வசந்தா கோவிந்தராஜன்/அவமானங்கள்

“என்னங்க, என் தம்பி பிரகாஷ் வர புதன் கிழமை கிரஹப் பிரவேசம்னு அழைச்சுட்டுப் போனானே, அதுக்கு ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?” என்று மாலா தன் கணவன் பாஸ்கரிடம் கேட்டாள்.
“ நீ தான் முடிவு பண்ணிட்டயே! நான் என்ன வேண்டாம்னா சொல்லப் போறேன்? கடைக்கு மட்டும் என்னைக் கூப்பிடாதே! நான் ஆபீஸ்லேருந்து வர லேட்டாகும்” என்று சொல்லிவிட்டு பரபரவென ஷேவ் பண்ண ஆரம்பித்தான்.
“அம்மா, லேட்டாகுது . டிஃபன் ரெடியா? கமகமன்னு வாசனை வருது. லஞ்ச் பாக்ஸ்ல என்ன வைச்சிருக்க?” என்று கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தாள் ஸ்வப்னா.
“ எல்லாம் ரெடி தான். சாப்பிட உட்காரு. லஞ்சுக்கு நீ கேட்ட வெஜ் புலாவ் தான் வைச்சிருக்கேன். தினமும் உனக்கொண்ணு, எங்களுக்கொண்ணுன்னு சமைக்க வேண்டியிருக்கு. நாங்க ஸ்கூல் போகும்போதெல்லாம் அப்பா என்ன கேக்கறாரோ அது தான் எல்லாருக்கும். எங்களுக்குன்னு ஒரு நாளும் அம்மா ஸ்பெஷலா செஞ்சு குடுத்ததில்லை, நாங்களும் கேட்டதில்லை, என்னம்மா?” என்று அம்மா வேதாவைப் பார்த்துக் கேட்டாள்.
சோபாவில் உட்கார்ந்து இவர்கள் பரபரப்பை ரசித்துக் கொண்டிருந்த வேதாம்மா “அப்பல்லாம் உங்க அப்பாவும் பாட்டியும் வைச்சது தான் சட்டம். அவங்க சொல்றதைத் தான் செய்யணும். பாட்டி காலமானப்புறம் உங்கப்பா கொஞ்சம் மாறினார். இப்ப நீங்க எல்லாரும் சம்பாதிக்கறீங்க, மற்றவர்களை எதிர்பார்க்காமல் உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கறீங்க. உங்களையும் வீட்டு ஆம்பிளைங்க சமமா நடத்தறாங்க. இன்னும் உன் பொண் காலத்துல அவங்க கை தான் அதிகம் ஓங்கி நிக்கப் போறது. வாழ்க்கைச் சக்கரத்துல கீழ இருந்தவங்க மேல வரது சகஜம் தானே?” என்றாள்.
மாலாவுக்கு அம்மாவை நினைச்சால் பிரமிப்பாக இருக்கும். இவங்களுக்கு மட்டும் படிக்க சான்ஸ் கிடைச்சிருந்தால் எங்கேயோ இருந்திருப்பாங்க. இவங்க ஸ்வப்னாவை வளர்த்ததால் அவளும் தெளிவாகவும் புத்திசாலியாகவும் இருக்கறதோட தனக்கு இந்த வீட்டில் கொடுக்கும் சுதந்திரத்தைத் தவறாகக் கையாள்வதில்லை. இதையே நான் என் பெண்ணின் குழந்தைக்கும் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.
“அம்மா, தோசை மேசையில வைக்கறேன், சாப்பிட வாங்க. சாப்பிட்டுட்டு மறக்காம பிரஷர் மாத்திரை போட்டுக்கோங்க” என்றாள். பாட்டியும், பேத்தியும் காலையில் சேர்ந்தே தான் சாப்பிடுவாங்க. ஸ்வப்னா தட்டில் முறுகல் தோசையும், வேதா தட்டில் மிருதுவான தோசையும் இருந்தது. சூடான வெங்காய சாம்பாரும் தோசையும் வாயில் கரைந்தது. எதிரே உட்கார்ந்து மொபைல் பார்த்துக் கொண்டே தோசையை நாசூக்காகச் சாப்பிடும் பேத்தியைப் பார்த்தாள். துறுதுறு விழிகளும், தீர்க்கமான மூக்கும், கிளிப் போட்டு படர்ந்திருந்த பட்டுப் போன்ற தலைமுடியும், பிங்க் சுடிதாரில் தேவதை போல் இருந்தாள். ஆனால் அவள், தான் அழகாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் இயல்பாய் இருப்பாள்.
“என்ன வேதா, என்னையே முறைச்சுப் பாக்கற?” என்று பாட்டியைக் கலாய்த்தாள். “இந்தக் கழுதையைக் கட்டிண்டு எவன் அவஸ்தைப்படப் போறானோன்னு தான் நினைச்சேன்” என்று பாட்டி. “உன்னைக் கட்டிண்டு எங்க தாத்தா அவஸ்தைப் படலையா? அது மாதிரி எனக்கும் ஒரு இளிச்சவாய் சிக்க மாட்டானா?” என்றாள் பேத்தி.
