஆஸ்திரேலியா சிட்னியில் வசிக்கிறாள். வைத்தியின் மனைவி இறந்து நாலைந்து வருடங்கள் ஆகி விட்டது. கொஞ்ச நாள் மகளுடன் போய்த் தங்கினார். அந்தக் குளிர் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் இரண்டு வருடங்களாக இந்த ஹோமில் தங்கியிருக்கிறார். அங்கு நல்ல சுத்தமான காற்று, ஆரோக்கியமான எளிய உணவு, வாக்கிங், யோகா, நூலகம் என்று நன்றாகப் பொழுது போகிறது என்று அவர் சொல்வதைப் பார்க்கும் போது அங்கேயே தானும் போகலாமா என்று பல முறை யோசித்திருக்கிறார். ஆனாலும் மகனையும், பேரனையும் விட்டுப் போக இதுவரை மனம் வந்ததில்லை.
இன்று மகனின் வார்த்தைகள் ஈட்டியாய்க் குத்தியது. என் கொள்கையினால் அவன் கஷ்டப்பட்டானாம். அவன் மகன் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லையென்று காசைக் கொடுத்து அவன் ஆசைப்படும் சீட் வாங்கப் போகிறானாம், அதுக்கு நாலு பை பாஸ் சர்ஜரி பண்ணினால் போதுமே என்று அவன் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவன் வியாபாரியா மருத்துவனா? எத்தனை மாணவ, மாணவிகள் படிக்க உதவியிருக்கேன்? என் மகனா இவன்? என் பேரன் மேல் உயிரையே வைத்திருந்தேனே, அவனுக்கும் என் கொள்கையை விடத் தன் ஆசை பிரதானமாகி விட்டதே!
ஒரு முடிவுக்கு வந்து வைத்திக்கு ஃபோன் பண்ணினார். எதிர்ப்புறம் உற்சாகமான வைத்தியின் குரல் “என்னடா, பேரன் நல்ல மார்க் வாங்கியிருக்கானா? அதைச் சொல்லத் தான ஃபோன் பண்ணின?”
“சதீஷ் நல்ல மார்க் தான் வாங்கியிருக்கான். நாளை காலை நான் நேர வரேன். உன்னோட ஹோம்ல தான் தங்கப் போறேன்” “என்னாச்சுடா? குடும்பத்தை, அதுவும் உன் பேரனை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொல்லுவயே!”
“உண்மை தான். உனக்கு என் கொள்கை பத்தி நல்லாத் தெரியும். எந்த சலுகையையும் எதிர்பார்க்காமல் உழைப்பையும், திறமையையும் வைச்சு மட்டுமே வாழ்க்கையில் முன்னேறணும் என்பதில் இத்தனை காலம் பிடிவாதமாக இருந்தேன். இப்ப நான் அதில் தோற்றுப் போய் விட்டேன். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குடா”
“நீ என் கூட இருந்தா எனக்கு சந்தோஷம் தான்டா. ஆனால் சட்டுனு முடிவு பண்ணிடாதே. குடும்பத்தை விட்டு வந்துட்டன்னா திரும்ப ஒட்டறது கஷ்டம்”
“இப்பவும் இங்க பேரனைத் தவிர யாரும் ஒட்ட மாட்டாங்க. இப்ப அவனும் என்னை மதிக்கலைன்னு தெரிஞ்சு போச்சு. என் மகன் மிகப்பெரிய இருதய சிகிச்சை மருத்துவன்னு சந்தோஷப்பட்டேன். அவன் இதயமே இல்லாத வியாபாரின்னு தெரிஞ்சப்புறம் எனக்கு அவமானமா இருக்கு. நான் அங்க வந்துடறேன்டா”
“வாடா, நாம ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கலாம்” என்று ஃபோனை வைத்தார்.
கதவு திறக்கும் ஓசை கேட்டது. சதீஷ். கட்டிலில் அமர்ந்து அவர் கை பிடித்தான். “Sorry தாத்தா, நேத்து நீ உன்னோட கொள்கை பத்தி அவ்வளவு சொல்லியும் நான் ஆசைப்பட்ட காலேஜ்ல சேரலாமேன்னு சுயநலமா யோசிச்சேன். இப்ப தான் அத்தை பேசினாங்க. அவங்க CEO உங்க மாணவராமே. நீங்க தான் அவரது தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தைரியம் சொன்னீங்களாம். அதன் பின் தான் அவருக்குத் தன் மீதே நம்பிக்கை பிறந்ததாம். “பேராசிரியர் முருகேசன் அவர்கள் காட்டிய வழியில் அவர் கொள்கையைக் கடைபிடித்ததனால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன்” என்று உலகின் அத்தனை பெரிய மனிதர்கள் முன்னாடி அவர் சொன்னாராம். அத்தை நெகிழ்ந்து போய் அழுதுட்டாங்ளாம். இதைச் சொல்ல உனக்கு ஃபோன் பண்ணினாங்களாம். உன் மொபைல் பிஸியா இருந்ததுன்னு என்கிட்டப் பேசினாங்க. என் மார்க் பத்திக் கேட்டாங்க. தாத்தா சொல்ற மாதிரி உன் திறமையால ஜெயிச்சால் தான் உன் மேல உனக்கே மதிப்பிருக்கும். உங்கப்பா புத்திசாலியென்றாலும் காரியவாதி. உங்கம்மாவைக் கேட்கவே வேண்டாம். நீயாவது தாத்தா மாதிரி நேரான வழியில வாழ்க்கையில் முன்னேறணும்பான்னு சொன்னாங்க. உங்க மாணவர்களே நீங்க காட்டின பாதையில நடந்து ஜெயித்துக் காட்டும் போது உங்க பேரன் உங்க வழியில தான நடக்கணும்? அப்பா சொன்னவுடனே கொஞ்சம் தடுமாறிட்டேன் தாத்தா. என்னை மன்னிச்சுடு. நீ சொன்ன மாதிரி என் மார்க்குக்குக் கிடைக்கிற காலேஜ்ல சேர்ந்து படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பா கிட்டயும் சொல்லிட்டேன். இப்ப திருப்தியா தாத்தா?”
முருகேசன் நெகிழ்ந்து போனார். “என் மகனால இடிஞ்சு போயிருந்த என் மனசு இப்ப தான் நிறைவா இருக்குடா”என்று சதீஷைக் கட்டிக் கொண்டார்.

One Comment on “வசந்தா கோவிந்தராஜன்/சலுகை துறந்தவர்”