“அந்தக் காலத்துல உங்க தாத்தா படுத்தின பாட்டால் ஊரே என்னைப் பரிதாபமாகப் பார்க்கும். அது ஒரு காலம். இப்ப பசங்க பாடு தான் திண்டாட்டமாய்ப் போயிடுத்து. பொண்ணுங்க போடற கண்டிஷன்களால பசங்க கல்யாணம் பண்ணிக்கவே பயப்படறாங்க” என்று சொல்லிக் கொண்டே தட்டைக் கழுவி வைத்தாள்.
இதற்குள் சாப்பிட்டு முடிச்சு ரெடியான ஸ்வப்னா “பாட்டி, காலம் காலமாப் பொம்பிளைங்களை அடிமையா நடத்தி இப்ப தான் நிமிர ஆரம்பிச்சிருக்கோம். அதுனால இந்தக்காலப் பொண்ணுங்களைப் பார்த்தால் திமிர் மாதிரித் தோணும். இப்பவும் “பொண்ணுன்னா முன்னப்பின்ன தான் இருப்பா. நீ தான்பா அனுசரிச்சுப் போகணும்”னு யாராவது சொல்லுவாங்களா? ஒரு சிலர் தப்பா இருக்கறதால ஒட்டுமொத்தமாப் பொண்ணுங்களே சரியில்லைன்னு சொல்றது தப்பு தானே? என்ன மாலா, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற?” என்று அம்மாவையும் வம்பிழுத்தாள்.
“என்னடி, இன்னிக்கு காலேஜ் போக வேண்டாமா? வளவளன்னு பேசிட்டே இருக்க. வீட்டுல உதவி செய்யச் சொன்னா மட்டும் நேரமாச்சுன்னு ஓடுவ” என்றாள். “இன்னிக்கு காலேஜ் டே ஃபங்ஷன்ல “தற்காலப் பெண்கள்” என்ற தலைப்புல பேசப்போறேன். அதுனால் தான் நம்ம வீட்டுல இரண்டு தலைமுறைப் பெண்கள் இருக்கீங்களே, என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான்” என்றாள்.
“என்னோட தலைமுறைல “பொண்ணுன்னா வீட்டு ஆம்பிளைங்க என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக்கூடாது, பெத்தவங்களும் நீ பிறந்த வீட்டுப் பக்கமே வரலைன்னாலும் பரவாயில்லை, புகுந்த வீட்டுப்படி தாண்டக்கூடாது”ன்னு சொல்வாங்க எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. தப்பித் தவறி அப்படி சுயமா ஏதாவது செஞ்சோம்னா வீட்டுப்படி ஏத்த மாட்டாங்க. நாற்பது வயசுக்கப்புறம் புள்ளைங்க தலையெடுத்ததும் தான் பேசவே தைரியம் வந்தது” என்று வேதாப்பாடடி சொல்லும்போதே குரல் தழுதழுத்தது.
“உனக்கு உன் புருஷன், அதான் எங்கப்பா கிட்ட எதுத்துப் பேசத் தெரியலை. அவர் என்ன பண்ணினாலும் சகிச்சுக்கிட்டு இருந்த. அதுனால அவரும் உன்னைப் படுத்தினார். இப்ப நாங்கல்லாம் எங்களுக்குத் தேவையானதைக் கேட்டோ கேட்காமலோ வாங்கிக்கறோம். இப்ப கூட தம்பிக்கு நான் வெள்ளி விளக்கு வாங்கிக் கொடுக்கப் போறேன்னு தான் சொன்னேன்.அவர் கிட்ட உத்தரவு கேட்கலை. நீங்கல்லாம் வாயில்லாப் பூச்சிகள். அதுனால தான் அந்தக் கால ஆம்பளைங்க ஆட்டம் போட்டிருக்காங்க. இப்ப நாங்க சம உரிமை கேட்போம், குடுக்கலைன்னா நாங்களே எடுத்துப்போம். இது தான் எங்க தலைமுறை “ என்றாள் மாலா.
வேதா “நீ சொல்ற மாதிரி அப்ப நாங்க எதுத்துப் பேசினால் அவர் வீட்டை விட்டு வெளில அனுப்பிடுவாரோன்னு பயந்தோம். என்னை நம்பி மூணு ஜீவன்கள் அதான் நீ, உன் தங்கை, தம்பி மூணு பேருக்கும் சாப்பாடு, துணிமணி, படிப்பு எல்லாத்துக்கும் என்ன பண்ணுவோம்னு பயம் தான் காரணம். எங்க கிட்ட பொறந்த வீட்டுல போட்ட நகை தவிர சல்லிக் காசு கிடையாது. அதுவும் அவங்க கையில தான் இருக்கும். அதுனால எல்லாத்துக்கும் வீட்டு ஆம்பிளையை நம்பித் தான் இருப்போம். வாழாவெட்டி என்ற வார்த்தைக்கு பயந்தே வாயை மூடிண்டு இருந்தோம். இப்ப நீங்களும் நல்லாப் படிச்சுச் சம்பாதிக்கறீங்க, அவங்க போகச் சொல்லிட்டா என்ன செய்ய?ங்கற பயம் கிடையாது. அவங்களும் உங்களை மரியாதையா நடத்தறாங்க. படிப்பும், வருமானமும் இருந்தால் தான் சுயமா செயல்பட முடியும்” என்றாள்.
“வேதா, மாலா இரண்டு பேரும் பேச நல்ல டிப்ஸ் குடுத்துட்டீங்க. தேங்ஸ், பை” என்று ஸ்கூட்டியில் சர்ரெனக் கிளம்பினாள்.கொஞ்ச நேரத்தில் மாலாவும், பாஸ்கரும் கிளம்பிப் போனதும் வேதாப்பாட்டி கதவைத் தாழ்ப் போட்டுவிட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள். மாலா ‘என் தம்பி கிரஹப்பிரவேசத்துக்கு வெள்ளி விளக்கு வாங்கிக் கொடுக்கப் போறேன்’னு சொல்றா, மாப்பிள்ளையும் தலையாட்டறார். நான் எங்கண்ணா அறுபதாம் கல்யாணத்துக்கு குடுத்த சின்னக் காமாட்சி விளக்குக்குகாக எவ்வளவு அவமானப்பட்டேன்? அதை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்கறது.
வேதாவுக்குப் பத்து வயசாகும் போதே அம்மாவும் அப்பாவும் தவறிப் போனதால் அவளை வளர்த்ததே பெரிய அண்ணாவும், மன்னியும் தான். அண்ணாவுக்குக் குழந்தை இல்லை. அதுபற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே இவளுக்கு நினைவில்லை. இவளைத் தங்கள் குழந்தை போலத்தான் கொண்டாடினார்கள். அவளுக்குப் பதினேழு வயசாகும் போது உள்ளூரில் அரசாங்க உத்யோகத்தில் இருந்த சங்கரனை மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்து தன் சக்திக்கு மீறிச் செலவு செய்து இவளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
கல்யாணமாகி வந்தப்புறம் தான் சாது போலத் தெரிந்த சங்கரனின் வறட்டு கௌரவமும், பிடிவாதமும் புரிந்தது. கல்யாணம் முடியும் வரை அவளைத் தங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி என்று கொண்டாடியவர்கள் வீட்டிற்குள் அவளை வேலைக்காரியாகக் கூட மதிக்கவில்லை. அவர்களின் மற்றொரு முகம் பார்த்து வேதா அதிர்ந்து போனாள். இப்படிக் கூட மனிதர்கள் இருப்பார்களா என்று மலைத்துப் போனாள். இரட்டை வேடம் போடும் மாமியாரைச் சமாளிக்கத் தெரியாமல் திண்டாடினாள். உள்ளூரிலேயே பிறந்த வீடு இருந்தாலும் அங்கு போக அனுமதி கிடையாது. ஆனாலும் மாதந்தோறும் அண்ணாவும் மன்னியும் பட்சணங்களும், மளிகைச் சாமான்களும், பழங்களும் என்று கூடம்(ஹால்) நிறையக் கொண்டு வந்து நிரப்புவார்கள். “வேதா இல்லாமல் வீடே வெறிச்சுனு இருக்கு, இரண்டு நாள் கூட்டிண்டு போய் வைச்சுண்டு அனுப்பறோமே” என்று கெஞ்சுவார்கள்.
இவள் மாமியார் “வேதா இல்லாமல் எங்களால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. அவளுக்கும் என் புள்ளையைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்க முடியாது. நாங்களே அனுப்பினால் கூட அவள் உங்க கூட வரேன்னு சொல்ல மாட்டா. இந்த ஆத்தோட அப்படியே ஒன்னிப் போயிட்டா. அப்படித்தானே வேதா?” என்று கொஞ்சலாகக் கேட்பார். ஆனால் அவர் கண்களில் ‘நீ என்னை மறுத்துச் சொல்லிடுவயோ’ என்ற மிரட்டல் இருக்கும். வேதாவும் அவசரமாக “ஆமாம் மன்னி, நான் அப்புறமா வரேனே “ என்று சொல்லிவிட்டுத் தலை குனிவாள். மன்னி இவள் வெட்கப் படறா என்று நினைத்து சந்தோஷத்துடன் “எங்களுக்கு மனசு நிறைந்து போச்சும்மா. சீக்கிரம் புள்ளைத்தாய்ச்சியா பொறந்தாத்துக்கு சீராட வா” என்று தலையை வருடுவார். இவள் தலையை நிமிர்த்திப் பார்த்திருந்தால் இவள் கண்ணீரைக் கண்டு அதிர்ந்திருப்பார்.
வருடங்கள் உருண்டோடியது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் வேதாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பிரசவத்துக்கு அண்ணா வீட்டுக்குப் போகும் போதும் இவள் தன் நிலை பற்றிச் சொல்லி அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாமே என்று அதிகம் சொல்ல மாட்டாள். ஆனாலும் போகப் போக அவர்களுக்கே இவள் நிலை புரிய ஆரம்பித்தது. இவர்கள் வீட்டில் இளவரசி மாதிரி இருந்தவள் அங்கே நாய் போல் நடத்தப் படுவதைப் பார்த்ததும் நொந்து போனார்கள். ஒரு நாள் அண்ணா நேரில் வந்திருக்கும் போது சங்கரனிடம் “மாப்பிளை, நீங்க உள்ளூர்ல இருக்கீங்க, வேதாவை நன்னா வைச்சுப்பீங்க என்று நம்பித் தான் என் சக்திக்கு மீறி நீங்க கேக்கறதெல்லாம் கொடுத்துண்டிருக்கேன். அவளை நீங்க ஒரு மனுஷியாக் கூட நடத்தலைன்னு கேள்விப்பட்டேன். இதுவரை அவள் வாய் திறந்து உங்களைப் பத்திக் குறை சொன்னதேயில்லை. அவளும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிட்டா. இன்னொரு குழந்தையை வயத்துல சுமந்துண்டிருக்கற இந்த நேரத்துலயாவது அவளுக்குக் கொஞ்சம் ஓய்வு குடுக்கலாமே! அவள் பலகீனமாயிண்டே இருக்கா. அவளை நீங்க நன்னா வைச்சுண்டாத் தானே பொறக்கற குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும்?” என்று தன்மையாக எடுத்துச் சொன்னார்.
உடனே சங்கரன் எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி வெடிக்க ஆரம்பித்து விட்டார். “என் பெண்டாட்டியை எப்படி வைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும். குடும்பம்னா அப்படித் தான் பொம்பிளைங்களுக்கு வேலை இருக்கும். உங்களுக்குத் தான் குழந்தையே இல்லையே! அப்புறம் குடும்பத்தைப் பத்தி என்ன தெரியும்? இனிமேல் பிரசவத்துக்குக் கூட உங்காத்துக்கு வேதாவை அனுப்ப மாட்டோம். என் பெண்டாட்டியை நானே பாத்துக்கறேன்” என்றார் ரௌத்திமாக.
மாமியார் “இவர் வந்து இப்படிக் கேக்கறார்னா உன் பொண்டாட்டி அங்க போய் நம்மளைப் பத்தி வத்தி வைச்சிருப்பா. பெரிய பாசமலர் அண்ணன் வந்து கேள்வி கேக்க வந்துட்டார். இனிமேல் நீங்களும் எங்காத்துப் படியேற வேண்டாம், இங்கேருந்தும் யாரும் உங்காத்துப் படியேற மாட்டா” என்று தன்பங்குக்கு எண்ணெய் ஊற்றினார்.
முதலுக்கே மோசமாயிடுத்தேன்னு அண்ணா காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டார். முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட இரண்டு பேய்களும் இறங்கவேயில்லை. மூன்றாவதாகக் குட்டி அம்பி என்ற பிரகாஷைப் பிரசவித்த போது நரக வேதனை அனுபவித்து விட்டாள். அண்ணா எவ்வளவு கெஞ்சியும் அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. அப்படிக் கூட்டிண்டு போனால் இனிமேல் அவள் அங்கேயே தான் வாழ்நாள் முழுக்க இருக்கணும் என்று சொல்லி விட்டார்கள்.
இதெல்லாம் நடந்து நாலு வருஷம் கழிச்சு அண்ணாவின் சஷ்டியப்தபூர்த்தி வந்தது. அண்ணாவும் மன்னியும் நேராக வந்து வேதாவுக்கும் அவள் மாமியாருக்கும் பட்டுப்புடவை, சங்கரனுக்கு மல்லு வேஷ்டி,சில்க் ஜிப்பா, மாலா,கலாக்குப் பட்டுப் பாவாடை, குட்டி அம்பிக்கு டிராயர்,சட்டை , வெத்தலை பாக்கு,பழங்கள், பூ, பால்கோவா அத்துடன் தட்சணையாகப் புது பத்துரூபாய்க் கட்டு எல்லாம் வைத்துப் பத்திரிகை கொடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்த மாமியாரின் கண்கள் விரிந்தது. இவர்களுடன் சண்டை போட்டதால் நமக்குத் தானே நஷ்டம் என்று மனம் இடித்துரைத்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் “அன்னிக்குத் தான் பக்கத்து ஊர்ல எங்கண்ணன் பொண் கல்யாணத்துக்குப் பத்திரிகை குடுத்திருக்காங்க. அதுனால என்னால வர முடியாது” என்றார். சங்கரனுக்கு அந்தப் புதுப் பத்து ரூபாய்க் கட்டு கண்ணை உறுத்தியது. இப்போது இவர்களை முறைத்தால் இதையெல்லாம் திரும்ப எடுத்துண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வந்தது. அதனால் “எனக்கு Office Inspection இருக்கு,என்னால வர முடியாது,வேதாவையும் குழந்தைகளையும் அனுப்பி வைக்கறேன் “ என்று அமர்த்தலாகச் சொன்னார்.
அண்ணா, மன்னிக்கு சந்தோஷம். எப்படியோ நாத்தனார் முடிச்சு போட வேதா வந்துடுவாள் என்று உள்ளுக்குள் சந்தோஷம். “எல்லாரும் வந்து நடத்திக் குடுத்தால் சந்தோஷமா இருக்கும்” என்று கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினார்கள்.
அவர்கள் அந்தப் பக்கம் போனதும் அம்மாவும், புள்ளையும் அவசரமாய்த் துணிகளின் தரத்தை ஆராய்ந்தார்கள். பத்து ரூபாய்க் கட்டை சங்கரன் இரையைப் பார்த்த கழுகு போல் படக்கென்று எடுத்துக் கொண்டார். உள்ளுக்குள் திருப்திப்பட்டாலும் முகத்தில் அதைக் காட்டாமல் வழக்கம் போல் உச்சு கொட்டினார்கள்.
அந்த நாளும் வந்தது. மாலாவும், கலாவும் புது டிரஸ்ஸுடன் தேர்வு நேரம் என்பதால் பள்ளிக்கூடம் கிளம்பி விட்டார்கள். சங்கரனும் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே அலுவலகம் கிளம்பி விட்டான். மாமியார் புதுப் பட்டுப் புடவையுடன் பக்கத்து ஊர்க் கல்யாணம் என்று எங்கோ கிளம்பிப் போய் விட்டார்.
வேதா, அண்ணா குடுத்த பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு குட்டி அம்பிக்கும் புது டிரஸ் போட்டு விட்டு உற்சாகமாகக் கிளம்பி விட்டாள். அவள் மனசெல்லாம் நிறைந்திருந்தது. “எங்கண்ணா சஷ்டியப்த பூர்த்திக்குப் போகப் போறேன். நாலு வருஷம் கழிச்சு உள்ளூரில் இருக்கும் பிறந்தாத்துக்குப் போகப் போறேன்” என்று குதிக்கணும் போல் ஆசையாய் இருந்தது. கதவைப் பூட்டப் போகும் போது தான் ‘அண்ணாவுக்குக் கொடுக்க எதுவுமே இல்லையே’ என்பது உறைத்தது. உள்ளே போய் பீரோவைத் திறந்தாள். இவளோட நகை, வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே பீரோ லாக்கரில் தானிருக்கும். ஆனால் சாவி மாமியாரிடம் இருக்கும். பீரோவைக் குடைந்ததில் ஒரு நாலணா, எட்டணாவைத் தவிர எதுவுமே காணோம். கடைசியில் ஓரமாக இவள் அண்ணா ஐந்து வருஷம் முன்னாடி ஒரு திருக்கார்த்திகையின் போது குடுத்த சின்ன வெள்ளிக் காமாட்சி விளக்கு இருந்தது. நல்லவேளை, இதுவாவது இருக்கே என்று பெருமூச்சு வந்தது. கொஞ்சம் கறுத்துப் போயிருந்தது. அவசரமாய் விபூதி போட்டுப் பளபளப்பாக்கினாள். அதை ஒரு தாளில் சுத்தி மஞ்சப்பையில் வைத்துக்கொண்டு குட்டி அம்பியுடன் கிளம்பினாள். குழந்தை கூட அம்மா இன்னிக்கு இவ்வளவு அழகா, சந்தோஷமா இருக்காளே என்று அதிசயமாப் பார்த்தது. தெருவில் எதிரே வருபவர்கள் கூட அவளை விசித்திரமாய்ப் பார்ப்பது போல தோன்றியது.
இவள் அண்ணா ஆத்துக்குள் நுழையும் போதே “வேதா வந்துட்டா”ன்னு பத்து குரல்கள் எதிரொலித்தது கேட்டு இவளுக்கு வெட்கமும், சந்தோஷமும் தொற்றிக் கொண்டது. மணையில் அமர்ந்திருந்த அண்ணா, மன்னி முகத்தில் பூரிப்பு. சின்னப்பாட்டி இப்ப தான் குட்டி அம்பியைப் பாக்கறா. அவனை ஆசையாய் மடியில் வைத்து அவன் வாயில் ஒரு லட்டைத் திணித்தாள். வேதா வந்திருந்தவா எல்லாரையும் ஓடியோடி உபசரித்து பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தாள். அண்ணா, மன்னிக்குத் தன்னால் முடிந்த நன்றிக்கடனைச் செலுத்த இது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தாள்.
கெட்டிமேளம் முழங்க மன்னியின் கழுத்தில் அண்ணாவுடன் சேர்ந்து திருமாங்கல்யம் முடிச்சிட்டாள். அவளையறியாமல் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அண்ணாவின் வாய் தான் மந்திரம் சொன்னதேயொழிய பட்டுப்புடவையில் சரக்சரக்கென அங்குமிங்கும் ஓடி ஓடி வேலை செய்யும் தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் பின்னாலேயே வால் போல் ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டி அம்பியை ரசித்துக் கொண்டிருந்தார். மன்னி தன் வளர்ப்புப் பெண்ணைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வேதா மஞ்சப்பையில் சுத்தி வைத்திருந்த காமாட்சி விளக்கை வெத்திலை பாக்குத் தாம்பாளத்தில் வைத்து அண்ணா, மன்னி கையில் கொடுத்து விட்டு நமஸ்காரம் பண்ணினாள். அவர்கள் முகத்தில் பெருமிதத்தோடு அதை வாங்கிக் கொண்டார்கள். சங்கரன் உடன் வராதது உறுத்தலாக இருந்தாலும் அவன் வந்திருந்தால் இதற்குள் ஏதாவது சொல்லி மனசை நோகடித்திருப்பான் என்று சமாதானப்பட்டுக் கொண்டாள். எல்லாரும் சாப்பிட்டுட்டுக் கிளம்ப ஆரம்பித்தவுடன் இவளும் புறப்பட ஆயத்தமானாள். ஒரு பெரிய காரியரில் புளியோதரை, சக்கரப்பொங்கல், அப்பளம், வடை, பாயசம், அவியல், பட்சணங்கள் எல்லாம் வைத்து மன்னி அவள் கையில் கொண்டுக் கொடுத்தாள். குட்டி அம்பி கையில் ஐம்பது ரூபாய் கொடுத்தாள். சின்னப் பாட்டி தான் “வேதா, உன்னோட ஆம்படையானும், மாமியாரும் உன்னை ரொம்பப் படுத்தறாளாமே! உங்கண்ணா புலம்பிண்டே இருக்கான்.நல்லவேளை, உன்னையாவது அனுப்பியிருக்காளே!” என்று சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி, குடும்பம்னா முன்னப்பின்ன தான் இருக்கும். நான் நன்னா இருக்கேன், அண்ணாவைக் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்கோ” என்றாள். அதற்குள் அவள் மன்னி அவள் கொடுத்த காமாட்சி விளக்கை சன்னதியில் ஏற்றி வைத்து விட்டு “ஏன்னா, உங்க தங்கை குடுத்த விளக்கை நீங்க சொன்னபடி ஏத்தியாச்சு, அந்த தீப ஒளியில அம்பாள் எப்படி ஜொலிக்கறா பாருங்கோ” என்றாள். அம்பாள் முகம் ஜொலித்ததோ என்னவோ, வேதாவின் முகம் ஜொலித்தது. ‘எங்கண்ணா குடுத்ததேன்னாலும் நானும் என் பங்குக்கு அணில் மாதிரி ஏதோ செய்திருக்கேன் ‘ என்று திருப்தியாகக் கிளம்பினாள்.
பெரிய காரியர் ஒரு கையிலும், குட்டி அம்பியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மனம் முழுக்கத் தளும்பிய மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள். பட்டுப் புடவையை அவிழ்க்க மனமே வரவில்லை. குழந்தைகள் வந்ததும் கொண்டு வந்ததையெல்லாம் தட்டில் வைத்துச் சாப்பிடக் கொடுத்தாள். குழந்தைகள் சந்தோஷமாக வயிறு முட்டச் சாப்பிட்டார்கள். சங்கரனும், மாமியாரும் வந்து விட்டார்கள். மாமியார் ஏதோ எடுக்க பீரோவைத் திறந்தார். வேதாவிடம் “பீரோவைத் திறந்தயா? எல்லாம் கலைஞ்சிருக்கு “ என்றாள். “ஆமாம் அம்மா, நீங்க இரண்டு பேரும் கிளம்பினப்புறம் தான் அண்ணாவுக்குக் கொடுக்க ஒண்ணுமே இல்லையேன்னு ஞாபகம் வந்தது. அவர் நம்ம குடும்பத்துக்கு அவ்வளவு வாங்கிண்டு வந்திருக்கார். அது போகப் பணம் வேற நிறைய குடுத்திருக்கார். அவருக்கு நல்லதாச் செய்யணுமேன்னு பீரோவைத் தேடினேன். லாக்கர் பூட்டியிருந்தது. ஒரு சின்னக் காமாட்சி விளக்கு, அதுவும் அவர் கார்த்திகைக்குக் குடுத்தது தான் இருந்தது, அதைக் கொண்டு போய்க் குடுத்து நமஸ்காரம் பண்ணினேன்” என்றாள் வெகுளியாக.
அதைக் கேட்ட மாமியார் பத்ரகாளியானார். “யாரைக் கேட்டுண்டு எடுத்துண்டு போன? சங்கரா, உன் பொண்டாட்டி அவ பொறந்தாத்துக்கு நம்மைக் கேக்காமலேயே வெள்ளி விளக்கைக் கொண்டுக் குடுத்துட்டு வந்திருக்கா. லாக்கர் சாவியை நான் எடுத்துண்டு போகலைன்னா இருக்கறதெல்லாத்தையும் அள்ளிக் குடுத்திருப்பா போல. போனாப் போறதுன்னு அவ அண்ணன் வந்து கெஞ்சிக் கூப்பிட்டாரேன்னு போகச் சொன்னா, வீட்டையே காலி பண்ணிடுவா போல” என்று ஆங்காரமாகக் கத்தினாள். கடைசி வாய் சக்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு ஏப்பம் விட்ட சங்கரன் சட்டென எழுந்து பட்டென்று எச்சில் கையாலேயே அவள் கன்னத்தில் அறைந்தான். “என்னடி, உங்கண்ணனுக்குத் தான் புள்ளை குட்டியே கிடையாதே, அப்புறம் என்ன ……. க்கு வெள்ளி விளக்கை அவனுக்குக் கொண்டுக் குடுத்த? இப்பவே போய் அதைத் திரும்ப வாங்கிண்டு வா. விட்டா வீட்டையே தூக்கி அந்தக் கிறுக்கனுக்குக் குடுத்துடுவ போல” என்று கத்தினான்.
வேதாவுக்கு பகீரென்றது. அவர் கொடுத்ததில் பத்தில் ஒரு பங்கு மதிப்பு கூட இவள் கொடுத்த விளக்கோட விலை இருக்காது. அது கூட அவர் இவளுக்குக் கொடுத்தது தான். பணக்கட்டு, பட்டுப்புடவை எல்லாம் கொடுக்கும் போது அவர் கிறுக்கனாகத் தெரியவில்லை, இவள் கொண்டுக் கொடுத்ததை அவர் வாங்கும்போது மட்டும் கிறுக்கனாகி விடுவாரா? சபையில் வைத்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் குடுத்ததைப் போய் வாங்கச் சொல்றாரே, இவரெல்லாம் மனுஷன் தானா? என்ற வெறுப்பு பரவியது.
“அந்த விளக்கை சுவாமி முன்னாடி ஏத்தி வைச்சிருக்கா. அதைப் போய் எப்படித் திருப்பி வாங்க முடியும்?” என்று பலவீனமான குரலில் கேட்டாள்.
“எவ்வளவு சாமர்த்தியம் பாத்தியா? அதை உடனே ஏத்தி வைச்சுட்டாளா? எனக்குத் தெரியாது, அந்த விளக்கைத் திரும்ப வாங்கிண்டு வந்தா இந்த வீட்டுக்குள்ள ஏத்துவோம், இல்லைன்னா நீயும், உன் குழந்தைகளும் அங்கேயே போய் இருந்துக்கோங்க” என்று அவளைத் தரதரவெனப் பிடித்து வெளியே தள்ளினான். அவள் பின்னாலேயே அழுது கொண்டு வந்த குழந்தைகளையும் வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினான்.
குழந்தைகள் கதறினார்கள். பக்கத்து வீடுகளிலெல்லாம் எட்டிப் பார்த்தார்கள். வேதாவுக்கு அவமானம் பிடுங்கியது. ஆசையாய் அண்ணா வீட்டில் ஏற்றி வைத்த விளக்கைத் திருப்பித் தான்னு கேட்பது எவ்வளவு பெரிய அவமானம்? அந்த விளக்கொளியில் மூக்குத்தி தகதகக்க, பிரகாசமாய் ஒளிர்ந்த மன்னியின் முகம் நினைவுக்கு வந்தது. அவா இரண்டு பேருக்கும் எவ்வளவு நல்ல மனசு? கடனை வாங்கியாவது இந்தக் குடும்பத்துக்குக் கொண்டுக் கொட்டுவாளே! அவா கிட்டப் போய் நான் கொடுத்ததைத் திருப்பித் தாங்கோன்னு கேக்கறதை விட உயிரை விட்டுடலாம். சே, இது என்ன பைத்தியம் மாதிரி யோசிக்கறேன், அப்புறம் இந்தக் குழந்தைகள் கதி என்னவாகும்? இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தும் கதவைத் திறக்கவில்லை. குழந்தைகள் கதவைத் தட்டி அலுத்துப் போய் விட்டார்கள். இருட்டில் வாசல் திண்ணையில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருப்பது அவஸ்தையாய் இருந்தது. தெருவில் போறவங்க, வரவங்களைப் பார்க்கும் போது இது என்ன நாயை விடக் கேவலமான வாழ்க்கை என்ற விரக்தி வந்தது. இரவு முழுக்கத் திறக்கலைன்னா குழந்தைகளோட இப்படியே உட்கார்ந்திருக்க முடியுமா என்ற பயத்தில் உடம்பு நடுங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவள் மாமியார் வாய்க்கு பயந்து ஏதும் பேசாமல் வேடிக்கை பார்த்தார்கள். தீவிர யோசனைக்குப் பின் வேதா ஒரு முடிவுக்கு வந்தாள். பட்டுப் புடவையை அவிழ்த்து விட்டு வெளியே கொடியில் தொங்கிய பழைய புடவையை மறைவில் போய்க் கட்டிக் கொண்டாள். குழந்தைகளோட புது டிரஸ்ஸையெல்லாம் கழற்றி கொடியிலிருந்த பழைய டிரஸ்ஸைப் போட்டுக்க வைத்தாள். புதுசு எல்லாத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டினாள். குழந்தைகளுடன் விறுவிறுவென அண்ணா வீட்டுக்குப் போனாள். அந்தத் துணி மூட்டையை அண்ணாவின் காலடியில் வைத்துப் பட்டென்று காலில் விழுந்து கதறினாள். அண்ணாவும் மன்னியும் பதறிப் போனார்கள். சின்னப்பாட்டி “என்னடி ஆச்சு?” என்று கத்தினாள். அழுகையோட திக்கித் திணறி நடந்ததைச் சொன்னாள். “அட பைத்தியமே, இதுக்குத் தான் இவ்வளவு அழுகையா? அதுக்கு ஏன் உன்னோட புடவை, குழந்தைகளோட டிரஸ் எல்லாத்தையும் திரும்பக் குடுக்கற?எப்படின்னாலும் என்னோடதெல்லாம் உனக்குத் தான் வந்து சேரப் போறது. உன்னோட ஆசைக்குக் குடுத்த. நீ வந்தது தான் எங்களுக்கு நிறைவு, அதுனால இப்பவே அதைத் தரேன், உங்க மாமியார் கையில கொண்டுக் குடு. குழந்தைகளைப் பாரு, எப்படிக் கலங்கிப் போய் நிக்கறதுகள்னு” சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டார். இதற்குள் மன்னி அந்த விளக்கைத் துடைத்து எடுத்துக் கொண்டு வந்து இவள் கையில் கொடுத்தாள்.
“மன்னி, தயவு செய்து என்னைப் புரிஞ்சுக்கோங்க. இந்த புடவை, டிரஸ்ஸையெல்லாம் எடுத்துண்டு போனா, எனக்கு மனசு உறுத்திண்டேயிருக்கும். அதுனால என்னை வற்புறுத்தாதீங்க “ என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு அந்தக் குட்டிக் காமாட்சி விளக்குடன் குழந்தைகளோடு கிளம்பினாள். எட்டு வயசு மாலாவுக்கு ஓரளவு புரிந்தது, ஆனால் அவளுக்கும் அம்மாவின் கண்ணீரைத் துடைப்பதைத் தவிர எதுவும் செய்யத் தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. சங்கரன் மற்றும் மாமியார் முகத்தில் எதையோ சாதித்த கர்வம் தெரிந்தது.
ஆனால் வேதா அன்றிலிருந்து அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள். இயந்திரம் போல் தன் வேலைகளைச் செய்வாள். இந்த அவமானம் அவள் மனதில் வடுவாகப் பதிந்து விட்டது. இவர்களை நான் பழி வாங்கப் போவதில்லை. ஆனால் இதற்குப் பின் அண்ணா வீட்டிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அண்ணாவின் காலத்துக்கப்புறம் கிடைத்த பணத்தைக் கூட அப்படியே ஒரு அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டாள். அதற்குள் குழந்தைகள் வளர்ந்து அவளுக்கு அரணாக நின்றார்கள்.
வாசல் மணி ஒலித்தது. அவர்கள் வீட்டு துணை தேவதை ரேகா. வங்கி வேலைக்குச் செல்வது போல் நீட்டாக உடை அணிந்து சிரித்த முகத்துடன் வருவாள். குடிகாரப் புருஷன் இரண்டு குழந்தைகளை இவளிடம் விட்டு விட்டு ஓடிப் போன போது கூடக் கலங்காமல் நின்றவள். வேதா அம்மாளுக்கு இந்தப் பெண்ணுக்கு உள்ள துணிச்சல் அன்று எனக்கு இல்லாமல் போனதே என்ற நினைப்பில் பெருமூச்சு வந்தது. சில அவமானங்கள் சாகும் வரை மனதின் அடியில் கசடு போலத் தங்கி விடும். எந்தக் குழந்தைகளுக்காக அவமானங்களைப் பொறுத்துக் கொண்டாளோ, அந்தக் குழந்தைகள் இப்போது அவளைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நிறைவு போதுமே! இதழ்கள் தானாக மலர்ந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன